Thursday, May 5, 2016

தொழிலாளர் தினத்தை அபகரித்த அரசியல்வாதிகள்

உழைக்கும் வர்க்கம் இரத்தம் சிந்தி பெற்ற தொழிலாளர் தினத்தை அரசியல்வாதிகள் தமது பலத்தை வெளிப்படுத்தும் தினமாக மாற்றியுள்ளனர். ஆளுக்கொரு கொள்கையுடன் பிரிந்திருக்கும் அரசியல்வாதிகள் தொழிலாளர்களைப் பிரித்து வைப்பதில் வெற்றி பெற்றுள்ளனர். எந்த ஒரு அரசியல் கட்சியும் தொழிலாளர்களை மேடை ஏற்றவில்லை. மேடைக்குக்  கீழே இருந்த தொழிலாளர்கள் அரசியல்வாதிகளின்   ஆவேசப் பேச்சுகளைக் கேட்டு கைதட்டினர்.அரசியல்வாதிகளும் முதலாளிகளும் மேதினத்தை வழமைபோல தமக்கிடையே பங்கு போட்டுக் கொண்டுதொழிலாளர்களைப் பார்வையாளர்களாக மாற்றி உள்ளனர்.முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தொழிலாளர்களைப் பிரித்துவைப்பதில் வெற்றிகண்டுள்ளன.  

நல்லிணக்கம் என்ற பெயரில் ஆட்சிபீடம் ஏறிய கட்சிகள் மூன்று இடங்களில் தமது பலத்தை வெளிப்படுத்தின. ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி வழக்கம்போல ஜனாதிபதி மைத்திரி அணியாகவும் முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த அணியாகவும் தமது பலத்தை வெளிப்படுத்தின. ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி காலியில்  மேதினத்தை நடத்தியது.  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான மேதினம், கிருலப்பனையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களும் விமல் வீரவன்ச உதயகம்பில போன்றோரும் கலந்து கொண்டனர். அதிகமான மக்கள் கலந்து கொண்டது  காலியிலா கிருலப்பனையிலா என்ற பட்டிமன்றம் இரண்டு அணி உறுப்பினர்களாலும்  நடத்தப்படுகிறது.

ஐக்கியதேசியக்கட்சி கம்பல் பாக்கிலும்  ஜே..வி.பி பி.ஆர்.சி மைதானத்திலும் தமது  மேதினத்தை நடத்தின.  பெருந்தொகையான மக்கள் மேதினத்தில் கலந்துகொண்டனர் என தலைவர்கள் பூரிப்படைந்துள்ளனர். மேதினப் பேரணியில் கலந்து கொண்டு  கூட்டங்களைப் பார்க்க மக்கள் திரண்ட காலம் ஒன்றிருந்தது. இன்று மக்களை பஸ்களில் கூட்டிச் செல்லும்  நிலை ஏற்பட்டுள்ளது.  இத்தனை பஸ்களில் இத்தனை ஆயிரம் பேரை  கூட்டி சென்றேன் என அமைப்பாளர்கள் பெருமையாகப் பேசும் நிலை உருவாகி உள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு பிரிவுத்   தலைவர்களின் வழிகாட்டலில்  நடைபெற்ற மேதினக் கூட்டங்களில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையை வைத்து பலத்தை அறியக்கூடியதாக உள்ளது. மைத்திரியா மகிந்தவா பலம் மிக்க தலைவர் என்பதை வெளிப்படுத்தும் அரங்கமாகவே மேதினக் கூட்டம் நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரி சமஷ்டியை நியாயப்படுத்திப் பேசினார். முன்னாள் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்  வழமைபோல  சவால்களும் பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை மீட்ட சம்பவங்களும் நினைவு கூரப்பட்டது.

இன்றைய ஜனாதிபதிக்கும் முன்னைய ஜனாதிபதிக்கும் இடையிலான பலப் பரீட்சையாக மேதினம் நடந்து முடிந்தது. முன்னைய ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறும் மேதினத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு கட்டளையிடப்பட்டது. ஜனாதிபதியின் கட்டளையையும் மீறி  அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 47 முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.  

காலியில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தை புறக்கணித்து மஹிந்த அணியினரின் மே தின கூட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்காக மத்திய செயற்குழு எதிர்வரும் நாட்களில் ஒன்று கூடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, மஹிந்த யாப்பா அபேவர்தன, மகிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, குமார வெல்கம, பவித்ரா வன்னியாரச்சி, விதுர விக்ரமநாயக்க, பிரசன்ன ரணதுங்க உட்பட்ட47   பாராளுமன்ற உறுப்பினர்கள் கிருலப்பனையில் நடைபெற்றமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த அணியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவர்கள் மீது நடவடிக்கைஎடுக்கப்படுமா அல்லது  பிசுபிசுத்துப் போகுமா என்பதை அறிவதற்கு மக்கள் காத்திருக்கின்றனர்.
ஐக்கிய தேசியக்கட்சி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் மேதினக் கூட்டங்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர். முன்னைய அரசாங்கம்  நடத்திய கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு மக்களை அழைத்துச்  சென்ற அரசாங்க பஸ்களின் வாடகைப் பணம் கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.அதன் முடிவு என்னவென்று தெரியவில்லை.
மேதினக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக நாட்டின் நாலாபுறமும் இருந்து பல பஸ்களில் மக்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.அதன் காரணமாக இ.போ.ச வின் சேவை பாதிக்கப்பட்டது. மிகக்குறைந்த பஸ்கள் சேவையில் விடப்பட்டதால் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டார்கள். மேதினத்துக்கு மறுநாள் பஸ்கள் சேவையில்  இல்லாமையினால் தமது அன்றாட கடமைகளை செய்வதற்கு மக்கள் திணறினார்கள்.
தமிழ் அரசுக் கட்சி மருதனாமடத்தில் தனது மேதினக் கூட்டத்தை நடத்தியது. பங்காளிக் கட்சிகளைப் புறக்கணித்து தனது பலத்தை தமிழ் அரசுக் கட்சி வெளிப்படுத்தியது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. தமிழ் அரசுக் கட்சியை விட நாம் தான் பெரியவர் என்று கூறும் கட்சிகள் மேதினத்தில் தமது பலத்தை வெளிபடுத்த முயற்சி செய்யவில்லை.
தொழிலாளர்களின் முதுகில்  அரசியல்வாதிகள் ஏறி கொடிபிடிக்குக் நாளாக மேதினம் மாற்றமடைந்துள்ளது.
வர்மா 


No comments: