Monday, June 6, 2016

காங்கிரஸ் தலைவர்களிடையே புதுவையில் பனிப்போர்


இந்தியாவின் ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்கள் முடிவடைந்து நான்கு மாநிலங்களில் முதல்வர்கள் பதவியைப் பொறுபேற்றுவிட்டனர். மிக நீண்ட  இழுபறியின் பின்னர் புதுவையின்  முதலமைச்சரின் பெயரை காங்கிரஸ் வெளியிட்டது. கேரளமும் மேற்கு வங்கமும் காங்கிரஸை ஏமாற்றிவிட்டன. பதினைந்து வருட ஆட்சியின் பின்னர் காங்கிரஸ் அசாமைப் பறிகொடுத்துவிட்டது.  கருணாநிதியின் கருணையால் தமிழகத்தில் எட்டுத் தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. புதுவையில் பறிகொடுத்த ஆட்சியை மீண்டும்  கைப்பற்றியுள்ளது.

தமிழகத்தில்  திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து  காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. புதுவையில் காங்கிரஸ் கட்சியுடன் திராவிட  முன்னேற்றக் கழக‌ம் இணைந்து தேர்தலில் போட்டியிட்டது புதுவையில் 25  தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 15 தொகுதிகளிலும்  9 தொகுதிகளில் போட்டியிட்ட திராவிட  முன்னேற்றக் கழகம் இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றன. புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் நமசிவாயம் முதலவராவார் என்று பலரும் நம்பிக்கொண்டிருக்கையில் முன்னாள் அமைச்சர் நாராயணசாமி முதலமைச்சர் பதவியைப் பெறுவதற்காக காய் நகர்த்தினார். இதனால் புதுவையில் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களிடையே  எதிர்பார்ப்பு கூடியது. தேர்தலில் வெற்றி பெற்ற நமசிவாயத்தை ஒதுக்கி வைத்த  காங்கிரஸ் தலைமை, சட்ட மன்ற உறுப்பினர் அல்லாத நாராயணசாமியை முதல்வர் பதவிக்கு சிபார்சு செய்தது.

காங்கிரஸ் தலைமையின்  முடிவை ஏற்காத நமசிவாயத்தின் விசுவாசிகள் போராட்டம் செய்தனர். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப்பிடிதத்தில் நமசிவாயத்தின் பங்கு  அதிகம். நமசிவாயத்தின் உழைப்புக்குக் கிடைத்த வெற்றியை நாராயணசாமி தட்டிப்பறிப்பதை நமசிவாயத்தின் விசுவாசிகளால் ஜீரணிக்க முடியவில்லை.புதுவையில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது முதலமைச்சராக இருந்தவர் ரங்கசாமி. ரங்கசாமியின் தன்னிச்சையான போக்கினால் காங்கிரஸ் கட்சி  அவரைத் தள்ளி வைத்தது. காங்கிரஸ் கட்சிக்குப் பாடம் புகட்டுவதற்காக  காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி என் ஆர்  காங்கிரஸ்ஸ் என்ற கட்சியை ஆரம்பித்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சேர்ந்து 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றி முதல்வரானார். கட்சியை ஆரம்பித்து இரண்டு மாதங்களில்  ஆட்சியைப் பிடித்த ரங்கசாமி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை கழற்றிவிட்டு விட்டு சுயேட்சையின் உதவியுடன்  ஆட்சியை நடத்தினார்.

காங்கிரஸ் கட்சிக்குத் துரோகம் செய்த ரங்கசாமியை வீழ்த்தியத்தில் பெரும் பங்கு வகித்த நமசிவயத்தை ஓரம் கட்டிய காங்கிரஸ் நாராயணசாமியை முதல்வராக்கியது. முதல்வர்  பதவி கிடைக்காததால் ஏமாற்றமடைந்த நமசிவாயம் தனக்கு துணை முதலவர்பதவி  தரும் படி கோரிக்கை விடுத்தார். மிகச்சிறிய யூனியன் பிரதேசமான புதுவையில் துணை முதல்வர் பதவி சாத்தியமானதல்ல என்று தெரிந்து கொண்டும் நமசிவாயம் விடுத்த கோரிக்கையின் உண்மை முகம் தெரியவில்லை.காங்கிரஸ் என்றால் குழப்பமும்   கோஷ்டி மோதலும் இருக்கும் என்பதற்கு புதுவை விதிவிலக்கல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.முதல்வருக்கான குடுமிச்சண்டை தற்பொழுது ஓய்ந்தாலும் எப்போது விஸ்வரூபம எடுக்கும் என்பது தெரியாது.

புதுச்சேரியில் கால் பாதிப்பதற்காக    கிரண்பேடியை களத்தில் இறக்கி உள்ளது  பாரதீய ஜனதாக் கட்சி. டெல்லி சட்ட சபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தவரை புதுவையின் துணை ஆளுனராக பாரதீய ஜனதா நியமித்துள்ளது.புதுவையில் காங்கிரஸ் அரசுக்கு தலையிடி கொடுப்பதற்காகவே கிரண்பேடி துணை  ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கை கடைப்பிடிப்பதில் கிரண்பேடிக்கு நிகராக யாரும் இல்லை. கிரண்பேடியைச்சமாளிக்கும்  திறமை நமசிவயத்திடம் இல்லை. அதனால்தான் நாராயணசாமியை காங்கிரஸ் முதலமைச்சராக்கியது.

   துணை நிலை ஆளுநராகப் பொறுப்பேற்றிருக்கும் கிரண் பேடி, புதுச்சேரி முதல்வருக்கு நிச்சயம் மிகப் பெரிய சவாலாக விளங்குவார்  எனவேதான் நாராயணசாமியின் நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது. இன்று இல்லாவிட்டாலும் கூடிய விரைவிலேயே நாராயணசாமி - கிரண் பேடி இடையே போர்  தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்து விட்டது. கிரண்பேடியை சமாளிக்க அதிரடியான ஒருவர் தேவை என்பதால்தான் நாராயாணசாமியை கட்சி மேலிடம் நியமிக்க முடிவு செய்தது.. மேலும் புதுவையில் அரவம் இல்லாமல் உள்ள பாரதீய ஜனதாக் கட்சியினர்  தற்போது உற்சாகத்துடன் களத்தில் குதிக்க ஆரம்பித்துள்ளனர். எனவே கிரண் பேடியை வைத்து புதுச்சேரியில் பாஜகவை வளர்க்க அக்கட்சி முயல்கிறதோ என்ற சந்தேகமும் கிளம்பியுள்ளது

 
கிரண் பேடியின் நியமனம் பல்வேறு விதமாக பார்க்கப்படுகிறது. அவருக்கு முதல்வர் பதவியில் செயல்படுவது குறித்த "பயிற்சியாக" துணை நிலை ஆளுநர் பதவியை பலரும் பார்க்கின்றனர். அடுத்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் மீண்டும் கிரண் பேடியே பாஜக சார்பில் களம் இறக்கப்படுவார் என்றும், அதற்குள் அவர் நிர்வாக ரீதியான அனுபவத்தையும், நல்ல பெயர்யும் புதுவையில் பெற்று விட்டால் அது டெல்லி தேர்தல் களத்தில் உதவியாக இருக்கும் என்று பாஜக கணக்குப் போடுவதாக கூறுகிறார்கள்.

 
இது உண்மையாக இருக்குமோ என்றுதான் எண்ண வைக்கிறது கிரண் பேடியின் செயல்பாடுகளும். புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தது முதல், ஒரு முதல்வர் போலத்தான் செயல்பட ஆரம்பித்துள்ளார் கிரண்பேடி. முதல்வர் அறிவிக்க வேண்டியதையும், சொல்ல வேண்டியதையும் இவர் அதிகாரிகளுக்குக் கூறி வருகிறார். பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

 
கிரண்பேடி தனது அலுவலகத்தோடும், ராஜ்பவனோடும் முடங்கிப் போகக் கூடியவர் அல்ல என்பதை அவரது அன்றாட செயல்பாடுகள் வெளிப்படுத்துவதால், முதல்வராகப் பதவியேற்கவுள்ள நாராயணசாமிக்கு நிச்சயம் பெரிய சவாலாகவே இருக்கும் ஆளுநரை சமாளிப்பது.
 
பிற மாநில ஆளுநர் பதவி போல அல்ல புதுச்சேரி ஆளுநர் பதவி. இது யூனியன் பிரதேசம் என்பதாலும், மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பதாலும் ஆளுநர் பதவிதான் இங்கு பெரியது. ஆளுநரைப் பகைத்துக் கொள்ள முடியாது. அதை விட முக்கியமாக மத்திய அரசை விமர்சிக்க முடியாது. எந்த முடிவாக இருந்தாலும் மத்திய அரசின ஒப்புதல் தேவை என்று ஏகப்பட்ட லொட்டு லொசுக்குகள் உள்ளன. புதிய ஆட்சியமைக்கவே, மத்திய அரசின் உள்துறையின் அனுமதி பெற்றாக வேண்டும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதனால்தான் நாராயணசாமி இன்னும் பதவியேற்காமல் உள்ளார்.  
கிரண்பேடி நிச்சயம் அதிரடியாக செயல்படுவார். அதிரடி உத்தரவுகளைப் பிறப்பிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. அதேசமயம், டக்கென எளிதில் பணிந்து போகக் கூடியவர் அல்ல நாராயணசாமி. அதிரடியாக செயல்படக் கூடியவரும் கூட. போராடக் கூடியவரும் கூட. எனவே நிச்சயம் புதுச்சேரி அரசியல் களம் படு சூடாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ரமணி
தினத்தந்தி
6/6/16


No comments: