Monday, June 22, 2009

மதில்மேல் பூனையாககாத்திருக்கும் பா.ம.க.


இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாறும் என்று வீராப்புப் பேசிய டாக்டர் ராமதாஸ் தனது சுருதியைக் குறைத்து திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான குற்றச் சாட்டுகளை குறைத்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தை டாக்டர் ராமதாஸ் மிக மோசமாக விமர்சித்த போது பொறுமை இழந்த முதல்வர் கருணாநிதி, டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற்றினார். கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டதையிட்டு கொஞ்சமும் கவலைப்படாத டாக்டர் ராமதாஸ் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் தனது கட்சி அங்கம் வகிப்பதாக பெருமிதமாகக் கூறினார். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் திராவிட முன்னேற்றக் கழகமும் படுதோல்வி அடையும் என எதிர்பார்த்த டாக்டர் ராமதாஸ் அன்புச் சகோதரி ஜெயலலிதாவிடம் அடைக்கலம் புகுந்தார்.
ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்தததால் நாடாளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி ஆகியன தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றன. பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட ஆறு தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.
நாடாளுமன்றத் தேர்தலின் போது டாக்டர் ராமதாஸை அன்புடன் வரவேற்ற ஜெயலலிதா தேர்தலில் படுதோல்வி அடைந்த பின்னர் டாக்டர் ராமதாஸை ஏறெடுத்தும் பார்க்கவில்லø. ஒரே மேடையில் கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்ட கூட்டணித் தலைவர்கள் தோல்வி அடைந்த பின்னர் ஆளுக்கு ஒரு பக்கமாகச் சென்று விட்டனர்.
டாக்டர் ராமதாஸின் மகன் அன்பு மணி ராஜ்சபை உறுப்பினராக உள்ளார். அவருடைய பதவிக்காலம் முடிந்த பின்னர் மீண்டும் அவரை நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்காகவே ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தார் டாக்டர் ராமதாஸ். நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த பின்னர் அன்புமணியின் அடுத்த நியமனம் கேள்விக்குறியாக உள்ளது. அன்புமணியின் நியமனம் தொடர வேண்டுமானால் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்வதைத் தவிர வேறு மார்க்கம் டாக்டர் ராமதாஸிற்கு இல்லை.
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தமிழக சட்டமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வழங்கி வரும் ஆதரவு விலக்கப்படும் என்று டாக்டர் ராமதாஸ் சூசகமாகத் தெரிவித்தார். டாக்டர் ராமதாஸுக்கு விசுவாசமான காடுவெட்டி குரு, தேர்தல் பிரசாரத்தின் போது திராவிட முன்னேற்றக் கழகத்தையும் முதல்வர் கருணாநிதி குடும்பத்தையும் மிக மோசமாக தாக்கிப் பேசினார். நாடாளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சந்தித்த படுதோல்வி டாக்டர் ராமதாஸின் கனவுகளை தவிடு பொடியாக்கியது.
தமிழக சட்டமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வழங்கி வரும் ஆதரவை விலக்குவதாக பாட்டாளி மக்கள் கட்சி முறைப்படி அறிவிக்கவில்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் மீண்டும் இணைவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளது. அதேபோல், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் பாட்டாளி மக்கள் கட்சி முறைப்படி அறிவிக்கவில்லை. வெளிப்படையில் அறிவிக்க முடியாத சூழ்நிலையில் சிக்கி உள்ளார் டாக்டர் ராமதாஸ்.
பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழுவைக் கூட்டி செயற்குழு அங்கத்தவர்களிடையே தேர்தல் ஒன்றை நடத்தி அந்தத் தேர்தல் முடிவின் பிரகாரமே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இணைவதாக நாடகம் நடத்தினார். டாக்டர் ராமதாஸ் அப்படி ஒரு தேர்தலை நடத்தி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வழங்கும் ஆதரவை வாபஸ் பெறுவதற்கு தயாராக இல்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்று அன்புமணி விரும்பினார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பாடம் படிப்பிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ், காடு வெட்டி குரு போன்றோர் விரும்பினர். ஆனால் பொதுமக்கள் அவர்களுக்கு பாடம் படிப்பித்து விட்டனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் அணி மாறும் போது அன்புமணி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஐந்து வருடங்கள் முழுமையாக அமைச்சுப் பதவியை அனுபவித்து விட்டு அமைச்சுப் பதவியை மட்டும் ராஜினாமாச் செய்தார். திராவிட முன்னேற்றக் கழகம் வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தக்க வைத்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் 18 உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கு அணி மாறும் போது இவர் தத்தமது பதவியை ராஜினாமாச் செய்யவில்லை. சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்து விட்டு தேர்தலைச் சந்திக்கும் துணிவு பாட்டாளி மக்கள் கட்சிக்கு இல்லை.
இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தின் நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. அந்தத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் என்ன செய்யப் போகின்றன என்பதை அறிவதற்கு தமிழக அரசியல் களம் ஆர்வமாக உள்ளது.
வர்மா
வீரகேசரி 21/06/2009

No comments: