Sunday, June 7, 2009
தந்தைவழியா தனிவழியா?
பேரறிஞர் அண்ணா மறைந்த பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தலைமை ஏற்பது யார் என்ற கேள்வி எழுந்தபோது கலைஞர் கருணாநிதிக்கும் இரா. நெடுஞ்செழியனுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. இரா. நெடுஞ்செழியனை முந்திக் கொண்டு கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார் கலைஞர் கருணாநிதி.
முதல்வர் கருணாநிதிக்குப் பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொறுப்பு ஸ்டாலினிடம் செல்லும் என்பது நீண்ட காலத்துக்கு முன்னரே எழுதப்பட்டு விட்டது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுப்பை ஸ்டாலினின் கையில் கொடுப்பதன் முன்னோட்டமாக ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்காத கௌரவம் காலம் தாழ்த்தி கிடைத்துள்ளது.
அழகிரி அமைச்சராகப் பொறுப்பேற்று சூடு ஆறுவதற்குள் ஸ்டாலினின் தலையில் துணை முதல்வர் என்ற கிரீடம் சூட்டப்பட்டுள்ளது. ஸ்டாலினுக்கு பட்டம் சூட்டுவது தொடர்பாக கட்சிக்குள் கருத்து பேதம் இல்லை. ஆனால் குடும்பத்துக்குள் ஏற்பட இருந்த பூகம்பத்தை நீக்கிய பின்பே ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கை, வாரிசு அரசியலுக்கு அப்பாற்பட்டது. பாடசாலையில் படிக்கும் காலத்திலேயே அவர் அரசியலுக்குத் தள்ளப்பட்டார். தியாகங்கள், சிறைவாழ்க்கை ஆகியவற்றுடன் அவரது அரசியல் வாழ்க்கை ஆரம்பமானது.
அழகிரி, ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் முக்கிய பொறுப்புகள் கொடுத்த பின்னர் முதல்வர் கருணாநிதி அரசியலில் இருந்து ஒதுங்குவார் என்று அவரது அரசியல் எதிரிகள் எதிர்பார்த்தனர். ஆனால் முதல்வர் கருணாநிதி தனது பொறுப்புகள் சிலவற்றை ஸ்டாலினிடம் ஒப்படைத்துள்ளாரே தவிர, அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கு அவர் தயாராக இல்லை.
அதிரடி நடவடிக்கைகளினால் மக்கள் மத்தியிலும் அரசியல் அரங்கிலும் பிரபலமானவர் அழகிரி. இதற்கு நேர்மாறாக அமைதியாக கருமங்களை ஆற்றுபவர் ஸ்டாலின். இருவருக்கும் ஆதரவு அதிகம் உண்டு. மதுரையில் அழகிரியின் ராஜாங்கம்தான். தமிழ்நாடு முழுவதும் அழகிரிக்கு செல்வாக்கு உண்டு.
தமிழகத்திலும் டில்லியிலும் தனக்கு நம்பிக்கைக்கு உரிய இருவரை அமர்த்திய திருப்தியில் உள்ளார் முதல்வர் கருணாநிதி. தமிழகப் பிரச்சினைகளை முதல்வர் கருணாநிதி நேரடியாகக் கவனித்த வேளையில் மத்திய அரசுடனான உறவுகளை சுமுகமாக கொண்டு செல்வதற்கு முரசொலிமாறன் இருந்தார். முரசொலிமாறன் மறைந்த பின்னர் அந்த இடத்தை அவருடைய மகன் தயாநிதி மாறன் நிரப்பினார். குடும்பத்துக்குள் பூகம்பம் ஏற்பட்ட போது அந்த இடத்துக்கு மகள் கனிமொழியை நியமித்தார் முதல்வர் கருணாநிதி.
கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதும். அவர் எப்போது அமைச்சராவார் என்ற கேள்வி பரவலாக எழுந்தது. ஆனால், கனிமொழியை முந்திக் கொண்டு அழகிரி அமைச்சராகியுள்ளார்.
இந்திய அரசியல் அமைப்பில் இல்லாத ஒரு பதவி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி என்ற பதவி இந்திய அரசியல் அமைப்பில் உள்ளது. துணைப் பிரதமர், துணை முதல்வர் பதவிகள் இல்லை. வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது தேவிலாலும் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அத்வானியும் துணைப் பிரதமர் பதவியை வகித்தனர்.
சிக்கலான ஒரு காலத்திலேயே ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு ஆதரவு கொடுக்கும் காங்கிரஸ் கட்சியை அரசியல் பங்காளி ஆக்க வேண்டிய நிலை உள்ளது. முதல்வர் கருணாநிதி தனது பொறுப்புகளை குறைத்தது போன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களுக்கும் தமது பொறுப்புக்களை குறைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தொண்டர்களுடன் அதிகம் நெருங்கிப் பழகாதவர் என்ற குறையை நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் மூலம் துடைத்தெறிந்து விட்டார் ஸ்டாலின். ஸ்டாலின் துணை முதல்வராகக் கூடாது என்று கருதிய சில தலைவர்களின் எதிர்பார்ப்பையும் மீறி துணை முதல்வராகிய ஸ்டாலின் தனது அடுத்த கட்ட நடவடிக்கை மூலம் தனக்கு எதிராக எழும் அரசியல் சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது.
இதேவேளை, திராவிடக் கழகங்களின் துணையுடன் தேர்தலில் வெற்றி பெறும் சூழ்நிலையை தமிழகத்தில் இருந்து மாற்ற வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புகிறார். பெருந்தலைவர் காமராஜருக்குப் பின்னர் தமிழக காங்கிரஸில் கோஷ்டிகள் வளர்ந்ததே தவிர, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி பெறவில்லை.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்கு தமிழக அமைச்சராக தமது கட்சியைச் சேர்ந்த சிலர் இருக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகின்றனர். தமிழக காங்கிரஸின் இந்த வேண்டுகோளைப் பூர்த்தி செய்தால் பாட்டாளி மக்கள்கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் எதிர்ப்புகளை சுலபமாக முறியடிக்கலாம் என்ற கருத்து உள்ளது.
தமிழக ஆட்சியில் காங்கிரஸை பங்காளியாகச் சேர்த்தால் தமிழக காங்கிரஸில் உள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவான தலைவர்களின் நிலை சிக்கலாகி விடும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேரும் சந்தர்ப்பம் கிடைத்தால் ஆட்சியில் பங்கு கொடுப்பதற்கு ஜெயலலிதா ஒரு காலமும் விரும்ப மாட்டார்.
காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சுப் பொறுப்பு வழங்கினால் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான உறவு பலமடையும் என்ற கருத்தும் உள்ளது.
துணை முதல்வர் பதவி மட்டுமல்லாது திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்க்கும் பணியும் ஸ்டாலினின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. ஸ்டாலின், அழகிரி, தயாநிதி மாறன், கனிமொழி என்று ஒரு குடும்ப உறுப்பினர்கள் தமிழக அரசியில் அதிகாரங்களில் இருப்பது சற்று நெருடலாகத்தான் உள்ளது.
துணை முதல்வரான ஸ்டாலின் தந்தை வழியில் அரசியல் வாரிசுகளை குடும்பத்துக்குள் உருவாக்குவாரா? தனி வழியில் பயணம் சென்று அரசியலில் கொடி நாட்டுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
வர்மா,
வீரகேசரி 07/06/2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment