Tuesday, August 18, 2009

உற்சாகத்தில்தி.மு.கவினர் சோகத்தில் அ.தி.மு.கதொண்டர்கள்

தமிழக இடைத் தேர்தலைப் பகிஷ்கரிப்பதற்கு அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா கூறிய முக்கிய காரணிகளில் ஒன்றான மின்னணு வாக்கு இயந்திரத்தில் தில்லு முல்லு என்ற குற்றச்சாட்டு பிசுபிசுத்துப் போயுள்ளது.
மின்னணு இயந்திரத்தில் முறைகேடு எது
வும் செய்ய முடியாது எனக் கூறிய தேர்தல் ஆணையகம் முறைகேட்டை நிரூபிக்கும்படி வேண்டுகோள் விடுத்தது. மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு உண்டு என்று பத்திரிகையாளர்கள் மாநாட்டில் உரத்துக் கூறிய ஜெயலலிதாவும் டாக்டர் ராமதாஸும் தங்கள் குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறிவிட்டனர். மின்னணு வாக்கு இயந்திரத்தில் குறைபாடு உண்டு என்று கூறி தேர்தலைப் பகிஷ்கரிப்பதனால் திராவிட முன்னேற்றக் கழகமும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகமுமே இலாபமடையப் போகின்றன.
விஜயகாந்தின் அரசியல் வளர்ச்சியைத்
தடுக்க வேண்டிய பாரிய பொறுப்பில் இருந்து ஜெயலலிதா தவறிவிட்டார். விஜயகாந்த் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று திட்டமிட்டு முதல்வர் கருணாநிதி செயற்பட்டு வருகிறார். ஆனால், ஜெயலலிதாவோ விஜயகாந்த் வளர்வதற்காக விட்டுக் கொடுத்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் தமிழக இடைத் தேர்தல்களிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட்டபோது அதற்குச் சவாலாக விளங்கிய விஜயகாந்த் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கியை நம்பி இடைத் தேர்தலில் களமிறங்கியுள்ளார்.
இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வாக்களிக்கக்
கூடாது என்று ஜெயலலிதா கட்டளை பிறப்பித்தபோதும் வாக்களிக்க விருப்பம் உடையவர்களை வளைத்துப் போடுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகமும் விஜயகாந்தின் கட்சியும் போட்டியிடுகின்றன.
2011 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலும் இதே இயந்திரங்கள் தான் பாவிக்கப்படும் அப்போதும் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் மத்தியில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் இருக்கப் போகின்றன. அந்தத் தேர்தலையும் ஜெயலலிதா புறக்கணிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த இடைத் தேர்தலைப் போன்றே 2011 ஆம் ஆண்டும் சகல அரச அதிகாரங்களுடனும் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலைச் சந்திக்கும் அதற்காக பயந்து தேர்தலைப் புறக்கணிப்பாரா ஜெயலலிதா என்ற கேள்விக்கு அவர் இன்னமும் பதில் கூறவில்லை.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகமும், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியன வாக்குப் பதிவு இயந்திரத்தில் குறை இருப்பதாகக் கூறுகின்றன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இடதுசாரிகள் வாக்களிக்கும் இயந்திரத்தில் குறை இருப்பதாகக் கூறவில்லை.
இடைத் தேர்தலைப் புறக்கணிக்கும் ஜெயலலிதாவின் முடிவை அக்கட்சியில் உள்ள பலர் ஏற்றுக் கொள்ளவில்லை. அதேவேளை, இதனை வெளிப்படையாக விமர்சிப்பதற்கு அவர்கள் தயங்குகின்றனர். ஜெயலலிதாவின் இந்த முடிவினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் உற்சாகம் இழந்து உள்ளனர்.
தேர்தலில் வாக்களிப்பது அந்த நாட்டுப் பிரஜையின் ஜனநாயகக் கடமை. திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் போட்டியிட உள்ள பலம் வாய்ந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கும் ஜெயலலிதாவின் தீர்மானம் கட்சியின் முடிவு அல்ல என்பது வெளிப்படையானது. தனது தனிப்பட்ட தீர்மானத்தையே ஜெயலலிதா கட்சிக்குள் திணித்துள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் ஏற்பட்டிருக்கும் சிறு சலசலப்பும் ஜெயலலிதாவின் இந்தத் தீர்மானத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. முதல்வர் கருணாநிதி தனது வாரிசுகளை அரசியல் களத்தில் இறக்கி விட்டது போன்று ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரியான சசிகலா தனது உறவினர்களை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் பொறுப்பான பதவிகளில் நியமித்துள்ளார்.
சசிகலாவின் நடவடிக்கைகள் பிடிக்காது அதனை விமர்சித்தவர்கள் மீது ஜெயலலிதாவின் கோபப் பார்வை திரும்பியுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணன், என்.வி. சேகர் ஆகியோர் வெளியேற்றப்படுவதற்கு சசிகலாவும் காரணம் என்று நம்பப்படுகிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து
வெளியேற்றப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் பத்தாயிரம் ஆதரவாளர்களுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையுடன் முரண்பட்டிருப்பவர்களையும் சசிகலாவின் நடவடிக்கைகளைப் பிடிக்காது வெறுப்புற்றிருப்பவர்களையும் தன் பக்கம் இழுக்கும் நடவடிக்கையில் திராவிட முன்னேற்றக் கழகம் இறங்கியுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் புள்ளிகள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைவது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பாதகமாகவும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சாதகமாகவும் உள்ளது. இதேவேளை திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள சில முக்கிய புள்ளிகளின் செல்வாக்கும் குறையும் சூழ்நிலையும் தோன்றியுள்ளது. அவர்களைத் திருப்திப்படுத்த வேண்டிய நிலை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தோன்றி உள்ளது. கடந்த தேர்தலின்போது எதிரும் புதிருமாக செயற்பட்டு ஒருவர் மீது ஒருவர் வசைபாடியவர்கள் இன்று ஒரே மேடையில் தோன்றி ஒருவரை ஒருவர் புகழும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஐந்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் திராவிட முன்னேற்றக் கழகம் களத்தில் இறங்கியுள்ளது. வெற்றியின் சதவீதம் கூட வேண்டும். எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் கட்டுப்பணம் இழக்க வேண்டும் என்ற செயற்றிட்டத்துடன் திராவிட முன்னேற்றக் கழகம் களத்தில் இறங்கியுள்ளது.
ஒரே ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் விஜயகாந்த் இடைத் தேர்தலில் களமிறங்கி உள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் வாக்குகள் சிதறுவதற்குரிய சந்தர்ப்பம் இல்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் வாக்குகள் சிதறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் இலாபமடையப் போவது யார் என்ற கேள்விக்கான விடை இடைத் தேர்தலின் பின்னர் தெரிந்துவிடும்
.வர்மா


வீரகேசரிவாரவெளியிடு 16/08/09

No comments: