Sunday, July 5, 2009

தேர்தல் தோல்விகள் தந்த பாடத்தால்கூட்டணிக்கு தயாராகிறார் விஜயகாந்த்



தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு படுதோல்வியடைந்த விஜய காந்த் கூட்டணி சேர்வது பற்றி ஆலோசித்து வருகிறார். முன்னர் விஜயகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்ற செய்தி வெளியானதும் தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. விஜயகாந்தின் அரசியல் கட்சி பற்றிய பரபரப்பு தேர்தல் முடிவுகளின் பின் காற்றுப்போன பலூன் போல் சோர்ந்து விட்டது.
தமிழகத்தில் அதிகளவு வாக்கு வங்கியை வைத்துள்ள திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டும் கூட்டணியின் பலத்திலேயே தேர்தல்களில் வெற்றி பெறுகின்றன.
விஜயகாந்த் தனித்து தேர்தலைச் சந்தித்தால் வெற்றி பெற முடியாது. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் வெற்றியை விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் ஆட்டம் காண வைத்தது.
தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது திராவிட முன்னேற்றக் கழகம் அறுதிப் பெரும் பான்மை பெறாததற்கு விஜயகாந்தும் ஒரு காரணம். ஆனால், இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் வெற்றியைத் தடுத்து நிறுத்த விஜயகாந்தினால் முடியவில்லை. கருத்துக் கணிப்பு அனைத்தையும் தவிடுபொடியாக்கி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலின்பேõது காங்கிரஸ், பாரதிய ஜனதாக் கட்சி ஆகியன விஜயகாந்துக்கு தூதுவிட்டதாக தகவல் வெளியானது. தனித்து நின்று தனது பலத்தைக் காட்ட வேண்டும் என்று விஜயகாந்த் அடம்பிடித்தார். அதன் பிரதிபலனாக விஜயகாந்தின் கட்சி படுதோல்வி அடைந்தது.
நாடாளுமன்றத் தேர்தலின்போது விஜயகாந்த் யாருடனும் கூட்டணி சேர்ந்துவிடக் கூடாது என்பதில் முதல்வர் கருணாநிதி உறுதியாக இருந்தார். அவர் எதிர்பார்த்தது போலவே விஜயகாந்த் யாருடனும் கூட்டணி சேராது தனித்து தேர்தலைச் சந்தித்தார்.
விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், ஆகியவற்றின் வெற்றி விகிதத்தை குறைத்ததே தவிர, விஜயகாந்தின் கட்சியினõல் வெற்றி பெற முடியவில்லை.
இனியும் தனி ஆவர்த்தனம் வேண்டாம் கூட்டுக்கச்சேரிதான் சிறந்தது என்ற கட்சித் தொண்டர்களின் குரல் விஜயகாந்தின் காதில் ஆழமாகப் பாய்ந்துள்ளது. அதன் காரணமாக கூட்டணி சேரலாம் என்ற கருத்து விஜயகாந்தின் மனதை அசைத்துள்ளது.
தமிழக சட்டமன்ற இடைத் தேர்தலில் விஜயகாந்த் கூட்டணி சேரலாம் என்ற தகவல் பரபரப்பாக உலாவ தொடங்கி விட்டது. ஜெயலலிதாவுடன் விஜயகாந்த் சேரலாம் என்ற கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் வளர்ச்சியைத் தடுக்கக் கூடிய சக்தி விஜயகாந்திடம் இருக்கிறது என்று அவரது கட்சியைச் சேர்ந்த சிலர் கருதுகின்றனர்.விஜயகாந்தும் ஜெயலலிதாவும் இணைந்தால் ஜெயலலிதாவுக்குத்தான் நன்மை அதிகம். விஜயகாந்தின் வளர்ச்சிக்கு அது எந்த வகையிலும் நன்மை அளிக்கப் போவதில்லை. ஜெயலலிதாவுடன் விஜயகாந்த் இணையும் பட்சத்தில் வைகோவின் மதிப்பு சற்றுக் குறையலாம். முதல்வர் கருணாநிதியை மூர்க்கமாக எதிர்க்கும் வைகோவுக்கு இது தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்.விஜயகாந்துக்கு ஜெயலலிதா அதிக முக்கியத்துவம் வழங்கினால் வைகோவின் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கட்சியிலிருந்து முக்கியஸ்தர்கள் பலர் வெளியேறிய நிலையில் கட்சியை வளர்ப்பதற்கு பல உத்திகளை வகுத்திருக்கும் வைகோவுக்கு விஜயகாந்த் புதிய தலைவலியை ஏற்படுத்துவார்.
அதேவேளை, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அணியில் கூட்டணி அமைத்த விஜயகாந்தின் பரம வைரியான டாக்டர் ராமதாஸ் தனது முடிவை பரிசீலனை செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இணைந்து படுதோல்வி அடைந்த ராமதாஸ் அதிலிருந்து வெளியேறுவதற்கு விஜயகாந்த், ஜெயலலிதா இணைப்பு காரணமாக அமையலாம்.
விஜயகாந்த் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேரப் போகிறார் என்ற தகவல் ஒருபக்க செய்தியாகவே வெளியாகி உள்ளது. ஜெயலலிதா அல்லது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்கள் இது பற்றி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்துவதற்கு விஜயகாந்தின் உதவியை ஜெயலலிதா எதிர்பார்க்கிறார். ஆனால், வெளிப்படையாக இது பற்றி எந்தக் கருத்தையும் அவர் வெளியிடவில்லை.
ஜெயலலிதா, வைகோ, டாக்டர் ராமதாஸ், தா. பாண்டியன், வரதராஜன் ஆகியோர் இணைந்த மிகப் பெரிய கூட்டணியால் கூட திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியை வீழ்த்த முடியவில்லை. விஜயகாந்தும் ஜெயலலிதாவும் இணைந்தால் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியுமா என்பதும் சந்தேகம் தான்.விஜயகாந்தின் ரசிகர் பட்டாளம் தான் கட்சித் தொண்டர்களாக உள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் வாக்கு வங்கியை முறியடிக்கும் சக்தி விஜயகாந்தின் தொண்டர்களிடம் இல்லை. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் கொள்கைகளை பிடிக்காதவர்கள் தான் விஜயகாந்துக்கு வாக்களித்தார்கள். இவர்கள் விஜயகாந்தின் கொள்கையினால் கவரப்பட்டு வாக்களிக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குமான எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர்.
விஜயகாந்த், ஜெயலலிதாவுடன் இணைந்தால் விஜயகாந்தின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்படும். தமிழக சட்டமன்ற, இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களின்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகளையே விஜயகாந்த் பிரித்தார். விஜயகாந்த் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சங்கமமானால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான வாக்குகளை அவர் இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இந்திய நாடாளுமன்ற தேர்தலின்போது பலமான கட்சியுடன் கூட்டணி சேர வேண்டும் என்று விஜயகாந்தின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். கட்சியை வளர்ப்பதற்கு கூட்டணி தேவை என்பதை கட்சித் தொண்டர்கள் உணர்ந்துள்ளனர். விஜயகாந்தின் கௌரவம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. யாருடனாவது கூட்டணி சேர வேண்டும் என்ற மனநிலை விஜயகாந்திடம் தோன்றி உள்ளது. அது ஜெயலலிதாவா காங்கிரஸா என்று அவர் இன்னமும் முடிவு செய்யவில்லை. இன்றைய நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து காங்கிரஸை இலகுவில் பிரிக்க முடியாது.
கப்டன் என்று செல்லமாக அழைக்கப்படும் விஜயகாந்த் தொடர்ந்தும் கப்டனாக இருப்பாரா அல்லது சிப்பாயாக மாறுவாரா என்பதை தமிழக சட்டமன்ற இடைத் தேர்தல் வெளிச்சத்துக்குக் கொண்டு வரும்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 05/07/09

No comments: