தமிழக சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற ஜெயலலிதாவின் முடிவு கூட்டணித் தலைவர்களையும் தொண்டர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கம்பம், தொண்டாமுத்தூர், பாகூர் இளையான்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கு தேர்தலை நடத்த திகதி அறிவிக்கப்பட்டது. தேர்தல் திருவிழாவுக்காக அரசியல் கட்சிகள் ஆயத்தம் செய்த நிலையில் ஜெயலலிதாவின் திடீர் முடிவு வாக்காளர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.
தொண்டாமுத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மு. கண்ணப்பன், கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். இவர்கள் இருவரும் தமது பதவியைத் துறந்து விட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.
இளையான்குடியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் தனது பதவியை இராஜிநாமõ செய்து விட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
பாகூர் சட்டமன்ற உறுப்பினர் தம்பித்துரை, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தனது பதவியை இராஜினாமா செய்தார். ஸ்ரீ வைகுண்ட சட்டமன்ற உறுப்பினரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செல்வராஜ் மரணமானார்.
ஸ்ரீ வைகுண்டம் தொகுதியைத் தவிர ஏனைய நான்கு தொகுதிகளிலும் அண்ணா திராவிட முன்னேற்றத்தின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளன.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் துஷ்பிரயோகம், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்களிக்கச் செய்வது, மின்னணு வாக்கு இயந்திரத்தில் ஆளும் கட்சி முறைகேடு செய்வது ஆகிய காரணங்களினால் இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா கூறியதை அப்படியே ஒப்புவித்து இந்த இடைத் தேர்தலை பகிஷ்கரிக்கப் போவதாக வைகோ கூறியுள்ளார். தொண்டா முத்தூர், கம்பம் ஆகிய இரண்டு தொகுதிகளும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வெற்றியைத் தேடித் தரக் கூடிய தொகுதிகள். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவற்றின் உதவியுடன் இந்த இரண்டு தொகுதிகளிலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது.
நாடாளுமன்றத் தேர்தலில் மிக மோசமாகத் தோல்வியடைந்த ராமதாஸுக்கு ஜெயலலிதாவின் தேர்தல் புறக்கணிப்பு தனது கட்சியைப் பலப்படுத்தும் வரை அவர் தேர்தல் பற்றி சிந்திக்க மாட்டார்.

தமிழக சட்டமன்ற இடைத் தேர்தலைப் புறக்கணிப்பதன் மூலம் பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருந்து விலகி உள்ளார் ஜெயலலிதா.
இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தமிழக சட்ட சபைத் தேர்தலிலும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியை எதிர்த்து வெற்றி பெற முடியாத வெறுப்பை ஜெயலலிதா வெளிக்காட்டி உள்ளார்.
முதல்வர் கருணாநிதி தலைமையிலான கூட்டணிக் கட்சியை தன்னால் வெற்றிகொள்ள முடியாது என்பதை உணர்ந்த ஜெயலலிதா முதல்வர் கருணாநிதியை எதிர்க்கும் துணிவு விஜயகாந்துக்குத் தான் உள்ளது என்று மறை முகமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக தனது கட்சியை வளர்ப்பதற்கு விஜயகாந்த் கடுமையாக உழைத்து வருகிறார். பந்தயத்துக்கு முன்பே போட்டியிலிருந்து விலகிய ஜெயலலிதா விஜயகாந்துக்கு விட்டுக் கொடுத்துள்ளார்.
யாருடனும் கூட்டணி சேராது தனித்து நின்று தனது பலத்தைக் காட்டும் விஜயகாந்தின் வளர்ச்சியால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெரும் பாதிப்படைந்துள்ளது. தமிழக இடைத் தேர்தலிலும் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயம் ஜெயலலிதாவைப் பற்றியுள்ளது.
இடைத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகக் கூறிய ஜெயலலிதா, ஐந்து தொகுதிகளிலும் உள்ள தனது கட்சித் தொண்டர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறவில்லை. இடைத் தேர்தல் நடைபெற உள்ள தொகுதியில் உள்ள வாக்காளர்களை ஜெயலலிதா நட்டாற்றில் விட்டுள்ளார். ஜெயலலிதாவின் இந்த முடிவு திராவிட முனனேற்றக் கழகத்துக்கு சாதகமாக உள்ளது.
திருமங்கலம் இடைத் தேர்தலிலும் நாடாளுமன்றப் பொதத் தேர்தலிலும் வாக்காளர் களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டின. பலமான எதிர்க்கட்சி இல்லையென்றால் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் நிலை ஏற்பட வாய்ப்பு இல்லை.
இடைத் தேர்தலின் மூலம் முதல்வர் கருணாநிதியும் விஜயகாந்தும் நேருக்கு நேர் மோதும் சூழ்நிலை உருவாகி உள்ளது. முதல்வர் கருணாநிதியா, விஜயகாந்தா என்ற போட்டிக்கு ஜெயலலிதா வழிவகுத்துள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா வெளிப்படையாகக் கூறவில்லை. முதல்வர், தமிழக அரசுக்கு எதிரானவர்கள் அனைவரும் விஜயகாந்தின் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றே ஜெயலலிதா விரும்புகிறார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியை தட்டிப் பறித்த விஜயகாந்தின் கட்சி வெற்றி பெறுவதற்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் முழு மூச்சாகச் செயற்படுவதும் சந்தேகமானதே.
தமிழக முதல்வர் கருணாநிதியை வீழ்த்துவதற்கு விஜயகாந்தை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த முயற்சிக்கிறார் ஜெயலலிதா. விஜயகாந்தின் இந்த வளர்ச்சி ஜெயலலிதாவுக்கு தான் ஆபத்தானதாக முடியும்.
தமிழக அரசின் தவறான செயற்பாடுகளை எதிர்க்க திராணியற்ற ஜெயலலிதாவின் முடிவினால் விஜயகாந்தின் செல்வாக்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
விஜயகாந்த், ஜெயலலிதா, வைகோ, டாக்டர் ராமதாஸ், இடதுசாரி தலைவர்கள் ஆகியோரை எதிர்த்து களமிறங்க வேண்டிய முதல்வர் கருணாநிதி விஜயகாந்தை மட்டும் எதிர்க்கும் இலகுவான சூழ்நிலையை ஜெயலலிதா ஏற்படுத்தியுள்ளார்.
தொண்டாமுத்தூர், கம்பம் ஆகிய தொகுதிகள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகள். பாகூர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை. இளையான்குடி தொகுதி திராவிட முன்னேற்றக் கழகத்துக்குரியதாயினும் அங்கு வெற்றி பெற்ற ராஜ கண்ணப்பன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஐக்கியமாகி விட்டார். வெற்றி வாய்ப்பு உள்ள நான்கு தொகுதிகளையும் தாரைவார்த்து விட்டார் ஜெயலலிதா.
மிக நீண்ட காலத்தின் பின்னர் தமிழக அரசியலில் இரு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் உண்மையான ராஜதந்திரி யார் என்பதை தமிழக இடைத் தேர்தல் முடிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வர்மா
வீரகேசரி 26/07/09