Thursday, March 24, 2011

போராடாமல் வீழ்ந்ததுமேற்கிந்தியத் தீவுகள்

பாகிஸ்தான் மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மிக இலகுவாக 10 விக்கெட்டால் வெற்றி பெற்றது.
பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற இப்போட்டியில் தட்டுத்தடுமாறி காலிறுதியில் நுழைந்த மேற்கிந்தியத் தீவுகள் போராடாமலே படுதோல்வியடைந்தது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் 43.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 112 ஓட்டங்கள் எடுத்தது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியில் எட்வர்ட் நிறுத்தப்பட்டு கிறிஸ் கெயில், சந்திரபோல், கெமர் ரோச் ஆகியோர் அணியில் இடம்பிடித்தனர்.
பாகிஸ்தான் அணியில் ரெஹ்மான் நீக்கப்பட்டு சயிட் அஜ்மல் சேர்க்கப்பட்டார்.
சந்திரபோல் ஆட்டமிழக்காது 44 ஓட்டங்கள் எடுத்தார். சர்வான் 24 ஓட்டங்களும் கெமர் ரோச் 16 ஓட்டங்களும் எடுத்தனர். ஏனையோர் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர்.
அப்ரிடி நான்கு விக்கெட்களையும் மொஹமட் ஹபீஸ், சயிட் அஜ்மல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் உமர்குல், அப்துல் ரஸாக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
113 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 113 ஓட்டங்கள் எடுத்து 10 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது. கம்ரன் அக்மல் 47 ஓட்டங்களும் மொஹமட் ஹபிஸ் 61 ஓட்டங்களும் எடுத்தனர். மொஹமட் ஹபிஸ் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
மூன்றாவது
குறைந்தபட்ச ஓட்டம்
நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக 112 ஓட்டங்களுக்கு சுருண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி உலகக் கிண்ண அரங்கில் தனது மூன்றாவது குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கையைப் பதிவு செய்தது.
முன்னதாக கென்யா (93 ஓட்டங்கள், 1996), அவுஸ்திரேலியா (110 ஓட்டங்கள், 1999) அணிகளுக்கு எதிராகக் குறைந்த எண்ணிக்கையை பெற்றது. இது சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் 9ஆவது குறைந்தபட்ச ஓட்டமாகும்.
கடந்த 2004இல் தென்னாபிரிக்காவுக்கு எதிராக 54 ஓட்டங்களுக்கு சுருண்டதே மேற்கிந்தியத் தீவுகளின் மோசமான ஓட்டங்களாகும். ஐந்து முறை 100 ஓட்டங்களுக்கும் குறைவாக சுருண்டது.
ஏழாவது முறை
நேற்று மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய பாகிஸ்தான் அணி உலகக் கிண்ண அரங்கில் ஏழாவது முறையாக (1979, 83, 87, 92, 96, 99, 2011) காலிறுதிக்கு முன்னேறியது. இதில் கடந்த 1979, 83, 87இல் அரையிறுதி வரை முன்னேறிய பாகிஸ்தான் அணி கடந்த 1992இல் முதன் முதலில் சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பின் 1996இல் காலிறுதி வரை முன்னேறிய பாகிஸ்தான் அணி 1999ல் இறுதியாட்டம்வரை முன்னேறியது. கடந்த 1975, 2003, 2007ல் நடந்த தொடர்களில் முதல் சுற்றோடு வெளியேறியது.
முதன் முறை
மேற்கிந்தியத் தீவுகள் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி உலகக் கிண்ண அரங்கில் முதன் முறையாக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக யு.ஏ.இ. (1996), நியூசிலாந்து (1999) அணிகளுக்கு எதிராக தலா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில் பாகிஸ்தான் அணி மூன்றாவது முறையாக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக நியூஸிலாந்து (1986), பங்களாதேஷ் (2008) ஆகியவற்றுக்கு எதிராக 10 விக்கெட்களில் வெற்றி பெற்றது.
ரமணிசூரன்.ஏ.ரவிவர்மா மெட்ரோநியூஸ்

No comments: