Friday, April 9, 2010

உலகக்கிண்ணம்2010


குழு "G
பிரேஸில், போர்த்துக்கல், ஐவொரிகா, வடகொரியா ஆகிய நாடுகள் குழு ஜி யில் உள்ளன. இந்தக் குழுவில் உள்ள மிகப் பலம் வாய்ந்த நாடான பிரேஸில் முதலிடம் பிடிக்கும். போர்த்துக்கல் இரண்டாவது இடத்தைப் பெறும். இரண்டாவது சுற்றில் விளையாட பிரேஸிலும் போர்த்துக்கலும் தகுதி பெறும்.
ஐந்து முறை உலகக் கிண்ண உதைபந்தாட்ட சம்பியனான பிரேஸில் ஆறாவது முறை உலகக் கிண்ணத்தைப் பெறும் நம்பிக்கையுடன் உள்ளது. 2002ஆம் ஆண்டு ஜேர்மனியையும் 1994ஆம் ஆண்டும் 1970ஆம் ஆண்டும் இத்தாலியையும் 1962ஆம் ஆண்டு செக்கஸ்லோவியாவையும் 1958ஆம் ஆண்டு சுவீடனையும் இறுதிப் போட்டியில் வென்று உலகக் கிண்ண சம்பியனானது பிரேஸில்.
1998ஆம் ஆண்டு பிரான்ஸுடனும் 1950ஆம் ஆண்டு உருகுவேயுடனும் இறுதிப் போட்டியில் விளையாடி தோல்வி அடைந்தது. 1978ஆம் ஆண்டு இத்தாலியையும் 1938ஆம் ஆண்டு சுவீடனையும் தோற்கடித்து மூன்றாம் இடத்தைப் பிடித்தது. 1974ஆம் ஆண்டு போலந்துடன் தோல்வி அடைந்து நான்காம் இடத்தைப் பிடித்தது.
1594 புள்ளிகளுடன் தர வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள பிரேஸில் இதுவரை நடைபெற்ற 18 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்துள்ளது. 92 போட்டிகளில் விளையாடிய பிரேஸில் 64 போட்டிகளில் வெற்றி பெற்று 14 போட்டிகளை சமப்படுத்தி 14 போட்டிகளில் தோல்வி அடைந்தது.
2006ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் அரையிறுதி வரை முன்னேறிய போர்த்துக்கல் ஜேர்மனியிடம் தோல்வி அடைந்து நான்காவது இடத்தைப் பிடித்தது. 1201 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ள போர்த்துக்கல் நான்கு முறை உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடியது. 19 போட்டிகளில் விளையாடிய போர்த்துக்கல் 11 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியை சமப்படுத்தி ஏழு போட்டிகளில் தோல்வி அடைந்தது.
874 புள்ளிகளுடன் தர வரிசையில் 22ஆவது இடத்தில் உள்ள ஐவொரிகா ஒரே ஒரு முறை மட்டும் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடியது. மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தது.
325 புள்ளிகளுடன் தர வரிசையில் 102ஆவது இடத்தில் உள்ள வடகொரியா ஒரு முறை உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடியது. நான்கு போட்டிகளில் விளையாடிய வடகொரியா ஒரு போட்டியில் வெற்றி பெற்று ஒரு போட்டியை சமப்படுத்தி இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தது.
ஜூன் மாதம் 15ஆம் திகதி போட் எலிஸபெத்தில் உள்ள நெல்சன் மண்டேலா மைதானத்தில் ஐவொரிக்காவும் போர்த்துக்கலும் விளையாடுகின்றன. அதே நாள் ஜோஹன்னஸ்பேர்க்கில் பிரேஸிலும் வடகொரியாவும் மோதுகின்றன. ஜூன் 20ஆம் திகதி ஜோஹன்னஸ் பேர்க்கில் பிரேஸிலும் ஐவொரிக்காவும் சந்திக்கின்றன.
ஜூன் 21ஆம் திகதி கேப்டவுனில் போர்த்துக்கலும் வடகொரியாவும் விளையாடுகின்றன. ஜூன் 25ஆம் திகதி டேர்பனில் பிரேஸிலும் போர்த்துக்கலும் மோதும் போட்டியைக் காண உதைபந்தாட்ட இரசிகர்கள் ஆவலாக உள்ளனர். அதே நாள் நெல்ஸ் பிரிட்டில் கொரியாவும் ஐவொரிக்காவும் மோதுகின்றன.

ரமணி
மெட்ரோநியூஸ்

No comments: