Monday, May 9, 2016

அரசியல் ஆட்டத்தில் விளையாட்டு வீரர்கள்


இந்திய அரசியலில் சினிமாவின் ஆதிக்கம் மிக அதிகமாக உள்ளது. விளையாட்டு வீரர்களும் அரசியலில் தமது செல்வாக்கை வெளிப்படுத்தினார்கள். தமிழாக்கம்,கேரளா,புதுச்சேரி,மேற்கு வங்கம் அஸாம் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல் தற்பொழுது நடைபெறுகிறது.  தமது கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அரசியல் கட்சிகள் ரசிகர்களின் அபிமானம் பெற்ற விளயாட்டு வீரர்களை களம் இறக்கி  உள்ளது. சித்து .அசார் ஆகியோர் முன்னர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். தற்பொழுது சச்சின் டெண்டுல்கர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். கிரிக்கெற் வீரர்களான ஸ்ரீ  காந்த்,லக்ஷ்மி ரத்தன் சுக்லா ,உதைபந்தாட்ட வீரரான பாய்ச்சங் பூட்டியா, தடகள வீராங்கனையான ஜோதிர்மயி சிக்தர் ஆகியோர் சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

கேரளா சட்ட சபைத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சியின் சார்பில் ஸ்ரீ சாந்த் போட்டியிடுகிறார்.வேகப்பந்து  வீச்சாளரான ஸ்ரீ சாந்த்  மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.ஆறாவது ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ஸ்ரீ சாந்த் சூதாட்ட புகாரில் குற்றம் சாட்டி கைது    செய்யப்பட்டார்.  டெல்லி உஅயர் நீதி மன்றம் அவர் மீது குற்றம் இல்லை எனக் கூறி விடுதலைசெய்தது..ஆனால், இந்திய கிரிக்கெட் சபை ஸ்ரீ சாந்துக்கு  வாழ் நாள் தடை விதித்து அவருடைய கிரிக்கெற் வாழ்க்கையை  குழி தோண்டிப் புதைத்துவிட்டது. நீதி மன்றம் ஸ்ரீ சாந்தை விடுதலைசெயதும் இந்திய கிரிக்கெற் சபை அவரை  முடக்கி வைத்திருக்கிறது. அந்தப் பதிப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்த ஸ்ரீ சாந்த்  தேர்தலில் வெற்றி பெற்று புகழின் உச்சத்துக்குச் செல்வர் என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.

இந்திய உதை பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவரான பாய்ச்சங் பூட்டியா இந்திய உதைபந்தாட்ட அணிக்கு பல வெற்றிகளைத் தேடிக் கொடுத்தவர்.மேற்கு வங்கத்திலுள்ள சிலிகுரி   தொகுதியில்  திரிணாமூல்  காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் டார்லிங் தொகுதியில் போட்டியிட்டு பாரதீய ஜனதாக் கட்சி வேட்பாளர் சுரிந்தர் சிங்கிடம்  தோல்வியடைந்தார்.சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர் அசோக் பட்டர்ச்சாரியவை எதிர்த்துப் போட்டியிடுகிறார். சிலிகுரி தொகுதியில் அசோக்  பட்டர்ச்சாரியா தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்றவர். ஆகையினால் பூட்டியாவின் பாய்ச்சல் பலிக்காது என்ற கருத்து உள்ளது.

தடகள வீராங்கனையான ஜோதிர்மயி சிக்தர் ஆசிய போட்டிகளில் தங்கம் வென்றவர்.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இவர் மேற்கு வங்க சோனப்பூர் வடக்கு தொகுதியில்  சிபிஎம் கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார்.

கிரிக்கெற் வீரரான  லக்ஷ்மி ரத்தன் சுக்லா  கடந்த ஆண்டு ஒய்வு பெற்றார். முதல் தர போட்டிகளில் விளையாடிய சகலதுறை வீரரான இவர் ஒருநாள் போட்டி அணியிலும் இடம் பிடித்தார் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் ஹவுரா வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.உதைபந்தாட்ட வீரர்களான சையது ரகீம் நபி , திபீன்று  பிஸ்வாஸ் ஆகியோரும்  திரிணாமூல் காங்கிரஸ் வேட்பளர்களாக போட்டியிடுகின்றனர். தேர்தல் முடிவின் பின்னர் இவர்களுடைய அரசியல் பாதை வெளிச்சமா இருட்டா என்பது தெரிய  வரும்.

கேரளாவில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பறிகொடுக்கும் என்றே பெரும்பாலான கருத்து கணிப்புகள் கூறிவந்தன. இந்த நிலையில் கடந்த வாரம் வெளியான புதிய கருத்து கணிப்பில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் தமிழகத்தைப் போல வரும் 16-ஆம் திகதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனநாயக ,மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆகிய 3 அணிகள் களத்தில் உள்ளன.

இதில் காங்கிரஸ், இடதுசாரி கூட்டணி ஆகியவற்றுக்கு  இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுவரையிலான பெரும்பாலான கருத்து கணிப்புகள் இடதுசாரிகள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவர் எனக் கூறி வந்தன. இந்நிலையில் மார்ஸ் மற்றும் புஷ் ஏஜென்ஸி ஆகியவை இணைந்து தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்பு நடத்தி முடிவுகளை  வெளியிட்டன. அதில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 69 முதல் 73 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 65 முதல் 69 இடங்களைக் கைப்பற்றக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 45 சதவீத வாக்குகளும் இடதுசாரி கூட்டணிக்கு 43 சதவீத வாக்குகளும் இதர கட்சிகளுக்கு 12 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் மதுவிலக்கு கொள்கைதான் அந்த கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பை அதிகரித்திருப்பதாக 90 சதவீதமானவர்கள் கூறியுள்ளனர். அதே நேரத்தில் சோலார் பேனல் ஊழல் காங்கிரஸுக்கு பெரும் பாதகமாக உள்ளதாகவும் பெரும்பாலான வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  இந்தக் கருத்துக் கணிப்பினால் காங்கிரஸ் கட்சி நம்பிக்கையுடன் உள்ளது.
ரமணிNo comments: