Wednesday, May 11, 2016

பாராளுமன்றத்தை முடக்கிய தனி ஒருவனுக்கான போராட்டம்


நாட்டை வழிநடத்த வேண்டிய கடப்பாடு  பாராளுமன்றத்துக்கு உள்ளது. சட்டங்களை  உருவாக்குவது அதன் நடைமுறைகளை கண்காணிப்பது  போன்ற பாரிய பொறுப்பு பாராளுமன்றத்துக்கு உள்ளது. பாராளுமன்றமும்  நீதிமன்றமும் சமாந்தரமகச் செயல்பட்டு நாட்டை சரியான  பாதைக்கு இட்டுச்செல்ல வேண்டும் துரதிர்ஷ்டவசமாக  இலங்கையில் அப்படி ஒருநிலை இல்லை. பாராளுமன்றத்தை அலங்கரிப்பவர்கள் படித்தவர்களாக, சட்டம் தெரிந்தவர்களாக இருந்தது ஒருகாலம். இன்று சட்டம் தெரிந்த பாராளுமன்ற உறுப்பினர்களைக் காண்பது அரிது. சட்டத்தைத்  தமது கையில்  எடுப்பவர்களே பாராளுமன்றத்தை அசிங்கப்படுத்துகின்றனர்.

இவர் எமது பாராளுமன்ற உறுப்பினர். எமக்கான தேவைகளை இவர் நிறைவேற்றுவார் என எண்ணியே ஒருவரை பாராளுமன்றத்துக்கு அனுப்புகிறார்கள். அவரோ மக்களை மறந்து தந்து சுய இலாபத்துக்காக கட்சிமாறி அமைச்சுப்பதவியை ஏற்று தந்து செல்வாக்கினை உயர்த்திவிடுகிறார். அவரைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பிய அப்பாவிகள் அடுத்த தேர்தல் வரை காத்திருக்கிறார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் இராணுவப்பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு  வழங்கப்பட்டதை எதிர்த்து ஒருநாள் பாராளுமன்றம்  முடக்கப்பட்டது.  11 அமைச்சுகளின் குறை நிரப்பு  பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது பாராளுமன்றம் கலவர பூமியாக மாறியது. நாட்டுக்கு வழிகட்ட வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தெருச்சண்டியர்களாக மாறி தமது  வீரத்தை வெளிகாட்டினர்.  

பாதுகாப்பு சம்பந்தமாக அமைச்சர் சரத்  பொன்சேகா உரையாற்றியபோது கூச்சலும்  குழப்பமும்  ஏற்பட்டது. அவரைப்பேச விடாமல் எதிரணியினர் ஆர்ப்பட்டம் செய்தனர். ஆளும் தரப்பு உறுப்பினர்கள் அமைச்சரை சுற்றி பாதுகாப்பு வழங்கினர். அமைச்சர் சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உரைகள்  முன்னாள் ஜனாதிபதிக்கும்  அவரது குடும்பத்துக்கும் நெருக்கடிகளை ஏற்படுத்துகின்றன. அதனால் அவரது உரையை குழப்புவதில் எதிரணியினர்  அதிக ஆர்வம் காட்டுகின்றார்.

புலிகளை அழித்துவிட்டோம். புலிகளின்  தொல்லை இனி இல்லை. என்று முழங்கியவர்கள் புலிகளால் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆபத்து என்கின்றனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு இராணுவப்பாதுகாப்புத்  தேவை  இல்லை.  பொலிஸ் பாதுகாப்பு போதும் என்று கடந்த ஆட்சிக்காலத்தி;ல்  முடிவு செய்யப்பட்டது.  அதே பல்லவியை இன்றைய ஆட்சியாளர்கள் தெரிவிக்கும் போது  அதனை ஏற்றுக்கொள்ள சிலர் மறுக்கின்றனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அவமானப்படக்கூடாது. அவருக்குரிய  சலுகைகள் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் குறியாக உள்ளனர்.
11 அமைச்சுகளுக்கான  55 மில்லியன் குறை நிரப்பு பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்போது சில பாராளுமன்றஉறுப்பினர்கள்  தமது சண்டித்தனத்தை வெளிப்படுத்தினர். வாக்கெடுப்பில் அக்கறை காட்டாது வெளியில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்  சிறுபிள்ளைகள்  போல் அடம்பிடித்து தம்மையும் வாக்கெடுப்பில் சேர்க்க வேண்டும் என்று கோரினர். இறுதி நேரத்தில் பலர் வாக்கெடுப்பில் கலந்து கொண்டதனால்  குழப்ப நிலை ஏற்பட்டது.  மூன்று மேலதிக வாக்குகளால் பிரேரணை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை.

வாய்த்தர்க்கம் எல்லை மீறி கைகலப்பாக மாறியது.வெள்ளை உடை  உடுத்த கனவான்கள் மல்லுக்கட்டி மல்யுத்தம் செய்தனர். குறை நிரப்பு பிரேரணை வெற்றி பெறவில்லை. என்று போராட்டம் செய்தனர். பாராளுமன்றத்தில் நடப்பவை எல்லாம் நேரடி ஒளிபரப்பாகின்றன. இணைய தளங்கள், சமூக வலைத்தளங்கள் எல்லாம் சுடச்சுட படங்களுடன் பதிவேறுகின்றன. நொடிபொழுதில் அசிங்கங்கள்  அனைத்தும்  அம்பலமாகிவிடுகின்றன. இவை எல்லாவற்றையும்  அவர்கள் பொருட்படுத்தவில்லை. தமக்குத் தேவையானது நிறைவேறும் வரை அவர்கள் போராட்டம் நடத்தினர்.

அமைச்சுகளுக்கான குறை நிரப்பு பிரேரனையை  தோல்வியடையச் செய்ய வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு மல்லுக்கட்டியவர்களில் முன்னாள் அமைச்சர்களும் அடக்கம். தாம் அமைச்சர்களாக இருந்தபோது ஆண்டு அனுபவித்தவைகளை இன்றைய அமைச்சர்கள் அனுபவிக்கக்கூடாது என்பதில் அவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.நல்லாட்சி தொடரக்கூடாது என்று  எண்ணுபவர்கள் பாராளுமன்றத்தில் பலமாக இருக்கிறார்கள். பாராளுமன்றத்தில்  முன்னரும்  இதேபோல பல மல்யுத்தங்கள் நடைபெற்றன.அவை எவையும் மக்களுக்காக நடைபெறவில்லை.  தமது கட்சி நலனை முன்னிலைப்படுத்தியே பாராளுமன்றத்தை முடக்கி யுத்தகளமாக மாற்றினர்.

பாராளுமன்றத்தின் சின்னமான செங்கோலை அபகரித்த பாராளுமன்ற உறுப்பினரும் நம் மத்தியில் இருந்தார். 1992  ஆம் ஆண்டு வாசுதேவ நாணயக்கார மீது தாக்குதல் நடைபெற்றது.  2004  ஆம் ஆண்டு வணக்கத்துக்குரிய அக்பீமண தயாரட்ன தேரர், வணக்கத்துக்குரிய கொலனாவே  ஸ்ரீ சுமங்கள தேரர்  ஆகியோர்  மீது தாக்குதல் நடத்தப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு எதிரான கூட்டத்தில் கலந்து கொண்டதாகக் குற்றம் சாட்டி ஜெயலத் ஜெயவர்த்தன தாக்கப்பட்டார். பாராளுமன்றத்தை குழப்பி கலவரத்தைத் மேர்வின் சில்வாவும் மகேஸ்வரனும் முன்னிலையில் இருக்கின்றனர்.

உள்நாட்டு கலாசாரம் , வயம்ப அபிவிருத்தி அமைச்சின் உதவி அமைச்சரும்,ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினருமான பலித்த தேவப்பெரும, கம்பகா மாவட்ட ஐக்கிய மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினரான பிரசன்னா ரணவீர  ஆகிய இருவரும் ஒருவாரத்துக்கு பாராளுமன்றத்தில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டது. ஏனையவர்கள் தப்பி விட்டனர். இந்த நிலை தொடரக்கூடாது.  பாராளுமன்றத்தில் கலவரம் ஏற்படுத்திய அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

வர்மா

துளியம்

No comments: