Monday, July 22, 2024

மக்களின் முடிவுக்கு எதிராக நீதிமன்றக் கதவைத் தட்டும் தலைவர்கள்

  தமிழகத்தில் நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தல்முடிவை எதிர்த்து  .பன்னீர்ச்செல்வம், நைனா நாகேந்திரன் ,விஜயபிரபாகரன் ஆகிய மூவரும்  நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

  விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்கக் கோரி,  தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் வழக்கு தொடர்ந்துள்ளார்.  ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வமும்,  திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நைனா நாகேந்திரனும் அத்தொகுதிகளில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

தமிழ்நாட்டில்  திராவிட முன்னேற்றக் கூட்டணி 39  தொகுதிகளிலும்  வெற்ரி பெற்றது.  புதுச்சேரியிலும் திமுக  கூட்டணி வெற்றி பெர்ரது.

  தேர்தல் முடிவுகள் வெளியாகி 45 நாட்களுக்குள் இந்த வழக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.   தேர்தல் வழக்கு தொடர கடைசி நாளில் மூவரும் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

 விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பாக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனும், பாஜக சார்பில் ராதிகா சரத்குமாரும், காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் விஜய பிரபாகரனை விட 5000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் போட்டியிட்டார். அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பாக நவாஸ் கனி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இருவரும்   தத்தமது தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

 ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற நவாஸ் கனி வேட்புமனு தாக்கலின் போது சொத்துக்கணக்கை முறையாக காட்டவில்லை. அதனால் அவரது வெற்றி செல்லாது எனக் கூற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் . பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார்.

விருதுநகர்   தொகுதியில் மாணிக்கம் தாகூரின் வெற்றியை எதிர்த்து தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகளை பெற்று வென்றுள்ளார். இவரை தொடர்ந்து தேமுதிகவின் விஜய பிரபாகரன் 3,80,877 வாக்குகளை பெற்று  4,379 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.  பாஜக சார்பில் போட்டியிட்ட ராதிகாவோ 1,66,271 வாக்குகளை பெற்று 3ஆவது இடத்தை பெற்றார். மாணிக்கம் தாகூருக்கு கடுமையான நெருக்க்கடி கொடுத்தார் விஜய பிரபாகரன். கடைசியில் நடந்த ட்விஸ்ட்டாக விஜய பிரபாகரன் குறைந்த வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இதுகுறித்து சென்னையில் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில் விஜய பிரபாகரன் தோற்கவில்லை. அவர் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். உணவு இடைவேளை முடிந்ததும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. 13 ஆவது சுற்று வரை விஜய பிரபாகரன் முன்னிலையில் இருந்தார். அந்த சுற்றில்தான் முறைகேடு நடந்தது.

 அது போல் நள்ளிரவில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. மற்ற தொகுதிகளில் எங்கள் வேட்பாளர்கள் தோல்வி அடைந்ததை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். ஆனால் இவ்வளவு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது சூழ்ச்சி! விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தது. தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதால் செல்போனை அணைத்து வைப்பதாக அவர் தெரிவித்திருந்தார் இவ்வாறு பிரேமலதா.

இதுகுறித்து மாணிக்கம் தாகூர் விளக்கமளிக்கையில், வாக்கு எண்ணிக்கையின் போது விஜய பிரபாகரன், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் இருந்தனர். உணவு இடைவேளையின் போது முறைகேடு நடந்ததாக சொல்கிறார்களே இதை அப்போதே கேட்டிருக்கலாமே! அவர்கள் தோல்வியை ஒப்புக் கொண்டுதானே இரவு 7 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்தை விட்டு புறப்பட்டனர். சின்ன பசங்க விளையாட்டில் அம்மாவிடம் புகார் கூறி அவர் பஞ்சாயத்துக்கு வருவது போல் விஜய பிரபாகரன் செய்துள்ளார். தோல்வியை ஒப்புக் கொள்ள மனமில்லாமல் அவர்கள் இது போல் என் மீது பழி போடுகிறார்கள் என மாணிக்கம் தாகூர் தெரிவித்திரு்நதார்.

 இந்த நிலையில் இந்த முறைகேடு குறித்து தலைமை தேர்தல் ஆணையருக்கும் இமெயில் மூலம் புகார் அளிக்கப்பட்டதாக பிரேமலதா தெரிவித்திருந்தார். இந்த நிலையில்   சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணிக்கம் தாகூரின் வெற்றியை எதிர்த்து விஜய பிரபாகரன் வழக்கு தாக்கல் செய்தார்.

ராஜ்யசபாவில் பெரும்பான்மையை இழந்தது பாஜக..

ராஜ்யசபா எனப்படும் மாநிலங்களவையில் பாஜகவுக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் பெரும்பான்மை பலம் பறி போயுள்ளதால் மசோதாக்களை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிமுக மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை தங்கள் பக்கம் வளைத்து அவர்களது ஆதரவுடன்தான் எதையும் செய்ய முடியும் என்ற நிலை பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது.

பாஜக சார்பில் உறுப்பினர்களாக இருந்த ராகேஷ் சின்ஹா, ராம் சகல், சோனால் மான்சிங், மகேஷ் ஜெத்மலானி ஆகியோரது பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில் பாஜகவின் பலம் ராஜ்யசபாவில் குறைந்துள்ளது. இவர்கள் நான்கு பேருமே நியமன உறுப்பினர்கள் ஆவர். இவர்களது ஓய்வால் தற்போது ராஜ்யசபாவில் பாஜகவின் பலம் 86 ஆக குறைந்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 101 ஆக குறைந்துள்ளது. 

ராஜ்யசபாவில் தற்போதைய உறுப்பினர் எண்ணிக்கை 225 ஆகும். மொத்த பலம் 245 ஆகும். தற்போதைய பலத்தை வைத்துப் பார்த்தால் பெரும்பான்மைக்குத் தேவை 113 பேர் ஆகும். ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே தற்போது வெறும் 101 பேர்தான் உள்ளனர் என்பதால் பாஜகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மறுபக்கம் இந்தியா கூட்டணியில் மொத்தம் 87 உறுப்பினர்கள் உள்ளனர். அதிகபட்சமாக காங்கிரஸுக்கு 26, திரினமூல் காங்கிரஸுக்கு 13 எம்பிக்கள் உள்ளனர். திமுக, ஆம் ஆத்மிக்கு தலா 10 பேர் உள்ளனர். 

இதுவரை பாஜகவுக்கு ஆதரவாக இருந்து வந்த பிஜூ ஜனதாதளம் (9 எம்.பிக்கள் உள்ளனர்) தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லை. அதற்கு ஆதரவாகவும் இல்லை. எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று அது கூறி விட்டது.  இதனால் அந்தக் கட்சியின் எம்.பிக்கள் ஆதரவையும் பாஜக இழந்துள்ளது.

இப்போது என்ன சிக்கல் என்றால் சட்ட மசோதாக்களை நிறைவேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பலம் இல்லை. பிற கட்சிகளின் ஆதரவு இருந்தால்தான் மசோதாக்களை நிறைவேற்ற முடியும் என்ற நிலையில் பாஜக உள்ளது.

  அதிமுக,, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகியவற்றைதயவை நாட வேண்டிய நிலையில் பாஜாகா உள்ளாது.  இருவருமே முன்னாள் கூட்டாளிகள். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்புதான் கூட்டணியிலிருந்து விலகியவர்கள். அதேசமயம், இவர்களின் மாநிலத்  தலைமை, தேசியத் தலைமையுடன் நல்லுறவில்தான் இருக்கிறார்கள். 

இதில் அதிமுகவிடம் 4 உறுப்பினர்கள் உள்ளனர். ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் வசம் 11 உறுப்பினர்கள் உள்ளனர். மற்றவர்களிடம் கெஞ்சிக் கொண்டிருப்பதை விட, இந்த இரு கட்சிகளையும் தங்களுக்கு ஆதரவாக திருப்புவது பாஜகவுக்கு எளிதானது. எனவே இவர்களின் ஆதரவை வைத்துத்தான் ராஜ்யசபாவில் நிலைமையை சமாளிக்க பாஜக முயலும் என்று தெரிகிறது.

இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சில பல நிபந்தனைகளுடன் பாஜகவுக்கு ஆதரவளிக்க முன்வரலாம். ஆனால் அதிமுக இறங்கி வருமா என்று தெரியவில்லை. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவிடம் ஆட்சியைப் பறி கொடுத்த கட்சி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ். ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக பெரிய வன்முறையே அங்கு தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்களால் அரங்கேற்றப்பட்டது. அதற்கெல்லாம் பாஜக நிவாரணம் தேடிக் கொடுத்தால், மேற்கொண்டு நாயுடு தரப்பிலிருந்து தொல்லைகள் வராமல் இருந்தால் ஜெகன் மோகன் ரெட்டி மாநிலங்களவையில் பாஜகவை ஆதரிக்க முன்வரலாம் என்று தெரிகிறது.

  லோக்சபாவில் சந்திரபாபு நாயுடு ஆதரவு, ராஜ்யசபாவில் ஜெகன் மோகன் ரெட்டி ஆதரவு என பாஜகவின் நிலை விசித்திரமானதாக மாறியுள்ளது.

ராஜ்யசபாவில் 12 நியமன உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களை நியமன உறுப்பினர்களாக்கியதே மோடி அரசுதான். எனவே அவர்கள் மோடி அரசுக்கே ஆதரவாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

லோக்சபாவிலும் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை இல்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவுடன்தான் அங்கு பாஜக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. தற்போது ராஜ்யசபாவில் தேசிய ஜனநாயக் கூட்டணிக்கே பெரும்பான்மை பலம் இல்லாமல் போயிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments: