Sunday, July 19, 2009
எதிர்க்கட்சியை அடக்க பலிக்கடாவானதுரைமுருகன்
தமிழக சட்டமன்றத் தேர்தல் பற்றி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவேளையில் துரை முருகனிடம் இருந்த பொதுப் பணித் துறையை முதல்வர் கருணாநிதி பறித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளையும் களங்கங்களையும் துடைத்தெறிந்து பிரச்சினைகள் எதுவுமற்ற கட்சியை மகன் ஸ்டாலினின் கையில் ஒப்படைக்க விரும்புகிறார் முதல்வர் கருணாநிதி.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான துரை முருகனிடம் இருந்து அமைச்சுப் பதவியை முதல்வர் பறித்தெடுப்பார் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை.
மிக முக்கிய அமைச்சான பொதுப்பணித் துறை, சட்டம் ஆகிய இரு அமைச்சுப் பொறுப்புக்களையும் அலங்கரித்த துரைமுருகன் தனக்கு இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
தமிழக அரசுக்கும் பெரும் தலைவலியைக் கொடுக்கும் மணல் கொள்ளை, மணல் கடத்தல் பாலத்தின் குறுக்கே ஆந்திர அரசு அணைகட்டுவதற்கு எடுத்து வரும் துரித முயற்சி ஆகியனவே துரைமுருகனிடம் இருந்து பொதுப்பணித்துறை கைமாறியதற்கு பிரதான காரணமாகும்.
1967 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா முதல்வராக இருந்த போது கலைஞர் கருணாநிதி பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்தார். அதன் பின்னர் படிப்படியாக முன்னேறி அறிஞர் அண்ணாவுக்கு பின்னர் தமிழகத்தின் முதல்வரானார்.
பொதுப்பணித் துறையை மகன் ஸ்டாலினுக்குக் கொடுக்க முதல்வர் விரும்பிய போது குறுக்கே நின்று அதனை துரைமுருகன் பெற்றுக் கொண்டார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்ட சபைக்குத் தெரிவானார் துரைமுருகன். முதல்வர் ஸ்டாலினின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். முதல்வரின் குடும்பத்துடன் மிகவும் நெருக்கமாகப் பழகுபவர். துரைமுருகன் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட போது கண்டும் காணாதது போல் இருந்த முதல்வர் கருணாநிதி எடுத்த இந்த அதிரடி முடிவு கழகத்தினுள் இருக்கும் மூத்த அரசியல்வாதிகளையும் யோசிக்கத் தூண்டியுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஆற்றுப்படுக்கைகளில் மணல் அகழ்வதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. அரசாங்கம் அனுமதி வழங்காத இடங்களில் சட்டவிரோதமாக மணல் அகழப்படுகிறது. குறைந்த விலைக்கு வாங்கப்படும் இந்த மணல் கொள்ளை விலையில் அயல் மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
ஜெயலலிதா, டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் இந்த மணல் கொள்ளை பற்றி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார்கள். மணல் திருட்டு பற்றி சட்டசபையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமைக் கட்சியான காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டசபையில் ஆதாரங்களை அள்ளி வீசினர்.
நிலைமை கட்டுமீறிப் போவதை உணர்ந்த முதல்வர் கருணாநிதி தனது சகாக்களை நம்பாது உளவுத்துறை மூலம் உண்மையான தகவல்களைப் பெற்றுக் கொண்டார்.
பொதுப்பணித் துறையின் கீழ் வரும் அபிவிருத்திப் பணிகளின் ஒப்பந்தங்கள் அனைத்தும் துரைமுருகனின் உறவினர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன.
திராவிட முன்னேற்றக் கழகத்தவர்களைக் கணக்கில் எடுக்காது கர்நாடகத்தில் உள்ள தனது உறவினர்களைக் கவனித்ததனால் அமைச்சுப் பதவியை இழந்துள்ளார் துரைமுருகன்.
துரைமுருகனிடமிருந்து பொதுப்பணித்துறை பறிக்கப்பட்டதற்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து கடுமையான எதிர்ப்பு எதுவும் வெளிவரவில்லை. துரைமுருகனின் ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகவே அனைவரும் கருதுகின்றனர். துரைமுருகனுக்கு ஏற்பட்ட நிலைமையினால் ஏனைய அமைச்சர்கள் சிலர் கதிகலங்கிப் போயுள்ளனர்.
துரைமுருகனிடமிருந்து பொதுப்பணித் துறை அமைச்சைப் பறித்ததனால் எதிர்க்கட்சிகளின் வாய் அடக்கப்பட்டுள்ள அதேவேளை அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தும் அமைச்சர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார் முதல்வர் கருணாநிதி.
துரைமுருகனிடமிருந்து அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டது முதல்வர் கருணாநிதியின் தனிப்பட்ட முடிவு. தமிழக அரசுக்கு களங்கம் விளைவிப்பவர்களின் மீது முதல்வர் எடுத்திருக்கும் இந்த நடவடிக்கையை திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழு ஏகமனதாக அங்கீகரிக்கும். ஆற்காடு வீரõசாமி, துரைமுருகன் ஆகியோர் மீது முதல்வர் கருணாநிதி எடுத்திருக்கும் நடவடிக்கை கட்சியை வலுப்படுத்தவும் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரானவர்களை ஓரம்கட்டவும் உதவுகிறது என்ற கருத்து உள்ளது.
துணை முதல்வர் ஸ்டாலின் முதல்வராக அரியணை ஏறும் போது திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து எதிர்ப்பு எழக் கூடாது என்பதிலும் முதல்வர் கருணாநிதி உறுதியாக உள்ளார்.
இதேபோன்ற அதிரடி நடவடிக்கையை கடந்த ஆட்சிக் காலத்தின் போது முதல்வர் கருணாநிதி எடுத்திருந்தால் சிறுபான்மை அரசு என்ற விமர்சனம் வெளிவந்திருக்காது. துணை முதல்வர் ஸ்டாலினின் வளர்ச்சிக்காக அவருக்கு எதிர்ப்புத்தரக் கூடிய சக்திகள் ஓரங்கட்டப்படுகிறது.
வர்மா
வீரகேசரிவாரவெளீயீடு 19/07/2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment