Tuesday, December 13, 2016

புதிய தலைவி உருவாக்கப்படுகிறார்

  
தமிழகத்தை தனது   இரும்புப்பிடியில் வைத்திருந்த ஜெயலலிதா மறைந்த பின்னர் அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.  புரட்சித்தலைவி, அம்மா என கழகத்தவர்களால்  போற்றிப் புகழப்பட்ட ஜெயலலிதா ஒரே இரவில்    தூக்கி எறியப்பட்டுவிட்டார் என தொண்டர்கள் குரல் எழுப்புகிறனர்.  ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவர் மரணமாகி உடல் அடக்கம் செய்யப்பட்டதுவரையான நிகழ்ச்சிகள் அனைத்தும் கனவுபோல நடந்து முடிந்துவிட்டது.
ஜெயலலிதாவுக்குப்பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வழி நடத்தப்போவது யார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் தோன்றியபோது ஜெயலலிதாவுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்களின் பெயர்கள்  வந்து போயின.. ஜெயலலிதாவின் மறைவை ஒட்டி ஏழுநாட்கள் துக்கம் அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவின்  முகத்தைப் பார்க்காது துடித்துப்போன தொண்டர்கள்,  அவரை  அடக்கம் செய்த இடத்தைப் பார்த்து அஞ்சலி செலுத்த அமைதியாக வரிசையில் நின்றனர்.ஆனால்,  ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டவர்கள் தமது அரசியல் இருப்பை தக்கவைக்க காய் நகர்த்தினார்கள்.

ஜெயலலிதாவை  இழந்த சோகத்தில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் மீள்வதற்கிடையில் ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் பதவியைப் பிடிப்பதற்கு சசிகலா முயற்சி செய்கிறார் என்ற  செய்தி கசிந்தது. ஜெயலலிதாவின் இடத்தில் சசிகலவா என்ற ஆச்சரியம் அரசியல் அரங்கில் எழுந்தது.இது  பொய்யான செய்தி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் கலகத்தை உண்டாக்குவதற்காக யாரோ கிளப்பிவிட்ட புரளி என்றுதான் அதிகமானோர் நினைத்தனர்.

ஜெயலலிதாவின் வழியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வழிநடத்த வருமாறு சசிகலாவிடம் கழக நிர்வாகிகள் கெஞ்சுவதை ஜெயா  தொலைக்காட்சி ஒளிபரப்பியது. செங்கோட்டையன், மதுசூதனன், வளர்மதி, கோகுல இந்திரா, சைதை துரைசாமி, சி.சரஸ்வதி ஆகியோர் உட்பட சிலர் சசிகலாவின் முன்னால்  கைகூப்பி  கெஞ்சுவதை தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.ஜெயலலிதாவின் கம்பீரம், மிடுக்கு, ஆளுமை ,எதுவும் இல்லாத சசிகலா எப்படி பொதுச்செயலாவராவார் என்ற கேள்வி எழுந்தது. சசிகலாவின் இறுக்கமான பிடியில் ஜெயா தொலைக்காட்சி சிக்கி இருப்பதை அந்தக் கட்சியின் மூலம் தெரியக்கூடியதாக உள்ளது.
ஜெயலலிதாவின் உடலருகே சோகத்துடன் சசிகலா நிற்கும் படத்துடன்  தலைமைப் பொறுப்பை ஏற்க அவரை வருமாறு வேண்டுகோள் விடுக்கப்படும் விளம்பரங்கள் பத்திரிகைகளில் பிரசுரமாகின. பெரியார்,அண்ணா,எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா ஆகியோருடன் சசிகலாவையும் இணைத்து கட் அவுட்கள் சில இடங்களில் முளைத்தன. யாரோ திட்டமிட்டு சசிகலாவை முன்னிலைப்படுத்த இவற்றைச் செய்கிறார்கள். ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது  அவரை மகிழ்விப்பதற்காக விளம்பரங்கள்  வெளியிட்டவர்கள் அவர் மரணமானபின்னர் கண்ணீர் அஞ்சலி இரங்கல் பற்றிய விளம்பரங்களையோ  அல்லது கட் அவுட்களையோ வெளியிடவில்லை. ஜெயலலிதா இறந்தபின்னர் பலருக்கு குளிர் விட்டுப்போயுள்ளது.

ஜெயலலிதாவை அம்மா என  அழைத்தவர்கள் வாய் கூசாது சசிகலாவை சின்னம்மா என அழைக்கத் தொடங்கிவிட்டனர். காந்தி  தாத்தா, நேரு மாமா, பெரியார், கர்மவீரர் காமராஜர்,அறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதி,கவிஞர் கண்ணதாசன் என அடைமொழியுடன் அந்தத் தலைவர்கள் அழைக்கப்பட்டனர். புரட்சித்தலைவர் புரட்சி நடிகர் போன்ற பட்டங்களால் எம்.ஜி.ஆர் அழைக்கப்பட்டார். எம்.ஜி.ஆரை சின்னவர் என்றும் அவருடைய அண்ணா எம்.ஜி.சக்கரபாணியை பெரியவர் என்றும் விழித்தார்கள். ஜெயலலிதாவை புரட்சித்தலைவி என அழைத்தார்கள். சோனியாவை அன்னை என காங்கிரஸார் அழைத்தபோது அதற்குப்[ போட்டியாக அம்மா என  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்களால்  ஜெயலலிதா அழைக்கப்பட்டார். ஜெயலலிதா இறந்ததும் சசிகலாவுக்கு சின்னம்மா, புரட்சித்தோழி  போன்ற பட்டங்களை வழங்கி அவரை முன்னிலைப்படுத்த முயற்சிக்கிறார்கள்.


ஜெயலலிதாவால் ஓரமாக வைக்கப்பட்டவர் பொன்னையன். இவருக்கு சசிகலாவை அறவே  பிடிக்காது    ஜெயலலிதாவை பிழையான வழிக்கு .சசிகலா,   அழைத்துச்செல்கிறார் என  பொன்னையன் குற்றம் சாட்டினர். இப்போ சசிகலாவுக்கு ஆதரவாக பொன்னையன் குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.ஜெயலலிதா வகித்த பதவிக்கு பொருத்தமானவர் நாடாளுமன்ற  உறுப்பினர் தம்பித்துரை என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அவரும் சசிகலாவின் பக்கம் சாய்ந்துவிட்டார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பத்திரமானவர்  பன்னீர்ச்செல்வம். அவரைப்  பற்றிய பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும் இரண்டு முறை  ஜெயலலிதாவால் அவர் முதலமைச்சராக்கப்பட்டார்.  ஜெயலலிதா வகித்த பதவியை அவருக்கு வழங்கலாம் அதனை தொண்டர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்ற கருத்து மேலோங்கியது. எந்தவிதமான இடைஞ்சலும் இல்லாது முதல்வர் கதிரையில் அமர்ந்த பன்னீர்ச்செல்வமும்  சசிகலவால்தான் கட்சிய கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும் என்கிறார்.


ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி என வர்ணிக்கப்படுபவர் சசிகலா. உற்றார் உறவினர் சொந்தபந்தம் எதுவும் இல்லாத ஜெயலலிதாவுக்கு இரவும் பகலும் துணையாக இருந்தவர். ஜெயலலிதா துவண்ட போதெல்லாம் அவருக்குத் தோள் கொடுத்தவர்.ஜெயலலிதாவுக்காக  உயிரையும் கொடுப்பேன் என வீரவசனம் மற்றவர்களால் பேசப்பட்டபோது ஜெயலலிதாவுடன் சேர்ந்து சிறைக்குச்சென்றவர்.  ஜெயலலிதா செய்த குற்றங்களுக்கு உறுதுணையாக இருந்தவர் என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளராவதற்கும் தமிழகத்தின் முதல்வராவதற்கும் இந்தத் தகுதி போதும் என சிலர் நினைக்கின்றனர்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உறுதியாகக் கட்டி எழுப்பிய ஜெயலலிதா மரணமானதும் கட்சிக்குள் சில பிரச்சினைகள் தோன்றும் கழகம் கலகலக்கும் என்று எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.  5 ஆம் திகதி மாலையில் ஜெயலலிதா மரணமான செய்தி வெளியாகியது.தொண்டர்கள் குழம்பினார்கள். அச்செய்தி வதந்தி என அப்பலோ அறிவித்தது. தொண்டர்கள் நிம்மதியடைந்தனர். அன்று நள்ளிரவு ஜெயலலிதா   காலமானார். மறுநாள் மாலை  முதலமைச்சர்  பன்னீர்ச்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்கிறது. ஜெயலலிதாவின் மரணமும் பதவி ஏற்பும் ஒரே நேரத்தில் நடைபெறுகின்றன. மறுநாள் மாலை ஜெயலலிதாவின் பூதஉடல்  எம்.ஜி.ஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்படுகிறது.

ஜெயலலிதா மரணமான பின்னர்   அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் யாரால் வழி நடத்தப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இவருக்குப் பதிலாக இவர் என  தொலைக்காட்சித் தொடரில் காட்டுவது போல ஜெயலலிதாவுக்குப் பதிலாக சசிகலா என சுட்டிக்காட்டப்படுகிறது.சசிகலாவைச்சுட்டிக்காட்டிய கை எது என்பது மர்மமாக உள்ளது. அந்தக்கை பாரதீய ஜனதாவுடையது என்ற சந்தேகம் உள்ளது.  ஆனால், சகிகலாவின் கணவர் நடராஜனும் அரசியல் சித்து விளையாட்டு செய்கூடியவர்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் எதுவித சஞ்சலமும் இன்றி சசிகலாவின் பக்கம் சாய்ந்து விட்டார்கள். சசிகலாவின் காலில்  விழுகிறார்கள், கும்பிடுகிறார்கள். தலைமை ஏற்க வா என வருந்தி அழைக்கிறார்கள். ஜெயலலிதா நிறுத்தி வைத்த திட்டங்களுக்கு பன்னீர்ச்செல்வம் பச்சைக்  கொடி காட்டிவிட்டார். மத்திய அரசுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இணையும் என்ற செய்தி வேகமாகப் பரவுகிறது.அப்போது சிலருக்கு மத்திய அமைச்சுப்பதவி கிடைக்கும் . தமிழக அமைச்சரவை விஸ்தரிக்கப்படப்போகிறது. அப்போது சிலருக்கு அமைச்சுப் பதவி கிடைக்கும் அதனால் சிலர் அமைதியாக இருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர் இறந்தபின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டாக உடைந்தது. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி  தலைமையிலும் ஜெயலலிதாவின் தலைமையிலும் இரு அணிகளும் செயற்பட்டன. அப்போது ஜானகியின் பக்கம்  நின்று ஜெயலலிதாவை எதிர்த்தவர்களில்  பன்னீர்ச்செல்வமும் ஒருவர் ஜானகி ஒதுங்க ஜெயலலிதா கழகத்தைக் கைப்பற்றினார். ஜெயலலிதாவின் கை ஓங்கியதும் எம்.ஜி.ஆரின் விசுவாசிகள் கட்டம் கட்டப்பட்டதால் பலர் வெளியேறினர். எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் இருந்ததால் கட்சி தப்பிப் பிழைத்தது. தன்னை எதிர்த்த பன்னீர்ச்செல்வத்தின் மீது ஜெயலலிதா முழு நம்பிக்கை வைத்ததால்,  அவர் இல்லாத நிலையில் எதுவித பிரச்சினையும் இன்றி பன்னீர்ச்செல்வம் முதல்வரானார்.

ஜெயலலிதாவின் அறையைப் பாவிக்க பன்னீர்ச்செல்வம் விரும்பவில்லை. தமிழக சட்ட மன்றத்தில்  ஜெயலலிதாவின் கார்  நின்றால் மற்றவர்களின் கார்கள் தூரத்திலே நிற்கும் இப்போது நிலைமை தலை கீழாகிவிட்டது.. அமைச்சரவை சுதந்திரமாககச்செயற்படுகிறது.   முதலமைச்சர் கட்டளை பிறப்பித்தால் தான் முன்பு அமைச்சர்கள் செயற்படுவார்கள். இப்போது முதலமைச்சரின் சொல்லுக்கு  காத்திருக்காமல் செயற்படுகிறார்கள்.  அடுத்த தேர்தலைக் குறிவைத்து அமைச்சர்கள் செயற்படுகிறார்கள். ஜெயலலிதா இல்லாத நிலையில் தேர்தலைச்சந்தித்தால் வெற்றி பெற முடியாது என்பதை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் உணர்ந்து கொண்டுள்ளார்கள். அதனால் மீதமிருக்கும் பதவிக்காலத்தை தக்க வைப்பதற்கு ஒற்றுமையாகச் செயற்படத் தீர்மானித்துள்ளனர்.

சசிகலாவின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் ஒப்புதலளித்துள்ளனர். ஆனால், தொண்டர்கள் சசிகலாவுக்கு எதிராக உள்ளனர்.ஜெயலலிதாவினால் கட்டம் கட்டப்பட்ட சசிகலாவை மன்னிக்கத் தொண்டர்கள் தயாராக இல்லை.  சசிகலாவைப் போற்றும் பதாகைகளை தொண்டர்கள் கிழித்தெறிந்தனர். தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் இடையேயான போராட்டம் நடந்தால் தொண்டர்களின் கைதான் மேலோங்கும். தொண்டர்கள் இல்லையென்றால் தலைவர்கள் இல்லை என்பது யதார்த்தம்.இந்த உண்மை தலைவர்களுக்கும் தெரியும்.இப்போதைக்குத் தொண்டர்களின் ஆதரவு அவர்களுக்குத்  தேவை இல்லை. இன்றைய நிலைமையைச் சமாளித்துவிட்டால் தேர்தல் சமயத்தில் தொண்டர்களின் மனநிலை அறிந்து தலைவர்கள் செயற்படுவார்கள்.

ஜெயலலிதா கம்பீரமாக வளம் வந்த போயஸ்கார்டனில் வெளிச்சம் படாமல் இருந்த சசிகலா இப்போது வெளிச்சத்துக்கு வந்துவிட்டார். அங்கிருந்தபடியே அவர் சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். ஜெயலலிதா வாழ்ந்த வீட்டைப் பார்ப்பதற்கு கழகத் தொண்டர்கள் தினமும் வந்து குவிகிறார்கள். ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவுச்சின்னமாக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. ஜெயலலிதா  அமர்ந்த கதிரையில் அமர்ந்துகொண்டு சசிகலா பிரமுகர்களைச் சந்திக்கிறார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளராக சசிகலா தெரிவு செய்யப்படலாம் என்ற தோற்றப்பாடு வெளிப்படையாகத்  தென்பட்டாலும்,,  கழக  யாப்பின் பிரகாரம் சசிகலா அதற்குத் தகுதியானவர் அல்ல.தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் அங்கத்தவராக இருப்பவர்தான் பொதுச்செயலாளராவதற்குத் தகுதி உடையவர். 2012 ஆம் ஆண்டு செப்ரெம்பர்  13ஆம் திகதி  சசிகலாவின் உறுப்புரிமை நீக்கப்பட்டு அவர் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டர் 2012 மார்ச் மாதம்  28 .ஆம் திகதி மன்னிப்புக் கேட்டதால் மீண்டும் கழகத்தில் இணைந்தார். அவர் கழகத்தில் இணைந்து ஐந்து வருடங்கள் பூர்த்தியாகவில்லை பொதுச்செயலாளராவதற்கு அவர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை காத்திருக்க வேண்டும்.  சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிர்வாகிகளுக்கு இந்த யாப்புப்பற்றி எதுவும் தெரியாதா அல்லது தெரிந்து கொண்டு சசிகலாவை உசுப்பி விடுகிறார்களா என்று தெரியவில்லை.

 அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் 38  மாநில நிர்வாகிகள் உள்ளனர்.   அவர்களில்   நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சியும் ஜெயலலிதாவும் காலமாகிவிட்டனர்.   200 க்கும் அதிகமான செயற்குழு உறுப்பினர்களும்     3000 பொதுக்குழு உறுப்பினர்களும் இருக்கின்றனர். இவர்கள்தான் கழகப் பொதுச்செயலாளரைத் தெரிவு செய்வார்கள்.இவர்கள் அனைவரையும் திருப்திப்படுத்தினால் தான்  பொதுச்செயலாளராகலாம்.எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள்.

ஜெயலலிதாவால் கட்டம் கட்டி வெளியேற்றப்பட்டவர்கள் உயிரற்ற அவரது உடலைச்சுற்றி நின்றுகொண்டு  உண்மைத் தொண்டர்களை தூரத்தில் பரிதவிக்க விட்டார்கள்.  நான்கு சட்டங்களுக்குள் மாலையுடன் படமாக  இருக்கும் ஜெயலலிதா இவற்றைப்  பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறார்.
வர்மா  



No comments: