Sunday, April 28, 2019

தேர்தல் முடிவுக்குமுன்னரே தோல்வியை ஒப்புக்கொன்ட எடப்பாடி


தமிழகம், புதுச்சேரி ஆகிய இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதும் நமதே, தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதினெட்டும் நமதே என முழங்கிய எடப்பாடி தகுதி நீக்க அஸ்திரத்தைக் கையிலெடுத்து தனது பதவியைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார். ஸ்டாலின், எடப்பாடி ஆகியோரின் பார்வையில் இந்திய நாடாளுமன்றத் தேர்தலைவிட தமிழக சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவு மிக முக்கியமானது. வேலூர் தொகுதி நாடாளுமன்றத் தேர்தல் இடை நிறுத்தப்பட்டிருப்பதால் 39 தொகுதிகளில் மட்டும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. தமிழக சட்ட சபயில் எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை இல்லை. முதலமைச்சர் எடப்பாடி பன்னீர்ச்செல்வத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய தினகரனின் ஆதரவாளர்களான 18 சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி நீக்கம்  செய்ததால் தனது முதல்வர் கதிரையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறார் எடப்பாடி. இந்த  நிலையில் தமிழ்கத்தில் காலியாஉள்ள மேலும் நான்கு தொகுதிகளுக்கு மே மாதம் 18 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் 20 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தைப் பெற்றுவிடும். 20 தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறுவது சாத்தியமில்லை.  எட்டுத் தொகுதிகளில் வெற்றி பெற்றால் எடப்பாடியின் அரசு தப்பிப்பிழைக்கும். இல்லையேல் பெரும்பான்மை இல்லாததால் எடப்பாடியின் தலைமையிலான அரசு கவிழ்ந்துவிடும். எட்டுத் தொகுதிகளில் கூட வெற்றி பெறமுடியாது என்பதை எடப்பாடி உணர்ந்துள்ளதால் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகையைக்  குறைத்து பெரும்பான்மை பலத்தை காட்ட நினைக்கிறார்.

கட்சிக்கு விரோதமாகச் செயற்படும்  உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்வதற்கு சட்டத்தில் இடமுண்டு. சட்டம் ஒரு இருட்டறை என்ற அண்ணாவின் வாசகத்தை தனக்குச் சாதகமாக மற்றுகிறார் எடப்பாடி. இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விருத்தாசல கலைச்செல்வம், அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு ஆகியமூவரும் கடந்த ஒருவருடமாக எடப்பாடியின் தலைமையிலான  அரசை விமர்சித்து தினகரனைப் போற்றி புகழ்ந்து வருகிறார்கள். இதுவரை காலமும் மெளனமாகப் பார்த்துக்கொண்டிருந்த எடப்பாடி பன்னீர்ச்செல்வம், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். எடப்பாடியின் உத்தரவுக்கு அமைய செயற்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கொறடா ராஜேந்திரன்,  அவர்கள் மூவரையும் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
கலைச்செல்வம் ரத்தினசபாபதி,பிரபு ஆகிய மூவரும் கட்சிக்கு எதிராகச் செயற்பட்ட புகைப்படம் வீடியோ என்பன ஆதாரமாக சபாநாயகரிடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவர்கள் மூவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் ஆறு சட்ட சபைத் தொகுதிகளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றால் ஆட்சியைத் தக்க வைக்கலாம் என எடப்பாடி கணக்குப் போட்டுள்ளார். இதேவேளை தமீம் அன்சாரி, கருணாஸ் ஆகியோரையும் பலிக்கடாவாக்கும் எண்ணம் எடப்பாடிக்கு இருக்கிறது.

தினகரனைச் சந்தித்து மலர்க்கொத்துக் கொடுத்து வாழ்த்தியதால் கலைச்செல்வம்,ரத்தினசபாபதி,பிரபு ஆகிய மூவரும் பதவியை இழக்கும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளனர். இரட்டை இலைச் சின்னத்தில் வெற்றி பெற்ற தமீம் அன்சாரி, நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின் போது ராகுல் காந்தியுடன் மேடையில் தோன்றியதை இப்போதைக்கு எடப்பாடி பெரிதுபடுத்தவில்லை. விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டால், தாம் தவரு எதுவும் செய்யவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் தான். தப்பு செய்தால் மன்னிக்கும் படி அந்த மூவரும் பதிலளிக்க வாய்ப்பு உள்ளது. அந்தப்பதிலுக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கப்போகும் நடவடிக்கைதான் எடப்பாடியின் கரத்தைத் பலப்படுத்தும் காரணியாகப்போகிறது.

கலைச்செல்வம்,ரத்தினசபாபதி,பிரபு ஆகிய மூவருக்கும் எதிராக சபாநாயகர் நடவடிக்கி எடுத்தால், சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லாப்பிரேரணையைக் கொண்டு வரப்போவதாக ஸ்டாலின் எச்சரித்துள்ளார். சபாநாயகருக்கு எதிராகக்கொண்டுவரப்படும் நம்பிக்கை இல்லாப் பிரேரணை வெற்றியளிக்கப்போவதில்லை. ஆனால், அப்படி ஒரு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டால், சில சட்டநுணுக்கங்கள் விவாதத்தின் போதுவெளிப்படும். கலைச்செல்வம்,ரத்தினசபாபதி,பிரபு ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், அவர்கள்  நீதிமன்றத்தை நாட மாட்டார்கள். தேர்தலைச் சந்திப்பார்கள் என தினகரனின் ஆதரவாளரான வேலுமணி தெரிவித்துள்ளார். தின்கரனுக்கும் அந்த மூவருக்கும் இடையிலான தொடர்பை இது வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

சசிகலாவின் காலில் விழுந்து பதவியைப் பெற்ற எடப்பாடி பழனிச்சாமி, தனது பதவியைக் காப்பாற்றுவதற்காக சசிகலாவை கட்சியில் இருந்து வெளியேற்றினார். தினகரனின் ஆதரவாளர்களை தகுதி நீக்கம் செய்து பதவியைத் தக்கவைத்த எடப்பாடிக்கு இது புதியதல்ல. தமிழக சட்ட சபையில் தடை செய்யப்பட்ட குட்காவைக் காண்பித்த 21 திராவிட முன்னேற்றக் கழக சட்ட சபை உறுப்பினர்களின் மீது உள்ள உருமை மீறல் பிரச்சினையைக் கையில் எடுப்பதற்கும் எடப்பாடி திட்டமிட்டுள்ளார். ஸ்டாலின் உட்பட 21 திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களின் மீது உரிமை மிறல் விசாரணை நடத்தக் கூடாது என நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்தத் தடையை நீக்க முடியுமா என ஆராயும் படி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால் எடப்பாடிக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை. மாறக காங்கிரஸ் ஆட்சிபீடம் ஏறினால் எடப்பாடியின் பாடு திண்டாட்டம். அதனால் முதலமைச்சர் பதவியை காபாற்ற சகல அஸ்திரங்களையும் பிரயோகிக்க முயற்சி செய்கிறார்.

No comments: