Monday, June 27, 2016

பாதை மாறிய பயணத்தால் பரிதவிக்கும் தமிழர்கள்


உலக  நாடுகள் தம்மை வளப்படுத்துவதற்கான முயற்சிகளில் அதிக அக்கறை காட்டுகின்றன. சில  நாடுகள் மிகக்குறுகிய காலத்தினுள் முன்னேற்றமடைந்துள்ளன. வறுமை, யுத்தம், ஊழல் என்பன சில நாடுகளை பின்னோக்கித் தள்ளுகின்றன.  விஞ்ஞானம் ,தொழில்; நுட்பம் என்பன வியக்கத்தக்க வகையில் முன்னேற்றமடைந்துள்ளன. இவற்றுக்குச் சரிசமமாக   அகதிகளின் எண்ணிக்கையும் உலகில் அதிகரித்துள்ளன. 2015   ஆம் ஆண்டு  மூன்று மில்லியன்மக்கள் அகதிகளானர்கள்  என ஐநா அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில்  2015  ஆம் ஆண்டு அகதிகளின் தொகை 5.8 சதவிதமாக அதிகரித்துள்ளது.
  
 இலங்கையில் நடைபெற்ற உண்டட்டுக் கலவரத்தால் அகதிகளாக இந்தியவுக்குச் சென்றவர்கள் அவுஸ்திரேலியாவில்  தஞ்சமடைவதற்காகச்  சென்று இந்தோனேஷியாவில் பரிதவிக்கின்றனர்.  இழுவைப்படகுகள் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள்   பிரவேசிப்பவர்களை திருப்பி அனுப்புவதில் அந்த நாடு உறுதியாக இருக்கிறது. தங்கள் நாட்டுக்கு வரவேண்டாம் என பத்திரிக்கை இலத்திரனியல் ஆகிய ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்கிறது.  அப்படி இருந்தும்  அகதிகள் சிலர் படகுகள் மூலம் அவுஸ்திரேலியா நோக்கிச்செல்கிறனர். அவர்களைத் தமது நாட்டுக்குள் புகவிடாது கிறிஸ்மஸ் தீவில் அடைத்து வைத்திருக்கிறது அவுஸ்திரேலியா. அங்கிருந்து வரும் தகவல்கள் அங்கு நடைபெறும் கொடுமைகளை விபரிக்கின்றன.
இந்தநிலையில் கடந்த மாதம் இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் படகில் அவுஸ்திரேலிய நோக்கி பயணமானார்கள். நடுகடலில் அவகளது படகு பழுதடைந்தமையினால் இந்தோனேஷியாவில் உள்ள ஆச்சே கடற்கரையில் அவர்களது படகு தரை தட்டியது.  இந்தோனேஷியா அரசு அவர்களை தரை இறங்க அனுமதிக்கவில்லை. ஒரு கர்ப்பிணி ஒன்பது சிறுவர்கள் கைக்குழந்தைகள் உட்பட 44 பேர் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது. அவர்களைத் தரை இறங்க அனுமதிக்கும்படி  மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். அகதிகள் படகை சர்வதேச கடல் பரப்பில் கொண்டுபோய் விடுவதில் இந்தோனேஷியா குறியாக இருந்தது. படகில் இருந்து குதித்து கரையேற முற்பட்ட பெண்களை மிரட்டுவதற்காக பாதுகாப்பு அதிகாரிகள் வானை நோக்கி சுட்டனர்  அகதிகளை நடுக்கடலில் தள்ளி விடவேண்டும்  என்பதே  இந்தோனேஷியாவின் விருப்பம்.   முயற்சி வெற்றியளிக்காமையினால் அகதிகள் தரை இறங்குவதற்கு அனுமதிக்க வேண்டிய நிலைக்கு இந்தோனேஷியா தள்ளப்பட்டது.

இலங்கயில் உள் நாட்டு யுத்தம் ஆரம்பமானபோது தமிழ் மக்கள் அகதிகளாக தமிழகத்துக்குச் சென்றார்கள்.  வந்தாரை வரவேற்கும்  தமிழ்நாடு இலங்கை அகதிகளை இருகரம் கொண்டு வரவேற்றது. இலங்கையின் மீது தனது பிடியை இறுக்குவதற்காக இந்திய மத்திய அரசு இலங்கைத் தமிழர்களை பகடைக்காயாகப் பயன் படுத்தியது. தமிழக அரசியல் கட்சிகள் இலங்கைத் தமிழ் அகதிகள் மீது அதிக அக்கறை காட்டின. இலங்கை கடற்படைக்குப் போக்குக்காட்டி இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழ் மக்கள் அகதியாக இந்தியாவுக்குச்  சென்றனர். ஆரம்பத்தில் இலங்கைத் தமிழ் மக்கள் மீது அன்பும் ஆதரவும் கட்டிய இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் காலப்போக்கில்  வேண்டா வெறுப்பாக இலங்கைத் தமிழ்  அகதிகளை கவனிக்கத் தொடங்கின.

 தமிழகத்தில்  115 முகாம்களில்  73241 பேர் உள்ளனர். உறவினர் நண்பர்கள் வீடுகளில்  31802 பேர் வசிக்கின்றனர். அகதிகள் இந்தியாவில் அரச உத்தியோகம் பெறமுடியாது. அவர்கள் கூலி வேலைதான் செய்ய வேண்டும். மருத்துவத்துறையில் பயில்வதற்கு தகுதி பெற்ற இலங்கைத் தமிழ் மாணவிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பலத்த போராட்டத்தின் பின்னர் மருத்துவக் கல்லூரியில் படிக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்தியாவில் உள்ள தொண்டு நிறுவனங்களும் வசதி உள்ளவர்களும் இலங்கைத் தமிழ் அகதி மாணவர்களுக்கு உதவி செய்கிறார்கள். அரசாங்கத்தின் உதவியின் மூலம் அவர்கள் சீவிக்கமுடியாது.
 பங்களாதேஷ், மியன்மார், புட்டான் போன்ற நாடுகளில் இருந்து அகதியாக இந்தியாவுக்குச் சென்றவர்களுக்கு கொடுக்கப்படும் வசதிகளும் வாய்ப்புகளும் இலங்கை அகதிகளுக்குக் கொடுக்கப்படுவதில்லை.ராஜீவ் காந்தியின் கொலை இந்தியாவில்  உள்ள இலங்கைத் தமிழ்  அகதிகளை அந்நியப்படுத்தியது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தால் அப்பாவிகளான இந்திய  மீனவர்களின் உயிர் பறிக்கப்பட்டது. இலங்கைக் கடற்படையால்  அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள்,கைது செய்யப்பட்டார்கள், சிறையில் அடைக்கப்பட்டார்கள். இதனை இந்திய மத்திய  அரசு பெரிதாக எடுக்கவில்லை. இது சமபந்தமாக இலங்கை அரசுக்கு சிறு எச்சரிக்கை கூட விடுக்கவில்லை. தனது  நாட்டுப் பிரஜையின் மீது அக்கறை காட்டாத இந்திய மத்திய அரசு இலங்கைத் தமிழ் அகதிகளைத் திரும்பிப்பார்க்காததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.


இலங்கையில் புலிகள்  அழிக்கப்பட்டார்கள் , யுத்தம் முடிந்தது.அமைதி நிலவுகிறது என்றார்கள். நல்லாட்சி அரசாங்கம்  பதவி ஏற்றதும் இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு குறையும் இல்லை என்ற மாயை தோற்றுவிக்கப்பட்டது. முன்னைய அரசாங்கத்தில் வெளிப்படையாகச் செய்யப்பட்ட சிங்களக்  குடியேற்றம்,விகாரைகள் அமைத்தல், இராணுவப்  பிரசன்னம் ஆகிய அனைத்தும் இன்றைய அரசாங்கத்தில் இரகசியமாகச் செய்யப்படுகிறது. முன்னைய ஆட்சியின் போது தமிழ் மக்கள் அதிகளவில் அகதிகளாக வெளியேறினர். அகதிகளை ஏற்றுக்கொள்வதில்லை என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.  இலட்சக் கணக்கில் பணம் செலவழித்து இலங்கையில் விளம்பரம் செய்கிறது.அகதிகளாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற பல படகுகள் பிடிபட்டதனால் அங்கு செல்வதற்கு யாரும் முயற்சிப்பதில்லை.
யுத்த பூமியான இலங்கையில் இருந்து வெளியேறினால்  நிம்மதியாக  வழலாம் என்ற நம்பிக்கையில் பலர் அகதியாக இந்தியவுக்குச் சென்றார்கள். அவுஸ்திரேலியாவுக்குச் சென்றால் வசதியாக வாழலாம்  என்று இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகள் நம்பினார்கள்.     பல இன்னல்கள் நெருக்கடிகளின் மத்தியில் வாழும் அவர்கள் .இந்தியாவில் இருந்து வெளியேறுவதே உசிதம் என நினைத்தார்கள்.  அகதிகளை ஏற்பதில்லை என்ற அவுஸ்திரலியாவின் கொள்கையை அவர்கள் உதாசீனம் செய்து அவுஸ்திரேலியாவுக்குப் பயணமானார்கள்.


ஏழை அகதிகள் என்ற நிலையில் இருந்து வசதியான அகதிகள் என்னும் எதிர்பார்ப்புடன் அவர்களின் அகதிப் பயணம் ஆரம்பமானது. இந்தியப் பணத்தில் ஒன்றரை இலட்சம் ரூபா கொடுத்து புறப்பட்டவர்களின் படகு இடைநடுவில் பழுதடைந்தமையால் இந்தோனேஷியாவில் கரை ஒதுங்கினார்கள். அகதிகளின் படகை சர்வதேச அடல் எல்லையில் தள்ளிவிட   இந்தோனேஷியா அரசு முயற்சித்தது.  அவர்களின் முயற்சி கைகூடவில்லை. அகதிகளுக்கான முகவரமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் அகதிகளுக்குச் சார்பாகக் குரல் கொடுத்தன.  இறுதியில் அவர்களை கரை இறங்க  அனுமதிக்க வேண்டிய நிலைக்கு இந்தோனேஷியா தள்ளப்பட்டது.

 இந்தோனேஷியாவில் 13   ஆயிரம் அகதிகள்   இருகிறார்கள். இலங்கை அகதிகளையும் வைத்து பராமரிக்க முடியாது என்று இந்தோனேஷியா கருதுகிறது. படகை திருத்தி அவர்களை கடலில் தள்ளி விடுவதற்கு  இந்தோனேஷியா முயர்சிக்கிறது. அகதிகளாக யாரும் வந்தால் அவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பப் போவதாக அவுஸ்திரேலிய அறிவித்துள்ளது. இந்தோனேஷியாவில் இருக்கும் இலங்கை அகதிகளை ஏற்கத் தயாராக இருப்பதாக இலங்கை அறிவித்துள்ளது.இந்தியாவுக்கும் இலங்கைக்கும் போகமாட்டோம்.அவுஸ்திரேலியாவுக்குத்தான் போகப்போகிறோம் என அகதிகள் தெரிவித்துள்ளனர் அகதியாகப் போனவ்ர்கள் திரி சங்கு சொர்க்கத்தில் இருக்கிறார்கள். போனவ்ர்கள்.

வன்முறை பொருளாதார வீழ்ச்சி,உள்நாட்டு யுத்தம், உயிர் அச்சுறுத்தல்  தாய் நாட்டில் வாழமுடியாத பலர்  அகதிகளாக வெளிநாடுகளை வாழ்கின்றனர். பலஸ்தினத்தில் இருந்து 5 மில்லியன், 4.9 சிரியாவிலிருந்து  4.9  மில்லியன் ஆப்கானிஸ்தானில் இருந்து 2,.7 மில்லியன் மக்கள் அகதிகளாக வெளிநாடுகளில் வாழ்கின்றனர்.
வர்மா.


No comments: