Monday, August 31, 2009
அரசியலில் ஆழம் பார்க்கும் விஜய்க்கு வலைவீச முயற்சிக்கும் காங்கிரஸ் கட்சி
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கும் ராகுல்காந்தி தமிழகத்தின் பிரபல நடிகரான விஜøய சந்தித்து தமிழக அரசியலில் பெரும் புயலைத் தோற்றுவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மீது இளைஞர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு கவர்ச்சிகரமான தலைவர் ஒருவரைத்தேடும் காங்கிரஸ், விஜயை தனது பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.
ராகுல் காந்தி அடுத்த மாதம் தமிழகத்துக்கு விஜயம் செய்து இளைஞர் காங்கிரஸை பலப்படுத்த திட்டமிட்டுள்ளார். இந்தப் பின்னணியில் டில்லியில் விஜயை ராகுல் காந்தி சந்தித்ததில் அரசியல் நோக்கம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தயவிலே தான் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெறுகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தயவு இன்றி காங்கிரஸ் கட்சியினால் வெற்றி பெற முடியும் என்ற நிலையை உருவாக்குவதற்கான வேலைத்திட்டத்தை ராகுல் காந்தி ஆரம்பித்துள்ளார்.
நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தின் மூலம் பல உதவித்திட்டங்களைச் செய்து வருகிறார். தனது மகன் அரசியல் வாதியாக வேண்டும் என்று விஜயின் தந்தை சந்திரசேகர் விரும்புகிறார். அதன் முன்னோடியாகவே விஜய் ரசிகர் மன்றக் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. ரசிகர் மன்றத்தையும் தாண்டி மக்கள் நற்பணி இயக்கம் தொடங்கிய விஜய் அந்த இயக்கத்தின் மூலமும் ஏழை மக்களுக்கு உதவி செய்கிறார். அண்மையில் நடந்த வைபவம் ஒன்றில் உரையாற்றிய விஜய், அரசியலில் ஆர்வம் உண்டு. ஆனால், அதற்குரிய நேரம் இது அல்ல என்றார்.
விஜயின் மனதில் அரசியல் ஆர்வம் உள்ளது. அதற்குரிய காலம் வரும் வரை அவர் காத்திருக்க விரும்புகிறார். பலமான வாக்கு வங்கி உள்ள அரசியல் கட்சிகளும், நடிகர்களின் அரசியல் கட்சிகளும் தேர்தல்களில் படுதோல்வி அடைந்ததைத் தெரிந்து கொண்டே விஜய் தனது அரசியல் ஆசையை வெளிப்படுத்தினாரே தவிர அரசியலில் தீவிரமாக இறங்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இல்லை.
அரசியலா சினிமாவா என்ற கேள்விக்கு சினிமாதான் இப்போதைக்கு முக்கியம் என்ற முடிவிலே விஜய் உள்ளார். ராகுல் காந்தி விஜய் சந்திப்பு பற்றிய முழு விபரம் உடனடியாக வெளிவரவில்லை. ராகுல் காந்தி தமிழகத்துக்கு விஜயம் செய்யும் போது விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றிய மர்ம முடிச்சு சிலவேளை அவிழ்க்கப்படலாம். தற்போது அரசியலில் பிரவேசிப்பதில்லை என்று விஜய் முடிவு செய்தால் காங்கிரஸ் புதியதொரு கூட்டணியை நாட வேண்டிய நிலை ஏற்படும்.
திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கூட்டணி பலமானதாக உள்ளது. ஆனால், இரண்டு கட்சியும் ஒன்றை ஒன்று சந்தேகத்துடனேயே பார்க்கின்றது. மத்திய அரசில் திராவிட முன்னேற்றக்கழகம் எதிர்பார்த்த அமைச்சுக் கள் கிடைக்கவில்லை. தமிழக அரசில் அமைச்சராக வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் ஆசை இன்னமும் நிறைவேறவில்லை. ஒற்றுமையாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் இரண்டு கட்சிகளுக்கும் இடையே உட்பூசல்கள் அதிகமாக உள்ளன. காங்கிரஸின் ஆதரவு இன்றி திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சி செய்ய முடியாது. இதேவேளை திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு இல்லாமல் காங்கிரஸ் கட்சி தமிழக தேர்தலில் வெற்றி பெறுவது கடினம்.
தமிழகத்தில் செல்வாக்கோடு இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் தேசிய கட்சியாக மாறவேண்டும் என்று முதல்வர் கருணாநிதி விரும்புகிறார். இந்திய மத்திய அரசும் மாநில அரசுகளும் கூட்டணியின் பலத்திலேயே உள்ளன. மத்திய அரசியலில் பலமான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி விரும்புகிறார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒரு சிலர் விரும்புகின்றனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடர் தோல்விகளின் பின்னர் அதனுடன் கூட்டணி சேர்வது பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலை உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியைப் பிடிக்காதவர்கள் சிலர் காங்கிரஸ் கட்சியில் உள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து போட்டியிட்டதனால் பெற்ற தொடர் வெற்றிகளால் அவர்களுடைய கருத்து அடிபட்டுப் போய்விட்டது. மாநிலக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற கருத்துடன் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சிலர் உள்ளனர். தமிழகத்தில் பிரபல நடிகரான விஜயை வளைத்துப் போட்டால் காங்கிரஸ் கட்சியின் பலம் அதிகரிக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடõகவே ராகுல்காந்தி விஜய் சந்திப்பு நடந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.
விஜய் அமைதியானவர், கூச்ச சுபாவம் உள்ளவர், அதிகம் பேசாதவர், ராகுல் காந்தியுடனான முதலாவது சந்திப்பில் காங்கிரஸில் சேர்கிறேன் என்று அவர் ஒப்புதலளித்திருக்க மாட்டார். தனது மக்கள் இயக்கத்தின் வளர்ச்சிக்கான மத்திய அரசிடமிருந்து சில உதவிகளை அவர் எதிர்பார்ப்பதாலும் இச்சந்திப்பு நடைபெற்றிருக்கலாம்.
திராவிட முன்னேற்றக்கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆகியவற்றின் போட்டியாளர் எனக் கருதப்பட்ட விஜயகாந்தின் கட்சி தமிழக இடைத்தேர்தலில் தோல்வியடைந்தது. திராவிட முன்னேற்றக்கழக கூட்டணிக்கு எதிராக வாக்குகளைப் பெற்று வெற்றியின் விகிதம் குறையும் என்ற ஊகங்கள் பொய்த்துவிட்டன. அண்ணா திராவிட முன்னேற்றக்கழக ஆதரவாளர்களின் வாக்குகள் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கணிசமான அளவில் விழுந்தன. ஜெயலலிதாவின் தேர்தல் பகிஷ்கரிப்பு திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் சாதகமாக அமைந்து விட்டது.
தமிழக இடைத் தேர்தலில் விஜயகாந்தின் கட்சி பெற்ற வாக்குகளின் விகிதம் அதிகரித்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியன தேர்தலில் போட்டியிடும் போது இப்போது பெற்ற விகிதம் குறைவடையும் நிலை உள்ளது.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியை தடுப்பதற்குரிய திட்டங்கள் எதுவும் இன்றி எதிர்க்கட்சிகள் தடுமாறுகின்றன. இந்த நிலையைப் பயன்படுத்தி கழகத்தை பலப்படுத்தும் நடவடிக்கைகளை முதல்வர் கருணாநிதி செய்து வருகிறார்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 27/08/09
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment