Wednesday, December 21, 2016

பன்னீர்ச்செல்வ‌த்தின் பதவிக்கு ஆப்புவைக்கும் அ .தி .மு. க நிர்வாகிகள்

அரசாங்கத்தை எதிர்ப்பதே எதிர்க்கட்சிகளின் பிரதான செயற்பாடு. ஒரு நாட்டில் எதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிட்டால் அதற்குப் பொறுப்பேற்று ஜனாதிபதி பதவிவிலக வேண்டும். பிரதமர்பதவி விலக வேண்டும் என எதிர்க் கட்சிகள் போராட்டம் நடத்தும். மாநிலத்தில் எதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் முதலமைச்சர் பதவிவிலக வேண்டும் என்ற கோஷம் மேலெழும். இந்த அரசியல் நெறிக்கு மாறாக தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

ஜெயலலிதாவின் பாதுகாப்பில் இரும்புக் கோட்டையாக  உறுதியுடன் இருந்தது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். ஜெயலலிதா குற்றவாளி என நீதிமன்றம் இரண்டு முறை தீர்ப்பளித்த போதும் அவரின் விடுதலைக்காக போராட்டம்,யாகம்,நேர்த்திக்கடன் என்பனவற்றை கண்ணீரும் கம்பலையுமாகச் செய்து போராடியவர்கள் அவரது  மரணத்தின் போது அமைதியாக இருந்ததை அனைவரும் ஆச்சரியத்துடன் நோக்கினர். ஜெயலலிதாவின் மரணம் தந்த அதிர்ச்சி நீங்குவதற்கிடையில் பன்னீர்ச்செல்வ‌த்தின் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

ஜெயலலிதாவுக்குப் பின்னர் கட்சியை யார் வழிநடத்துவது என்ற கேள்வி எழ முன்பே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பன்னீர்ச்செல்வ‌த்தின் பக்கம் கையைக் காட்டியது. தமிழகத்தின் முதலமைச்சர் பன்னீர்ச்செல்வ‌ம் என்ற எண்ணம் மனதில் பதிவதற்கிடையில்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் சிலர்   சசிகலாவிடம் சரணடைந்தனர். ஜெயலலிதா இருக்கும் போது பன்னீர்ச்செல்வ‌த்தை ஏற்றுக் கொண்டவர்கள், அவர் இறந்த பின்னர் பன்னீர்ச்செல்வ‌த்தை ஏற்றுக்கொள்ள மறுப்பதன் மர்மம் வெளிச்சத்துக்கு வரவில்லை.

தமிழக அமைச்சர்கள் சிலர் தமது கட்சியைச்சேர்ந்த பன்னீர்ச்செல்வ‌த்துக்கு எதிராகக் கிளம்பியுள்ளனர்.அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இதில் முன்னிலை வகிக்கிறார். சசிகலா முதலமைச்சரவதர்காக பன்னீர்ச்செல்வ‌ம் பதவியை விட்டுக்கொடுப்பார் எனத் தெரிவித்தார்.  இதற்குஎதிராகப்  பலத்த கண்டனங்கள்  எழுந்ததனால் பன்னீர்ச்செல்வ‌த்துக்கு எதிரான அறிக்கை அல்ல  எனப் பின்வாங்கினார். அமைச்சர்கள் தங்கமணி,எடப்பாடி பழனிச்சாமி,வெல்லம்பட்டி  நடராஜன்,கடம்பூர் ராஜு,சேவூர் ராமச்சந்திரன்,எம்.சி.சம்பத்,தங்கதமிழ்ச்செல்வன் ஆகியோர் பன்னீர்ச்செல்வ‌த்துக்கு எதிராகச் செயற்படுகின்றனர். சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக்க விரும்பினார்கள். மத்திய அரசின் விருப்பப்படி பன்னீர்செல்வம் முதலமைச்சரானார்.


1999 ஆம் ஆண்டு தேனி நாடாளுமன்றத் தொகுதியில் டி.டி. தினகரன்வேட்பாளராகக்  களம் இறங்கிபோது தங்கத்தமிழ்ச்செல்வனால்  திவாகரன் மூலம் சசிகலா குடும்பத்துக்கு  அறிமுகமானவர் பன்னீர்செல்வம். கட்சியில் இருந்து தங்கத்தமிழ்ச்செல்வன் ஓரம்கட்டப்பட்டுள்ளார். பன்னீர்ச்செல்வ‌த்தின் செயற்பட்டால் தான் ஓரம்கட்டப்பட்டதாக நினைக்கும் தங்கத்தமிழ்ச்செல்வன்  இப்போது பன்னீர்ச்செல்வ‌த்தை எதிர்க்கும் கோஷ்டியில் இருக்கிறார்.1954 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி   தேனி மாவட்ட பெரியகுளம் தொகுதியில் பிறந்தவர்  பன்னீர்செல்வம்,i தகப்பன் ஓட்டக்ககாரத்தேவர் வட்டிக்குப் பணம் கொடுப்பவர்.பால் பண்ணை நடத்தியதால் ரீ க்கடை நடத்தினர். தாயார் பழனிஅம்மாள். குலதெய்வம் பேச்சி அம்மனின்  ஞாபகார்த்தமாக‌ பேச்சிமுத்து எனப்பெயரிட்டனர். பின்னர் தனது பெயரை பன்னீர்செல்வம் என மாற்றினார். எம்.ஜி.ஆர் இறந்தபின்னர் ஜானகியின் பக்கம் செயற்பட்டார். தேனீ மாவட்டத்தில் கழகத்தின் சிறு சிறு பதவிகள் வகித்த பன்னீர்ச்செல்வ‌ம், பெரியகுளம் நகர மன்றத்தேர்தலில் வெற்றி பெற்றறார்.  2001.ஆம் ஆண்டுத தமிழக  சட்ட மன்ற உறுப்பினராகத்    தேர்வுசெய்யப்பட்ட பின்னர் அரசியலின் மிக உச்சத்துக்குச் சென்றார்.
அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு பட்டதாரி ஒருவர் தமிழகத்தின் முதல்வராகி உள்ளார். அண்ணாவைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சரான கருணாநிதி,எம்.ஜி.ஆர்,ஜானகி,ஜெயலலிதா ஆகிய நால்வரும் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள்.சினிமாக் கவர்ச்சி  இல்லாத முதலமைச்சாரக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுள்ளார். ஜெயலலிதா சிறைக்குச் சென்றதால் இரண்டு முறை முதல்வரான அனுபவம் அவருக்கு உள்ளது. இரண்டு முறையும் ஜெயலலிதாவை முன்னிறுத்தியே கடமையை ச் செய்தார். புரட்சித்தலைவி அம்மாவின் ஆணைப்படி என்றுதான் ஆரம்பிபார். இப்போது அந்த ஆரம்ப வசனம் இல்லாமல் செயலாற்றுகிறார்.


கடந்த ஆண்டு சென்னை  வெள்ளத்தில் மூழ்கியதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் காரணம் என மக்கள் கொந்தளித்தனர். அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவும் அமைச்சர்களும் உடனடியாக உதவிக்கு வரவில்லை.கடந்த வாரம்  புயலால் பதிக்கப்பட்ட பகுதிகளை பன்னீர்ச்செல்வ‌ம் சென்று பார்வையிட்டார். தமிழக முதலமைச்சரின் வாகனம் சிக்னலுக்காகக் காத்திருந்ததை மக்கள் பார்த்து ஆச்சரியப்பட்டனர். இவற்றால் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.

பன்னீர்ச்செல்வ‌ம் இப்போது பழைய பன்னீர்ச்செல்வ‌மாக இல்லை. தனது பதவியை தக்க வைப்பதற்கான முயற்சிகளைச் சத்தமின்றிச் செயற்படுத்துகிறார். டில்லிக்குச் சென்ற  பன்னீர்ச்செல்வ‌ம்   பிரதமர் மோடியைச்சந்தித்து புயலால் ஏற்பட்ட சேத விபரங்களைக் கூறி நிவாரணம் கேட்டார். ஜெயலலிதா டில்லிக்குச் சென்றால் குனிந்து கும்பிடு போடும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற  உறுப்பினர்கள் தமிழக முதலமைச்சரைக் கண்டுகொள்ளவில்லை. தமிழக முதலமைச்சரான  பன்னீர்ச்செல்வ‌ம்  , டில்லியில் முதன் முதலாக பத்திரிகையளர்களுக்குப் பேட்டியளித்தார். முன்னர் இரண்டு முறை முதலமைச்சராக இருந்தபோது  அறிக்கைகளை மட்டும் வெளியிட்டாரே தவிர யாருக்கும் பேட்டியளிக்கவில்லை. தமிழகத்துக்கு வெளியே முதல் பேட்டியளித்து தன்னைப் பாதுகாத்துள்ளார்

 பன்னீர்ச்செல்வ‌த்தின் பின்னால் மோடியும் பாரதீய ஜனதாவும் இருக்கிறது.ஜெயலலிதாவை எதிர்த்த அண்ணா திராவிட  முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலாபுஷ்பாவின் நடவடிக்கை  பன்னீர்ச்செல்வ‌த்துக்குப் பாதுகப்பாக உள்ளன. அண்ணா திராவிட முன்னேற்றக கழக பொதுச்செயலாளராக சசிகலா தெரிவாவதை எதிர்த்து சசிகலாபுஷ்பா வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.அவரின் மனுவுக்குப் பதிலளிக்கும் படி சசிகலா,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக தேர்தல் ஆணையம் என்பனவற்றுக்கு நீதிமன்றத்தால்  நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் அட்டை சசிகலாவிடம் இல்லை எனக் கூறப்படுகிறது. கழக உறுப்பினர் இல்லாதவர் எப்படி பொதுச்செயலாளர் பதவியை ஏற்கலாம் எனக் கேள்வி எழுந்துள்ளது.

ஜெயலலிதா,சசிகலா,இளவரசி,சுதாகரன் ஆகியோருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீர்ப்பு வெளிவந்த பின்னர் முடிவெடுக்கலாம் என சில நிர்வாகிகள் அமைதியாக இருக்கின்றனர்.ஜெயலலிதா மரணமானதால் வழக்கில் இருந்து  அவருடைய பெயர் நீக்கப்படும். சசிகலா குற்றவாளி எனதீர்ப்பு வழங்கப்பட்டால் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.  சசிகலா குற்றவாளி எனத் தீர்ப்பு வெளியானால் பன்னீர்ச்செல்வத்துக்கு எதிரானவர்கள் புதிய ஒருவரைத் தேட வேண்டிய நிலை ஏற்படும்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு விசுவாசமாக இருந்தவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தவர் ஜெயலலிதா. கட்சி மாறி தன்னிடம் சரணடைந்தவர்களுக்கும் பொறுப்பான பதவிகளைக் கொடுத்து உயரத்தில் வைத்தவர். உடன்பிறவா சகோதரி, ஜெயலலிதாவின் நிழல் என புகழப்படும் சசிகலாவுக்கு எந்த ஒரு அரசியல் பதவியையும் கொடுக்க ஜெயலலிதா முன்வரவில்லை.சசிகலாவுக்கு பதவி கொடுக்க ஜெயலலிதா விரும்பவில்லை.அவரின்  விருப்பத்துக்கு மாறாக சசிகலாவை முதன்மைப்படுத்துவது தவறு என்ற வாதமும் முன்வைக்கப்பட்டுள்ளது. தன்னை அழைப்பவர்களுக்கு பதில் கூறாமல் மெளனமாக இருக்கிறார் சசிகலா. வழக்கின் தீர்ப்பு வெளிவரும் வரை அவர் மெளனவிரதத்தைக் கடைப்பிடிப்பார்.


தமிழகத்தின் சில தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் சசிகலாவுக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கின்றன.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு சசிகலா தலைமை ஏற்பதை விரும்பாத கழகத் தொண்டர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் காங்கிரஸ் கட்சியிலும் இணைகிறார்கள்.  சசிகலா கட்சியைப் பொறுப்பேற்றால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிளவுபடும் என மத்திய மாநில உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனக்குரிய காலம் வரும்வரை  அமைதியாக இருப்பதற்கு சசிகலா தீர்மானித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் விபரத்தை வெளியிட வேண்டும் என பல அரசியல் தலைவர்களும் தொண்டர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அப்பலோவும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் அதனைப் புறந்தள்ளியுள்ளன.ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் வழங்குமாறு  தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.  இது சசிகலா தரப்புக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகும்.பன்னீர்ச்செல்வத்துக்கு  எதிரானவர்கள் சசிகலாவின் பின்னால் மறந்து நிற்கின்றன.  தனது பதவியைக் காப்பாற்றுவதற்காக சசிகலாவுக்கு பன்னீர்ச்செல்வம் செக் வைத்துள்ளார். இந்தப் போட்டியில் வெல்லப்போவது பன்னீர்ச்செல்வமா அல்லது அவருக்கு எதிரானவர்களா என்பதை இவர்களின் அடுத்த நகர்வுகள்தான் தீர்மானிக்கும். இதில் யார் வெற்றி பெற்றாலும்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தான் பாதிப்பு.
வர்மா 

No comments: