Thursday, June 4, 2009

அட்டகாச திருவிழா இன்று ஆரம்பம்


பரபரப்பும் விறுவிறுப்பும் மிக்க ருவென்ரி 20 உலகக் கிண்ணப் போட்டி இன்று இங்கிலாந்தில் ஆரம்பமாகிறது.ஐ.பி.எல். ரி 20 போட்டிகளில் மூழ்கித் திளைத்த ரசிகர்களை மேலும் பரவசப்படுத்த இப்போட்டிகள் களமாக அமையவுள்ளன.
ருவென்ரி 20 உலகக் கிண்ணப் போட்டியில் 12 நாடுகள் பங்கு பற்றுகின்றன. a b c d என்ற நான்கு பிரிவுகளில் தலா மூன்று நாடுகள் உள்ளன. கிரிக்கெட் ரசிகர்களின் ஒட்டு மொத்தப் பார்வையும் a பிரிவில் உள்ள இந்திய அணி மீதே உள்ளன. a பிரிவில் இந்தியா, பங்களாதேஷ், அயர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. பங்களாதேஷ், அயர்லாந்து ஆகிய அணிகளை விட வலிமையான இந்திய அணி முதலிடம் பிடித்து இரண்டாவது சுற்றுக்கு தெரிவாகி விடும். பங்களாதேஷ், அயர்லாந்தை வீழ்த்திவிடும். ஆகையினால் பங்களாதேஷ் இரண்டாவது சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டு விடும்.
முதலாவதுரு வென்ரி 20 போட்டியில் கிண்ணம் வென்ற அணித்தலைவர் டோனி இம்முறையும் கிண்ணத்தைக் கைப்பற்றும் நோக்குடன் உள்ளார். முதலாவது ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இறுதிப் போட்டி வரைக்கும் இரண்டாவது ஐ.பி.எல். போட்டியில் அரை இறுதிவரை அணியை வழி நடத்திய அனுபவம் டோனிக்கு இருப்பதால் கிண்ணத்தை வெல்லும் சாத்தியம் அதிகம் உள்ளது.
கடந்த முறை கலக்கிய ஜோகின்தர் சர்மா, ஸ்ரீசாந்த் ஆகியோர் அணியில் இல்லை. ஐ.பி.எல். லில் எதிரணி வீரர்களை மிரட்டிய யூசுப் பதான், ரோகித் சர்மா, ரைனா, இர்பான் பதான் ஆகியோர் அணியில் இருப்பது பலமானது. ஐ.பி.எல்.லில் இரண்டு முறை ஹட்ரிக் சாதனை செய்த யுவராஜ்சிங் பந்து வீச்சில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார். ஆர்.பி. சிங் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது. இஷார்த் சர்மா, ஷேவாக், கம்பீர் ஆகியோரும் பழைய நிலைக்கு திரும்பினால். இந்திய அணி இக் கிண்ணத்தை இரண்டாவது தடவையும் கைப்பற்றும் சாத்தியம் உள்ளது.
bபிரிவில் பாகிஸ்தான், இங்கிலாந்து , நெதர்லாந்து ஆகிய அணிகள் உள்ளன. முதல் சுற்றிலேயே நெதர்லாந்து வெளியேறிவிடும். முதலாவது டுவென்ரி 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் பயிற்சி இல்லாததால் கஷ்டப்பட்டு முன்னேற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. முகம்மது யூசுப், சொஹைப் அக்தர் இல்லாதது பாகிஸ்தானுக்கு பலவீனம். யூனுஸ்கான், அப்ரிடி, தன்வீர், சொகைப் ஆகியோரின் பங்களிப்புத் தான் பாகிஸ்தான் அணிக்கு மிகுந்த தேவையாக உள்ளது.
சகல துறை வீரர் பிளின்டொப் இல்லாததனால் இங்கிலாந்து அணி பலவீனமாக உள்ளது. சொந்த மண் உள்ளூர் ரசிகர்களின் உற்சாகம் இங்கிலாந்து அணிக்கு கை கொடுக்கும்.
அவுஸ்திரேலியா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் ஆகியன c பிரிவில் உள்ளன. மேற்கிந்திய தீவுகள் பலம் குறைந்த அணிபோல் தோன்றினாலும் இந்தப் பிரிவில் வெளியேறும் அணி எது என்று கூறிவிட முடியாது.
பிரட்லீ, மைக்கல் கிளார்க், சைமன்ஸ் ஆகியோரின் எழுச்சியே அவுஸ்திரேலிய அணிக்கு எழுச்சியைக் கொடுக்கும். அவுஸ்திரேலிய அணியின் ஓய்வு பெற்ற வீரர்களான ஹைடன், கில் கிறிஸ்ட் ஆகியோர் ஐ.பி.எல்லில் இளைஞர்களுக்கு சவால் விட்டு தமது திறமையை வெளிப்படுத்தினர்.
ஜயசூரிய , மஹேல, முரளிதரன், மலிங்க ஆகியோர் ஐ.பி.எல்.லில் தமது முழுத் திறமையினை வெளிப்படுத்தவில்லை. மென்டிஸ் நிலை மிகவும் மோசம். சங்கக்கார, டில்ஷான் ஆகியோர் ஐ.பி.எல்லில் சிறப்பாகச் செயற்பட்டனர். இலங்கை வீரர்கள் முயற்சி செய்தால் கிண்ணத்தை வெல்லலாம்.
அணித்தலைவர் கெய்ல்ஸ், சர்வான் ஆகியோர் எழுச்சி பெற்றால் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெறலாம்.
நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, ஸ்கொட்லாந்து ஆகியன d பிரிவில் உள்ளன. ஸ்கொட்லாந்து முதல் சுற்றிலேயே வெளியேறிவிடும்.
கொல்கத்தாவுக்கு தலைமை தாங்கிய மெக்கலத்தின் விளையாட்டு எதிர்பார்த்ததுபோல் இல்லை என்றாலும் நியூசிலாந்து அணியை குறைத்து மதிப்பிடக் கூடாது.தென் ஆபிரிக்க வீரர்களான கலிஸ், போத்தா, டிவில்லியன்ஸ், ஆகியோர் ஐ.பி.எல். மூலம் சிறந்த அனுபவத்தைப் பெற்றுள்ளனர்.
20 உலகக் கிண்ண போட்டியில்
ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் மேற்கிந்திய தீவுகளின் தலைவர் கிறிஸ்கெய்ல் உள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அதிகபட்சமாக 117 ஓட்டங்கள் எடுத்தார். தவிர டுவென்டி 20 உலகக் கிண்ணத் தொடரில் சதம் கடந்த ஒரே வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். இவரைத் தொடர்ந்து தென் ஆபிரிக்காவின் கிப்ஸ் (90) மற்றும் கெம்ப் (89) உள்ளனர். இந்தியா சார்பில் கம்பீர் (75) யுவராஜ் (70), சேவாக் (68) ஆகியோர் உள்ளனர்.
மெக்கலம் அதிரடி
அதிக சிக்ஸர் டுவென்டி 20 உலகக் கிண்ண வரலாற்றில் விளாசிய வீரர்கள் வரிசையில் பிராண்டன் மெக்கலம் முதலிடத்தில் உள்ளார். இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள மக்கலம் 13 சிக்ஸர் விளாசியுள்ளார். இதுவரை தொடர்ந்து இந்தியாவின் யுவராஜ் (12), வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கெய்ல் (10) ஆகியோர் உள்ளனர்.
உமர் குல் துல்லியம்
டுவண்டி 20 உலகக் கிண்ண அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் பாகிஸ்தான் வீரர் உமர்குல் முதலிடத்தில் உள்ளார். இதுவரையில் போட்டியில் விளையாடி உள்ள குல் 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இந்தியாவின் ஆர்.பி.சிங் 12 விக்கெட்டுகளுடன் 2 ஆவது இடத்தில் உள்ளார்.
இலங்கை முதலிடம்
ஐ.சி.சி டுவென்டி20 உலகக் கிண்ண அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ஓட்டங்கள் குவித்த அணிகள் வரிசையில் இலங்கை அணி முதலிடம் வகிக்கிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு கென்யாவுக்கு எதிராக ஜொகன்னஸ் பேர்க்கில் நடந்த போட்டியில் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ஓட்டங்கள் குவித்தது.
ஹைடன் அசத்தல்
டுவென்டி 20 உலகக் கிண்ண அரங்கில் அதிக ஓட்டங்கள் சேர்த்த வீரர்கள் வரிசையில் அவுஸ்திரேலிய வீரர் ஹைடன் முதலிடத்தில் உள்ளார். இதுவரை 6 போட்டியில் விளையாடியுள்ள இவர் 4 அரைச் சதம் உட்பட 265 ஓட்டங்கள் குவித்து உள்ளார். இரண்டாவது இடத்தில் இந்தியாவின் கம்பீர் (227) மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் மிஸ்பா (218) உள்ளனர்.
ரமணி
மெட்ரோநியூஸ் 05/06/09

1 comment:

ரவி said...

சுவாரஸ்ய வலைப்பதிவர் விருதுக்கு வாழ்த்துகள்

தொடர்புடைய சுட்டி

http://enularalkal.blogspot.com/2009/07/blog-post_14.html