Sunday, March 27, 2011

ஆஸியின் வெற்றிப்பயணத்தை முடித்தது இந்தியா



இந்திய அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையே அஹமதாபாத்தில் நடைபெற்ற இரண்டாவது காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா, அரையிறுதியில் விளையாடத் தகுதிப்பெற்றது. 1996 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இறுதிப் போட்டியில் விளையாடிய அவுஸ்திரேலிய இந்தப் போட்டியில் காலிறுதியுடன் வெளியேறியது. யூசுப் பதான் நீக்கப்பட்டு ஷேவக் . விளையாடினார். அவுஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்பட்டு டேவிட் ஹசி விளையாடினார். நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் ஆறு விக்கட்டுகளை இழந்து 260 ஓட்டங்கள் எடுத்தது. ஷேன் வொட்சன், பிரட் ஹடின் ஜோடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கினர். அஹமதாபாத் மைதானம் சுழல்பந்து வீச்சுக்கு சாதகமானதால் முதல் ஓவரை அஸ்வின் வீசினார். முதலாவது ஓவரில் அஸ்வின் மூன்று ஓட்டங்களைக் கொடுத்தார். சகீர்கான் வீசிய இரண்டாவது ஒவரில் ஒரு ஓட்டம் எடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டம் இல்லாது அவுஸ்திரேலியா ஆட்டத்தை ஆரம்பித்தது. அவுஸ்திரேலியாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் நிதானமாக விளையாடினர். அஸ்வினின் பந்தில் ஸ்வீப் அடிக்க முயன்ற வொட்சன் 25 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பொண்டிங் களத்தில் புகுந்ததும் மறுமுனையில் நின்ற ஹெடின் அதிரடியை ஆரம்பித்தார். முனாப் பட்டேலின் ஒரு ஓவரில் மூன்று பௌண்டரிகள், யுவராஜின் ஒரு ஓவரில் இரண்டு பௌண்டரிகள் அடித்து இந்திய வீரர்களை திக்குமுக்காட வைத்தார் ஹடின். யுவராஜின் சுழலில் சிக்கிய ஹடின் 54 ஓட்டங்களில் ரெய்னாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். மைக்கல் கிளார்க் யுவராஜின் பந்தை எதிர்கொண்டு சகீர்கானிடம் பிடி கொடுத்து எட்டு ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சகீர் கானின் பந்தில் மைக்கல் ஹசி மூன்று ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இந்திய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சினால் 33.3 ஓவர்களில் நான்கு விக்கட்டுகளை இழந்து அவுஸ்திரேலியா 150 ஓட்டங்கள் எடுத்தது. வைட் 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். டேவிட் ஹசி களம் புகுந்ததும் பொண்டிங் அதிரடிக்கு மாறினார். யுவராஜின் ஒரு ஓவரில் ஒரு சிக்சர், பௌண்டரி அடித்தார். 44 48 ஆவது ஓவர்களை பவர்பிளே எடுத்த அவுஸ்திரேலியா 44 ஓட்டங்கள் எடுத்தது. பொண்டிங் தனது 40 ஆவது சதத்தை அடித்தார். 113 பந்துகளைச் சந்தித்த பொண்டிங் ஒரு சிக்சர் ஏழு பௌண்டரிகள் அடங்கலாக சதமடித்தார். இந்த உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலிய வீரர் ஒருவர் அடித்த முதலாவது சதம் இதுவாகும். பொண்டிங் ஹடின் ஜோடி 44 பந்துகளில் 55 ஓட்டங்கள் எடுத்தனர். அஸ்வினின் பந்தை ரிவஸ்ஸ்வீப் செய்ய முயன்ற பொண்டிங் 104 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். டேவிட் ஹஸி ஆட்டமிழக்காது 38 ஓட்டங்களும் ஜோன்சன் ஆட்டமிழக்காது ஆறு ஓட்டங்களும் எடுத்தனர். அவுஸ்திரேலிய 50 ஓவர்களில் ஆறு விக்கட்டுக்களை இழந்து 260 ஓட்டங்களை எடுத்தது. அஸ்வின், சகீர்கான், யுவராஜ் சிங் ஆகியேர் தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்ததினர். 261 என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 47.4 ஓவர்களில் ஐந்து விக்கட்டுக்களை இழந்து 261 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷெவாக், சச்சின் ஜோடி அவசரப்படாது நிதானமாக ஆட்டத்தை ஆரம்பித்தது. ஷெவாக் 15 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். டெண்டுல்கர் ஷெவாக் ஜோடி 44 ஓட்டங்கள் எடுத்தது. ஷெவாக் வெளியேறியதும் கம்பீர் களம் புகுந்தார். அரைச் சதம் அடித்த டெண்டுல்கர் 53 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கோஹ்லி களம் புகுந்தார். கோஹ்லி வாண வேடிக்கை காட்டுவார் என்று இரசிகர்கள் எதிர்பார்த்திருந்தவேளை 24 ஓட்டங்களுடன் கோஹ்லி வெளியேறினார். நான்காவது விக்கட்டில் இணைந்த யுவராஜ், கம்பீர் ஜோடி நம்பிக்கையளிக்கும் வகையில் விளையாடியது. ரன் அவுட் கண்டத்தில் இருந்து ஒருமுறை தப்பிய கம்பீர் யுவராஜின் எச்சரிக்கையையும் மீறி ஓட்டம் எடுக்க முனைந்தபோது ரன் அவுட் முறையில் ஆட்டம் இழந்தார். அணித் தலைவர் டோனி பிரட் லீயின் பந்தில் கிளார்க்கிடம் பிடிகொடுத்து ஏழு ஓட்டங்களுடன் வெளியேறினார். 37.3 ஓவர்களில் ஐந்து விக்கட்டுக்களை இழந்த இந்தியா 187 ஓட்டங்கள் எடுத்தது. ஆறாவது விக்கட்டில் இணைந்த யுவராஜ் ரெய்னா ஜோடி அதிரடியில் 64 பந்துகளில் 74 ஓட்டங்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்து பிரட் லீயின் ஓவரில் யுவராஜ் இரண்டு பௌண்டரிகள், ரெய்னா ஒரு பௌண்டரிகள் உட்பட 15 ஓட்டங்கள் அடிக்க பதற்றம் தணிந்தது. அடுத்து ஸ்டெயினின் ஓவரில் 13 ஓட்டங்கள் கிடைக்க இந்தியாவின் நெருக்கடிதணிந்தது. யுவராஜ் அரைச்சதம் அடித்ததும் இந்திய ரசிகர்கள் உற்சாகமானார்கள். பிரட் லீயின் பந்தில் ரெய்னா சிக்ஸர் அடிக்க இந்திய ரசிகர்கள் வெற்றிக் களிப்பில் மிதந்தனர். பௌண்டரி அடித்து இந்திய அணியை அரை இறுதிக்கு கொண்டு சென்றார் யுவராஜ் சிங். யுவராஜ் ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களையும் ரெய்னா ஆட்டமிழக்காது 34 ஓட்டங்களையும் எடுத்தனர். ஆட்ட நாயகனாக யுவராஜ் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகக் கிண்ணத் தொடரின் நான்காவது முறையாக ஆட்டநாயகனாகவும் விருதைப் பெற்றார் யுவராஜ். ரமணி சூரன்.ஏ.ரவிவர்மா மெட்ரோநியூஸ்

No comments: