.jpg)
.bmp)
கர்நாடக இசை அரங்கிலும் தமிழ்த்திரை உலகிலும் 65 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த டி. கே. பட்டம்மாள் தனது 90 ஆவது வயதில் காலமானார். தோடி ராகத்துக்கு ராஜரத்தினம்பிள்ளை போல் பைரவி ராகத்துக்கு டி. கே. பட்டம்மாள் என்பது இசை உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.
10 வயதுப் பாலகியாக இருந்த போது மெட்ராஸ் கோப்பரேசன் ரேடியோ (அகில இந்திய வானொலி) யில் பாடி சங்கீத ரசிகைகளினதும் இசை மேதைகளினதும் பாராட்டைப் பெற்றார். 1932 ஆம் ஆண்டு 13 ஆவது வயதில் சென்னை ரசிக ரஞ்சனி சபாவில் ரசிகர்கள் முன்னிலையில் பாடி தனது இசைப் பயணத்தை மெருகூட்டினார்.
1919 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி காஞ்சிபுரத்தில் தாமல் கிருஷ்ண சாமி தீட்சிதருக்கும் காந்திமதிக்கும் மகளாகப் பிறந்தார். இவருடைய இயற் பெயர் அலமேலு. தகப்பன் செல்லமாக பட்டு என்று அழைத்ததே காலப் போக்கில் பட்டம்மாளாக மாறியது. சகோதரர்களான டி. கே. ரங்கநாதன், டி. கே. ஜெயராமன் ஆகியோரைப் போன்று சிறு வயதிலேயே இசையில் அதிக ஆர்வம் காட்டினார்.
.jpg)
டி. கே. பட்டம்மாள், எம். எஸ். சுப்புலக்ஷ்மி, எம். எல். வசந்தகுமாரி ஆகிய மூவரும் கர்நாடக இசை மேடைகளிலும் திரைப்படங்களிலும் கொடிகட்டிப் பறந்த முப்பெரும் தேவியராக விளங்கினர். அந்தக் காலத்து ஆண் பாடகர்களுக்கு இவர்கள் மூவரும் சவாலாக விளங்கினர்.
.jpg)
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது டி. கே. பட்டம்மாள் பாடிய தேச பக்திப் பாடல்களும் பாரதி பாடல்களும் சுதந்திர வேட்கைக்கு உயிரூட்டின. இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க பிரிட்டன் முடிவு செய்து நாள் குறித்து விட்டது. விடிந்தால் நமது நாடு சுதந்திரமடைந்து விடும் என்ற மகிழ்ச்சியில் இந்திய மக்கள் இருந்த வேளை 1947 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14 ஆம் திகதி இரவு அகில இந்திய வானொலியில் டி. கே. பட்டம்மாள் பாடிய ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்ற பாரதியாரின் தேச பக்திப் பாடல் நேரடியாக ஒலிபரப்பானது. சுதந்திரக் காற்றை சுவாசிக்க தயாராக இருந்தவர்கள் டி. கே. பட்டம்மாளின் பாடலால் பேருவகை எய்தினர்.
திருநெல்வேலியில் நடைபெற்ற இசைக் கச்சேரி ஒன்றில் பாரதியார் படல்களை டி. கே. பட்டம்மாள் பாடிய போது முன்வரிசையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த பாரதியாரின் மனைவி செல்லம்மா உணர்ச்சிவசப்பட்டு டி. கே. பட்டம்மாளைக் கட்டிப் பிடித்து கண்ணீர்மல்க பாராட்டினார்.
இசைத் துறையில் டி. கே. பட்டம்மாள் ஆற்றிய சேவைக்காக 60 க்கு மேற்பட்ட விருதுகளும் பட்டங்களும் பெற்றார். பத்மபூஷன், பத்ம விபூஷன், சங்கீத சாகர ரத்னா, சங்கீத கலாநிதி, கான சரஸ்வதி, கலை மாமணி ஆகியன குறிப்பிடத்தக்கன. திருப்பதி தேவஸ்தானம் இவரை தனது அஸ்தானவதி வானாக பெருமைப்படுத்தியது.
பட்டம்மாளின் கணவன் பெயர் ஈஸ்வரன். இவருக்கு 95 வயதாகிறது. இவர்களுக்கு லட்சுமணன், சிவகுமார் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
சிவகுமாரின் மகள்தான் பிரபல இசைப் பாடகி நித்திய ஸ்ரீ மகாதேவன். இவரும் கர்நாடக இசையில் பாண்டித்தியம் பெற்று பின்னர் சினிமாவில் நுழைந்தவர். டி. கே. பட்டம்மாளும் நித்திய ஸ்ரீ மகாதேவனும் பாடிய பாரதிப் பாடல்கள் அடங்கிய அல்பம் பரபரப்பாக விற்பனையாகின.
தேசபக்திப் பாடல்களும் பாரதி பாடல்களும் பட்டம் மாளை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும்.
ரமணி
மெட்ரோநியூஸ்
24/07/09
No comments:
Post a Comment