Wednesday, July 13, 2011

நெருங்குகிறது சி.பி.ஐ.கலங்குகிறது தி.மு.க.

2ஜி ஸ்பெக்ரம் என்ற ட்ரகனின் பார்வை தயாநிதி மாறன் மீது விழுந்துள்ளது சி.பி.ஐ. விசாரணைவட்டத்தில் தயாநிதிமாறனின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. ஸ்பெக்ரம் என்ற சுரங்கத்தைத் தோண்டத் தோண்ட புதிய புதிய பெயர்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆர்.ராசா, கனிமொழி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்ட பின்னர் திராவிடமுன்னேற்றக் கழகத்தின் இன்னொரு முக்கிய பிரமுகரும் கைது செய்யப்படுவார் என்ற தகவல்கள் கசியத்தொடங்கின. சகலரின் பார்வையும் தயாநிதி மாறனை நோக்கியே இருந்தது. இப்போது அது ஓரளவு ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது குற்றப் பத்திரிகை சமர்ப்பிக்கப்படும் போது தயாநிதிமாறனின் பெயரும் சேர்க்கப்படலாம் என்ற எதிர் பார்ப்பு உள்ளது.
ஸ்பெக்ரம் விவகார நெருக்குதல் காரணமாக ஜவுளித்துறை அமைச்சரான தயாநிதிமாறன் தனது அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். 2ஜி ஸ்பெக்ரம் ஒதுக்கியதில் முறைகேடு குறித்தும், அதில் நடைபெற்ற ஊழல் தொடர்பாகவும் புலனாய்வு செய்துவரும் சி.பி.ஐ. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தயாநிதிமாறனின் பெயரும் உள்ளடக்கப் பட்டுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு எயார் செல்நிறுவனம் முயற்சிசெய்தது. அப்போது தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் உரிமத்தைக் கொடுக்காது இழுத்தடித்தார். தயாநிதிமாறனின் அழுத்தம் காரணமாக எயார்செல் நிறுவனத்தை மலேஷியாவில் உள்ள மாக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கவேண்டியநிலை ஏற்பட்டது. எயார்செல் நிறுவனம் கைமாறியதும் மாக்சிஸ் நிறுவனத்துக்கு அனுமதிவழங்கப்பட்டது குறித்தும் புலனாய்வு செய்து வருவதாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
சி.பி.ஐ.யின் அடுத்த இலக்கு தயாநிதி மாறன் தான் என்பது தெரிந்ததும் தயாநிதி மாறன் கைது செய்யப்படுவார் என்று ஊடகங்கள் விலாவாரியாக எழுத ஆரம் பித்துவிட்டன. தயாநிதிமாறன் கைது செய்யப்படவேண்டும் என்பதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உறுதியாக உள்ளார். தயாநிதிமாறனும், சிதம்பரமும் அமைச்சர வையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று ஜெயலலிதா அடிக்கடி வலியுறுத்தி வருகிறார்.
ஸ்பெக்ரம் விவகாரம் சூடுபிடித்துள்ளதால் அமைச்சரவையில் இருந்து தயாநிதி மாறனை வெளியேற்ற வேண்டிய இக்கட்டான சூழலில் உள்ளது. காங்கிரஸ் கட்சியால் வெளியேற்றப்பட முன்பு வெளியேறுவது நல்லதென்று திராவிட முன்னேற்றக் கழகம் முடிவெடுத்துள்ளது. கருணாநிதியின் ஒப்புதல் இன்றி தயாநிதிமாறன் இராஜினாமாக் கடிதம் கொடுத்திருக்க மாட்டார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த நகர்வை இந்திய அரசியல் எதிர் பார்த்துள்ளது. ஸ்பெக்ரம் ஊழல் காரணமாக அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்த ஆர்.ராசா, தயாநிதிமாறன் ஆகியோருக்குப் பதிலாக இரண்டுபேரை அமைச்சரவையில் இடம் பிடிக்க திராவிடமுன்னேற்றக் கழகம் சிபார்சு செய்யுமா? அல்லது அமைச்சுப்பதவி பெறாது வெளியே இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்குமா? என்ற கேள்விகளுக்கு விடைகாண அரசியல் அரங்கம் ஆவலாக உள்ளது.
காங்கிரஸில் இருந்து வெளியேறுவதற்கு திராவிடமுன் னேற்றக் கழகம் தயாராக உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைவிட காங்கிரஸ் ஆயத்தமாக உள்ளது. விருப்பம் இல்லாமலும், வேறுவழி இல்லாமலும் இரண்டு கட்சிகளும் கூட்டணியைத் தொடரு கின்றன. காங்கிரஸும், திராவிட முன்னேற்றக் கழகமும் பிரிந்தால் அவற்றுடன் சேர்வதற்கு வேறு கட்சிகள் எவைகளும் இப்போதைக்குத் தயாராக இல்லை.
திராவிடமுன்னேற்றக் கழகத்தை முடக்கும் திட்டத்தைச் சத்தமில்லாமல் தமிழக அரசு செய்து வருகின்றது. மாவட்டச் செயலாளர்களின் பதவி யைப்பறிக்கும் திட்டத்தின் மூலம் திராவிடமுன்னேற்றக்கழம் முன் னெடுக்க உள்ளது. இத்திட்டம் திராவிட முன்னேற்றக் கழகச் செயற்பாட்டை ஸ்தம்பிக்கக் செய்யலாம் என்று கருதப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம்படுதோல்வி அடைந்ததற்கு மாவட்டச் செயலாளர்கள் சரியான முறையில் செயற்படவில்லை என்று குற்றஞ் சாட்டுகிறார் ஸ்டாலின் .
அரசியல் கட்சியின் மாவட்டச் செயலாளர் பதவி மிகவும் பலம் வாய்ந்தது. மாவட்டத்தில் உள்ள குறைபாடுகளைப் பட்டியலிட்டு அவற்றைச் சரிப்படுத்தவேண்டிய பெறுப்பு மாவட்டச் செயலாளருக்குரியது. மாவட்டத்தை அபிவிருத்தி செய்வது, மாவட்டசெயலாளரின் பிரதான பணியாகும். திராவிட முன்னேற்றக்கழகத்தின் தோல்விக்குப் பல காரணங்கள் உள்ளன. திராவிடமுன்னேற்றக் கழகத்தின் திட்டங்களை மக்கள் மனதில் சரியான முறையில் பதிவதற்கு மாவட்டச் செயலாளர்கள் தவறிவிட்டனர் என்ற குற்றச் சாட்டு எழுந்துள்ளது.
மாவட்டச் செயலாளர் பதவியை ஒழிக்கவேண்டும் என்ற ஸ்டாலினின் அறிவிப்பினால் மாவட்டச் செயலாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். வீரபாண்டி ஆறுமுகம், கே.என்.நேரு , ஐ. பெரிய சாமி, சுரேஷ் ராஜன், பழனி மாணிக்கம் போன்ற சக்தி மிக்க மாவட்டச் செயலாளர்கள் தமது அதிகாரங்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கட்சியின் தலைமைக்குக் கட்டுப்பட்டவர்கள் மாவட்டச் செயலாளர்கள். மாவட்டச் செயலாளர்களின் வழிகாட்டலில் தொண்டர்கள் செயற்படுவார்கள். மாநகர சபைகளின் ஆயுட்காலம் நெருங்குகையில் மாவட்டச் செயலாளர்களின் பதவி பறிக்கப்பட்டால் திராவிடமுன்னேற்றக் கழகம் வெற்றி பெறுவது சிக்கலாகிவிடும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி ஒதுங்கியுள்ளது. திராவிடமுன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்குரிய சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது காங்கிரஸ்கட்சி.
சட்டமன்றத் தேர்தலில் திராவிடமுன்னேற்றக் கழகத்தைத் தோற்கடித்தது போன்றே அடுத்துவரும் தேர்தல்களிளும் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்கடிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டியுள்ளது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
சோதனைகளையும், தோல்விகளையும் சந்தித்துத் துவண்டுவிடாது வெற்றிக் கம்பத்தை எட்டிப்பிடித்த திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஸ்பெக்ரம் பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெக்ரம் விவகாரத்தினால் சிறையில் இருப்பவர்கள் பிணையில் வெளியே வந்தால் ஆறுதலாக இருக்கும் என்று நினைக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். அடுத்து சிறைக்குச் செல்பவர்களின் பெயரை வெளியிட்டு பீதியை ஏற்படுத்துகின்றன ஊடகங்கள். இந்த நெருக்கடியில் இருந்து மீளமுடியாமல் தவிக்கிறது திராவிடமுன்னேற்றக்கழகம்.
வர்மா

சூரன்.ஏ.ரவிவர்மா

வீரகேசரிவாவாரவெளியீடு10/07/11

No comments: