Friday, June 26, 2009
பயங்கரவாதத்தால் பயமில்லை
பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட முடியாது பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு செல்லமாட்டோம் என்று கூறிய நாடுகளுக்கு டுவன்ரி 20 கிண்ணத்தை வென்றதன் மூலம் பதிலளித்துள்ளது பாகிஸ்தான் அணி.
தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகிய நாடுகள் அச்சத்தின் காரணமாக பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என்று தெரிவித்தன.
அண்டை நாடான பாகிஸ்தானை இந்தியாவும் இலங்கையும் கைவிடாது தட்டிக் கொடுத்தன. பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இருந்த போதும் இந்தியாவும் இலங்கையும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடின.
மும்பைத் தாக்குதலின் பின்னர் பாகிஸ்தானுடனான தொடர்புகளை அறுத்தெறிந்தது இந்தியா. பாகிஸ்தானில் பயங்கரவாதம் இல்லை என்பதை நிரூபிப்பதற்காகச் சென்ற இலங்கை அணி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தப்பினேன் பிழைத்தேன் என்று திரும்பியது இலங்கை அணி.
கிரிக்கெட் விளையாடும் நாடுகளினால் ஒதுக்க, பாகிஸ்தான் வீரர்கள் தமது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி டுவன்ரி 20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றி பாகிஸ்தானை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
முதலாவது போட்டியே கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. கிரிக்கெட்டில் குழந்தை நாடான ஹொலண்டிடம் இங்கிலாந்து தோல்வியடைந்தது. 50 ஓவர் உலகக் கிண்ணப் போட்டியில் பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்திய பங்களாதேஷ் அயர்லாந்திடம் அடிவாங்கியது. யாருமே எதிர்பார்க்காத அயர்லாந்து சூப்பர் 8க்குத் தெரிவானது. ருவன்ரி 20 உலகக் கிண்ணத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி பங்களாதேஷையும் அயர்லாந்தையும் வென்ற திருப்தியுடன் சுப்பர் 8லிருந்து வெளியேறியது.
ஒரு நாள், டெஸ்ட் போட்டிகளில் வல்லரசனாகத் திகழும் அவுஸ்திரேலியா, இலங்கை, மேற்கு இந்தியா ஆகியவற்றுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து சூப்பர் 8க்கும் தெரிவாகாமல் நாடு திரும்பியது.
அரை இறுதிக்கு பாகிஸ்தான், தென்ஆபிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், இலங்கை ஆகியன தெரிவாகின. தென்னாபிரிக்காவுக்கு எதிரான அரை இறுதியில் அப்ரிடியின் அதிரடியால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. உலகக் கிண்ண அரை இறுதியில் தோல்வியுடன் வெளியேறும் தென்னாபிரிக்காவின் துரதிர்ஷ்டம் இம்முறையும் தொடர்ந்தது. இலங்கை மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான அரை இறுதியில் மத்தியூன் வீசிய முதலாவது ஓவர் இலங்கையின் வெற்றியை உறுதி செய்தது. முதல் ஓவரில் முக்கியமான மூன்று விக்கெட்டுகள் வீழ்ந்தன. அணித் தலைவர் கைல்ஸ் தனி ஒருவராகப் போராடியும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. 2007ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் கிண்ணத்தை வெல்லும் குறிக்கோளுடன் இங்கிலாந்தில் விளையாடியது.
பயங்கரவாதத்தால் சோர்ந்து போயுள்ள பாகிஸ்தான் ரசிகர்கள் உற்சாகமாக வீதியில் இறங்கி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பயங்கரவாதத்தால் கிரிக்கெட்டுக்கு பாதிப்பு இல்லை என்பதை உலகுக்கு எடுத்துக்கூறி உள்ளனர் பாகிஸ்தான் வீரர்கள்.
ரமணி
மெட்ரோநியூஸ்
26/06/09
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment