Tuesday, March 8, 2011

பெரிய கட்சிகளின் பிடிவாதத்தால்சிறிய கட்சிகளுக்குக் கொண்டாட்டம்

தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 13 ஆம் திகதி நடைபெறும் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் சிறிய கட்சிகளுடன் தொகுதியில் பங்கீடு நடத்திவிட்டன. அதிக தொகுதிகள் கேட்டு பெரிய கட்சிகள் முரண்டு பிடிப்பதனால் சிறிய கட்சிகளுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
எந்தக் கூட்டணியில் சேர்வதென்று தெரியாது தடுமாறியது பாட்டாளி மக்கள் கட்சி அதிக தொகுதி அன்பு மணிக்கு ராஜ்ய சபை பதவி தருபவர்களுடன் தான் கூட்டணி என்பதே பாட்டாளிக் கட்சியின் எழுதப்படாத கொள்கை. அதிக தொகுதி கேட்டு காங்கிரஸ் முரண்பட்டு நிற்கையில் ராமதாஸ் எதிர்பார்க்காத நேரத்தில் 31 தொகுதிகளை வாரி வழங்கி தனது தாராள மனதை வெளிப்படுத்தினார் தமிழக முதல்வர் கருணாநிதி.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் டாக்டர் ராமதாஸை இணைப்பதற்கு பலர் திரை மறைவில் முயற்சி செய்தனர். திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பலவீனப்படுத்த நினைத்தவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைக்கத் துடித்தனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்த பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கு இவ்வளவு தான் என்று எதிர்க்கட்சிகள் எள்ளி நகையாடினர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கும் தாமிழக சட்டமன்றத் தேர்தலுக்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது என்பதை உணர்ந்து கொண்ட கருணாநிதி ராமதாஸுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை முதலில் முடித்தார். ராமதாஸின் இலட்சியக் கனவில் ஒன்றான அன்புமணி நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் உதவி செய்யும் பாட்டாளி மக்கள் கட்சியின் வரவால் திராவிட முன்னேற்றக் கழகம் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் எனக் கருதுகிறது.
தமிழக முதல்வர் கருணாநிதியுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் திருமாவளவன் அணிமாறப் போகிறார் என்று பரபரப்பாகச் செய்தி வெளியானது. எல்லோரையும் போலவே திருமாவளவனும் அதிக தொகுதிகளை எதிர்பார்த்தார். திடுதிப்பென திருமாவளவனுக்கு 10 தொகுதிகளைக் கொடுத்தார் முதல்வர் கருணாநிதி. வன்னியரின் வாக்கு வங்கியான ராமதாஸும் தலித்துக்களின் வாக்கு வங்கியான திருமாவளவனும் தமது வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது.
ராமதாஸும் திருமாவளவனும் ஒரேகூட்டணியில் நின்று தேர்தலைச்சந்திக்கவில்லை. இருவரும் ஒரே அணியில் இருப்பது பலமானதாகவே கருதப்படுகிறது. இதேவேளை இருவரும் ஒரு அணியில் இருப்பதால் வன்முறை ஏற்பட வாய்ப்பில்லை.
நான்கு கட்சிகளுக்கு 52 தொகுதிகளைக் கொடுத்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். இன்னும் சில சிறிய கட்சிகளுடன் திராவிட முன்னேற்றக் கழகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மீண்டும் தமிழக ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி செய்கிறார் முதல்வர் கருணாநிதி.
ஐந்து சிறிய கட்சிகளுக்கு எட்டுத் தொகுதிகளைப் பிரித்துக் கொடுத்துள்ளார். ஜெயலலிதா. டாக்டர் கிருஷ்ணசாமியின் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் கொடுத்துள்ளார் ஜெயலலிதா. இரண்டு தொகுதிகள் காணாதது என்று அடம்பிடிக்கிறார் கிருஷ்ணசாமி. இரண்டு தொகுதிக்கு மேல் கொடுப்பதற்கு ஜெயலலிதா தயாராக இல்லை.
வைகோவும் இடதுசõரிகளும் ஜெயலலிதாவுடன் மிகவும் நெருக்கமாக உள்ளனர். அவர்களும் அதிக தொகுதிகளை எதிர்பார்க்கிறார்கள். பெரிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தையை ஜெயலலிதா இன்னமும் ஆரம்பிக்கவில்லை. கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை விட அதிக தொகுதிகளையே வைகோவும் இடதுசாரிகளும் எதிர்பார்க்கின்றனர். அவர்கள் எதிர்பார்க்கும் அதிக தொகுதிகளைக் கொடுக்க ஜெயலலிதா தயாராக இல்லை. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும், இடதுசாரிக் கட்சிகளும் அதிக தொகுதிகளில் போட்டியிட்டால் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு அதிகமாகி விடும் என்று ஜெயலலிதா நினைக்கிறார்.
நடிகர் விஜயின் தகப்பன் சந்திரசேகர், ஜெயலலிதாவை மூன்று முறைசந்தித்துவிட்டார். இப்பேச்சுவார்த்தைப் பற்றிய விபரம் வெளியே கசியவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாக விஜய் பிரசாரம் செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் விஜயின் இயக்கத் தொண்டர்கள் தமிழக சட்ட சபைத் தேர்தலில் போட்டியிடுவார்கள்.
விஜயின் தகப்பன் சந்தரசேகரனும் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்படுகிறது. விஜயின் வரவு தனக்கு பலமாக இருக்கும் என்று நம்புகிறார் ஜெயலலிதா. காவலன் படம் வெளியிடுவதற்கு தமிழக அரசு முட்டுக் கட்டைப் போட்டது குற்றம்சாட்டிய விஜய் தமிழக அரசுக்கு எதிராகத் தனது பலத்தைச் காட்ட நாகை கூடிய கூட்டத்தில் முக்கியமான முடிவை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. நாகை கூட்டத்தில் எதுவும் அறிவிக்காத விஜய் தமிழக சட்ட சபைத் தேர்தலில் தமிழக அரசுக்கு எதிராக விஜய் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
இந்திய மத்திய அரசையும் தமிழக அரசையும் கடுமையாக சாடிவரும் சீமான் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அனைத்திலும் காங்கிர கட்சியை எதிர்த்து பிரசõரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். சீமானின் அறிவிப்பு ஜெயலலிதாவுக்கு சற்று ஆறுதலைத் தந்துள்ளது.
தேர்தல் பிரசாரத்துக்கு பயிற்றப்பட்ட பேச்சாளர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் உள்ளனர். இரண்டு கழகங்களிலும் சினிமா நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளனர். சினிமா நடிக, நடிகைகள் பிரசாரத்தில் இறங்குவார்கள். சினிமா கலைஞர்களைப் பார்ப்பதற்கு மக்கள் கூடுவார்கள். சினிமா கலைஞர்களின் பிரசாரத்தால் எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்பதை உறுதியாகக் கூற முடியாது.
தமிழக சட்ட சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் ரஜினியின் பெயர் பரபரப்பாக அடிபடும். தேர்தல் சமயத்தில் அவர் பிரசாரம் செய்யாவிட்டாலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் குரல் கொடுத்தாலே போதும் மக்களிடம் அது சென்றடைந்து விடும் என்று அரசியல் தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர். தன் மீது அரசியல் செல்வாக்குப் படிவதை விரும்பாத ரஜினி தமிழக சட்ட சபைத் தேர்தலின்போது வெளிநாடு சென்று விடுவார் என்று எதிர்பார்க்கப்படகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தமிழக அரசு நடத்தும் விழாக்களிலும் பங்குபற்றுவதைத் தவிர்த்து வருகிறார்.
தமிழக சட்ட சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. பெரிய கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டின் பின்னர் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிடும்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 06/03/11

No comments: