Sunday, March 7, 2010

உலகக்கிண்ணம்2010


போர்த்துக்கல்
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியை முதல் சுற்றில் இழந்து இரண்டாவது சுற்று வரை காத்திருந்தது போர்த்துக்கல். இலட்சக்கணக்கான உதைபந்தாட்ட ரசிகர்களின் கனவு நாயகனான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரசிகர்கள் இதனால் அதிர்ச்சியடைந்தனர். குழு ஒன்றில் விளையாடிய போர்த்துக்கல் 19 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பெற்றது. 10 போட்டிகளில் விளையாடிய போர்த்துக்கல் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றது. நான்கு போட்டிகளை சமப்படுத்தியது. ஒரு போட்டியில் தோல்வி அடைந்தது. 17 கோல்கள் அடித்த போர்த்துக்கலுக்கு எதிராக ஐந்து கோல்கள் அடிக்கப்பட்டன.
மஸ்டாவுக்கு எதிராக 4 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற போர்த்துக்கல் அடுத்து விளையாடிய நான்கு போட்டிகளிலும் பின்னடைவைச் சந்தித்தது. டென்மார்க்குக்கு எதிரான போட்டியில் 3 2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. சுவீடனுக்கு எதிராக இரண்டு போட்டிகளும் இரண்டு அணியும் கோல் எதுவும் அடிக்காது சமநிலையில் முடிந்தது. அல்பேனியாவுக்கு எதிரான போட்டியில் கோல் அடிக்காது சமநிலையில் முடிந்தது. அல்பேனியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 2 1 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் வெற்றி பெற்றது. டென்மார்க்குக்கு எதிரான இரண்டாவது போட்டி 1 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
போர்த்துக்கல் விளையாடிய ஏழு போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. ஒரு போட்டியில் தோல்வி அடைந்தது. நான்கு போட்டிகள் சமநிலையில் முடிந்தது. அதன் பின் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இரண்டாமிடத்தைப் பிடித்தது போர்த்துக்கல்.
டென்மார்க்குடனும், சுவீடனுடனும் நடைபெற்ற போட்டிகளில் போர்த்துக்கல் வெற்றி பெறவில்லை. ஏழு போட்டிகளில் போர்த்துக்கல்லுக்கு எதிராக கோல் அடிக்கப்படவில்லை. மூன்று போட்டிகளில் போர்த்துக்கல் கோல் அடிக்கவில்லை. மால்டாவுடனான இரண்டு போட்டிகளிலும் தலா 4 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியது போர்த்துக்கல்.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்காக போர்த்துக்கல்லுடன் மோதியது பொஸ்னியா. குழு ஐந்தில் 19 புள்ளிகளுடன் இரண்டாமிடம் பெற்றது பொஸ்னியா. 10 போட்டிகளில் விளையாடிய பொஸ்னியா ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியை சமநிலைப்படுத்தி மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்தது. 25 கோல்கள் அடித்த பொஸ்னியாவுக்கு எதிராக 13 கோல்கள் அடிக்கப்பட்டது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறுவதற்காக போர்த்துக்கல்லும், பொஸ்னியாவும் மோதின. இரண்டு போட்டிகளிலும் 1 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது போர்த்துக்கல்.
12 போட்டிகளில் விளையாடிய போர்த்துக்கல் 19 கோல்கள் அடித்தது. போர்த்துக்கல்லுக்கு எதிராக ஐந்து கோல்கள் அடிக்கப்பட்டன. 13 தடவை மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
மிகச் சிறந்த உதைபந்தாட்ட வீரரும் ரியல் மட்ரிட் அணியின் வெற்றியின் பிரதான காரணகர்த்தாவுமான கிறிஸ்ரியனோ ரொனால்டோ, பெபே, புரூனோ அல்விஸ், பொனிச்வா, ரிக்காடோ சாவர்கோ, சிமாவோ டெக்கோ ஆகிய வீரர்களின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. குழு ஜி யில் பிரேஸில், வடகொரியா, ஐவரிகோஸ்ட் ஆகியவற்றுடன் போர்த்துக்கல் உள்ளது.

No comments: