Thursday, March 25, 2021

சசிகலாவின் முன்னால் தலை குனிந்த பன்னீரின் தர்மயுத்தம்


 ஜெயலலிதா மரணமான பின்னர் அன்றைய முதலமைச்சரான ஓ.பன்னீர்ச்செல்வ‌ம் சசிகலாவுக்கு எதிராக  ஆரம்பித்த தர்மயுத்தம் இன்று சசிகலாவுக்கு முன்னால் மண்டியிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய ஓ.பன்னீர்ச்செல்வத்தை முதலமைச்சர் பதவியில் இருந்து அகற்றி விட்டு சசிகலாவை முதலமைச்சராக்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டசபை உறுப்பினர்கள் முயற்சி செய்தனர். வெறுத்துப்போன பன்னீர்ச்செல்வம் முதலமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்து விட்டு ஜெயலலிதாவின் சமாதியில் முக்கால் மணி நேரம் தியானம் செய்துவிட்டு சசிகலாவுக்கு எதிரான தர்ம யுத்தத்தை ஆரம்பித்தார்.  

  சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியான சசிகலா சிறைக்குச் செல்லும் முன்னர் எடப்பாடி பன்னீர்ச்செல்வத்தை முதலமைச்சராக்கினார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும் 11 சட்டசபை உறுப்பினர்களும் பன்னீரின் பின்னால் சென்றனர்.

முதல்வர் பதவியை முழுமையாக அனுபவிப்பதற்கு பன்னீரின் உதவி தேவை என்பதை உணர்ந்த எடப்பாடி சமாதானமானார். சசிகலாவையும் அவரது மன்னார்குடி உறவுகளையும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றிய எடப்பாடி முதலமைச்சர் பதவியை முழுமையாக அனுபவிக்கத் தொடங்கினார்.

பன்னீரைத் திருப்திப்படுத்துவதற்காக துணை முதலமைச்சர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. ப‌ன்னீர் ஒருங்கிணைப்பாளராகவும் எடப்பாடி துணை ஒருங்கிணைப்பாளராகவும் நியமனனம் செய்யப்பட்டனர். பொருளாளர் பதவி இல்லாமல் செய்யப்பட்டதால் சசிகலாவின் பதவி பறிக்கப்பட்டது.

சிறைத்தண்டனை முடிந்த பின்னர் சகிலகா விடுதலையானதும் தினகரன் மிரட்டிய  சிலீப்பர் செல்கள் வெளியேறும் என எதிர் பார்க்கப்பட்டது.  பெங்களூரில்  இருந்து சென்னைவரை சசிகலாவிக்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. மெளனமாக இருந்த சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். சசிகலா ஒதுங்கினாலும் தினகரனின் சவால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் கருத்துக் கணிப்புகள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பாதகமாக உள்ளன. தினகரனின் கட்சியால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வாக்கு வங்கி சிதறும் சூழ்நிலை உள்ளது. தவிர, சசிகலாவின்  சமூகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். இதனைச் சரிக்கட்டுவதற்காக .பன்னீர்ச்செல்வம் சகிலகாவுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.


சசிகலாவை விமர்சித்து பன்னீர்ச்செல்வம் கூறிய கருத்துக்களும், பன்னீருக்கு சசிக்லா விடுத்த எச்சரிக்கையும் இன்றும் யூ ரியூப்பில் வலம் வருகின்றன. தேர்தலில் வெற்றி பெறுவதற்கு சசிகலாவின் ஆதரவு தேவை என்பதை காலம் கடந்து பன்னீர்ச்செல்வம் உணர்ந்து கொண்டார். சசிகலாவை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என அன்று தர்மயுத்தம் செய்த பன்னீர்ச்செல்வம் இன்று அவரை கட்சியில் சேர்க்க வேண்டும் என கருத்துக் கூறுகிறார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது, விசாரணைக் கமிசன் அமைக்க வேண்டும் என அன்று வலியுறுத்திய பன்னீர்செல்வம் இன்று அவர் மீது சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டவே விசாரணைக் கமிசனைக் கோரியதாக தெரிவிக்கிறார். விசாரணைக் கமிசன் முன் பன்னீர்ச்செல்வம் ஆஜராகவில்லை என்பது வேறுகதை.

ஒருங்கிணப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும்  கட்சியை திறமையாக நிர்வகிக்கின்றனர். அவர்களின் கீழ் சசிகலா இணையலாம் என பன்னீர்ச்செல்வம் கூறினார். சிறையில் இருந்து தான் திரும்பும்வரை கட்சியையும், ஆட்சியையும் பாதுகாக்கும் பொறுப்பை எடப்பாடியின் கையில் ஒப்படைத்தார் சகிகலா. பதவி மோகம் எடப்பாடியை ஆட்கொண்டதால் சசிகலாவும் சசிகலாவால் நியமிக்கப்பட்ட துணை பொதுச் செயலாளர் தினகரனும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து தூக்கி எறியபட்டனர்.

சிறைத்தண்டனை முடிந்து தான் வெளியேறும்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது கையை விட்டுப் போய்விடும் என நினைத்திருக்க மாட்டார்.தேர்தல் முடிவு  வரும்வரை பொறுமை காக்கிறார் சசிகலா. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியடையும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அது நிஜமானால் சசிகலா மீண்டும் அரசியலில்   கால் பதிப்பார். 

No comments: