Wednesday, July 31, 2019

குமாரசாமி வெளியே எடியூரப்பா உள்ளே


கர்நாடக மாநில அரசியல் குழப்பத்துக்கு ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் முடிவுரை எழுதப்பட்டது. நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மூலம் முதல்வர் கதிரையில் இருந்த குமாரசாமி வெளியேற்றப்பட்டு எடுயூரப்பா, முதலமைச்சராக்கப்பட்டார். 1956 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் உதயமாகி 25 ஆவது முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றுள்ளார். இதுவரை மூன்று முறை முதலமைச்சராகப் பதவி ஏற்ற  எடியூரப்பா முழுமையாக ஐந்து வருடம் பதவியில் இருக்கவில்லை. நிஜலிங்கப்பா [62- 68] டி.தேவராஜா [72-77],  சித்தராமையா [13 -18] ஆகிய மூவர் மட்டுமே கர்நாடகத்தில் முழுமையாக ஐந்து வருடங்கள் பதவி வகித்தனர். அவர்கள் மூவரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

கர்நாடக  சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி 105 தொகுதிகளிலும், கங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா கட்சி 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. அறுதிப் பெரும்பான்மைக்கு 113 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். பாரதீய ஜனதாக் கட்சியின் தலைமை வேட்பாளரான எடியூரப்பா ஆட்சியமைக உரிமைகோரினார். ஆளுநர் இரண்டு வாரகால அவகாசம் கொடுத்தார். குதிர  பேரத்தைத் தடுப்பதற்காக காங்கிரஸும், மதசார்பற்ற ஜனதா தளமும் உச்ச நீதிமன்றத்தை நாடின. உச்ச நீதிமன்றம் இரண்டுநாள் அவகாசம் கொடுத்தது. கண்ணீருடன் இராஜினாமாச் செய்த எடியூரப்பா, ஒரு வருடத்தில் ஆட்சியை கவிழ்ப்பதாக சபதம் செய்தார். 14 மாதங்களில்  அரசியல்சதி காரணமாக குமாரசாமி வெளியேற்றபட்டு எடியூரப்பா முதலமைச்சராகப் பதவி ஏற்றார்.

குமாரசாமியின் கட்சியைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும், குமாரசாமிக்கு ஆதரவு வழங்கிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 சட்ட  உறுப்பினர்களும்  இராஜினாமாச் செய்ததால் குமாரசாமியின் முதலவர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது.  குமாரசாமிக்கு ஆதரவு வழங்கிய இரண்டு சுயேட்சைகளும் ஆதர்வை வாபஸ் பெற்றனர். குமாரசாமி, பெரும்பான்மையை இழந்ததால் அவர் பெரும்பானமையை நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இராஜினாமாச் செய்தவர்கள் அனைவரும் மஹாராஷ்டிராவில் பாரதீய ஜனதாக் கட்சியின் அமைச்சருக்குச் சொந்தமான சொகுசு விடுதியில் தங்கினர். மந்தையில் இருந்து பிரிந்து சென்றவர்களை சமாதானப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான டி.கே.சிவக்குமார் மேற்கொண்ட பகீரத முயற்சிகள் அனைத்தும்  தோல்வியில் முடிந்தன. பன்னிரண்டு நாட்கள் இழுபறிப்பட்டு குமாரசாமியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

குமாரசாமியின் பதவியை பாரதீய ஜனதாக் கட்சி இரண்டாவது  முறையாகக்  கவிழ்த்துள்ளது. 2006 ஆம் ஆண்டு  பாரதீய ஜனதாக் கட்சியின் ஆதரவுடன் குமாரசாமி கர்நாடக முதலமைச்சரானார். இரண்டரை வருடங்களில் முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்ற நிபந்தனையை குமாரசாமி மீறியதால்,  பாரதீய ஜனதா ஆதரவை விலக்கியதால்  அவர் பதவி இழந்தார். குமாரசாமியின் தகப்பன் தேவகவுடாவும் முழுமையாக ஐந்து ஆண்டு காலம் ஆட்சி செய்யவில்லை. 1994 ஆம் ஆண்டு தேவகவுடா, கர்நாடகத்தின் முதல்வரானார். 1996 ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணியின் பிரதமராக தேவகவுடா தெரிவு செய்யப்பட்டதால் இராஜினாமா செய்தார். 11 மாதங்களில் தேவகவுடா பிரதமர் பதவியில் இருந்து விலக்கப்பட்டார்.

இராஜினாமாச் செய்த  15 சட்ட மன்ற உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்ய வலியுருத்தப்பட்ட போதும் சபாநாயகர் ரமேஸ்குமார் அதற்கு மறுத்துவிட்டார். தமிழகத்தின் ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக சபாநாயகர் தனபால் போல் கர்நாடக சபாநாயகர் நடந்துகொள்ளவில்லை. அதன் காரணமாக குமாரசாமி இராஜினாமாச் செய்யும் நிலைஏற்பட்டது. சபாநாயகர் ரமேஸ்குமாஎ. டி.கே.சிவக்குமார் ஆகியோர் கர்நாடக சட்ட சபையின் மாண்பைக் காப்பாற்ற இறுதிவரை போராடினர்.

கர்நாடகத்தில் 11 மாதங்களில் நான்காவது முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றுள்ளார். நான்காவது முறையாக முதலமைச்சராக எடியூரப்பா பதவி ஏற்றுள்ளார். இதுவரை முழுமையாக ஐந்து வருடங்கள் எடியூரப்பா பதவி வகிக்கவில்லை. இம்முறையும் ஐந்து வருடங்கள் அவர் பதவி வகிக்க முடியாது. விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்ததால் கர்நாடகத்தில் எடியூரப்பாவின் செல்வாக்கு உயர்ந்தது. பின்னர் விவசாயிகளுக்கு எதிராக அவரது அரசியல் நகர்ந்தது. முதலில் வெரும் ஏழு நாட்கலில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பதவி  விலகினார்.  2011 ஆம் ஆண்டு எடியூரப்பா முதலமைச்சராகப் பதவி வகித்தபோது ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு பதவியில் இருந்து தூக்கு எறியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பெங்கலூரில் தமிழர்களுக்கு  எதிராக வன்செயல் நடந்தபோதெல்லாம் தமிழர்களுக்காகக் குரல்கொடுத்தவர் எடியூரப்பா.

பாரதீய ஜனதாக் கட்சியில் இருந்து 2012 ஆம் ஆண்டு விலகிய எடியூரப்பா, கர்நாடக ஜனதாக் கட்சிஎனும் பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்தார். 2014 ஆம் ஆண்டு மீண்டும் பாரதீய ஜனதாக் கட்சியில் இணைந்தார். 2013 ஆம் ஆண்டுத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி 105 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் ஒரு வாரத்தில் எடியூரப்பா இராஜினாமாச் செய்தார். எடியூரப்பா இல்லமல் கர்நாடகத்தில் கால் பதிக்க முடியாது என்பதை உணர்ந்த பாரதீய ஜனதாவின் தலைவர்கள், அவரை அனுசரித்துப் போக முடிவு எடுத்துள்ளனர்.

முத்த தலைவர்களுக்கு பாரதீய ஜனதா ஓய்வு கொடுத்துள்ளது. 75 வயதான அத்வானி, முரளி  மனோகர் ஜோசி போன்றவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். 76 வயதான எடப்பாடியை கர்நாடகத்தின் முதல்வராக்கியுள்ளது  பாரதீய ஜனதாக் கட்சி. அறுதிப் பெரும்பான்மை  இல்லாத மாநிலங்களில் இராஜினாமாச் செய்து ஆட்சியைக் கவிழ்க்கும் புதிய பாணியை பாரதீய ஜனதா ஆரம்பித்துள்ளது. இதனால் காங்கிரஸ் அச்சமடைந்துள்ளது. இராஜினாமாச் செய்தவர்களுக்குக்  கொடுப்பட்ட வாக்குறுதிபற்றிய விபரம் எதுவும் வெளியாகவில்லை.

கர்நாடகத்தில்  இராஜினாமாச் செய்த 15 சட்ட மன்ற உறுப்பினர்களும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். இல்லையேல் எடியூரப்பாவின் பதவி பறிபோகும். மக்கள் தீர்ப்புத்தான் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாகும்.

No comments: