Monday, December 19, 2016

தமிழக அரசியல் தலைமைப் பதவிக்கான போராட்டம் ஆரம்பம்


ஜெயலலிதாவின் மறைவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு கருணாநிதி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும்  தமிழகத்தில் மிகப்பெரியதொரு அரசியல் தலைமைத்துவ இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.  ஜெயலலிதாவின் மரணத்தால்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை சூனியமாகி உள்ளது. ஜெயலலிதாவுக்குப் பின்னால் இருந்து அரசியல் நடத்திய சசிகலா அரங்கத்துக்கு வந்துள்ளார்.கருணாநிதிக்குப் பின் கழகத் தலைவர் என அனைவராலும் அடையாளம் காட்டப்பட்டவர் ஸ்டாலின். ஸ்டாலினைத்  தலைவராக்குவதற்குரிய  களம் கனியவில்லை என்பது கருணாநிதியின் எண்ணம்.


நான் அரசியலுக்கு வரமாட்டேன். எனது குடும்பத்தவர்களும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என சத்தியப்பிரமாணம் எடுத்து ஜெயலலிதாவுடன் இணைந்த உடன்பிறவா சகோதரி சசிகலா அரசியல் அதிகாரத்தை முழுமையாகக் கைப்பற்றத் துடிக்கிறார்.ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது கைகட்டி வாய்பொத்தி  நெடுஞ்சாண் கிடையாக  காலில் விழுந்த எல்லோரும் அவர் சடலமானதும்  அவருக்குக் கொடுத்த அதே மரியாதையை சசிகலாவுக்குக் கொடுக்கிறார்கள்.  ஜெயலலிதா  மரணமானதும் சசிகலாவின் அரசியல் அரங்கமேறத் தொடங்கிவிட்டது.
 ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட மன்னார்குடி சொந்தங்கள் அவரின் பூத உடலைச் சுற்றி நின்று பாதுகாப்பளித்தனர்.ஜெயலலிதாவுக்குக் கட்டுப்பட்ட அமைச்சர்கள்  தள்ளி நின்று எட்டிப்பபார்த்தனர் ஜெயலலிதாவின்  மீது உயிரையே வைத்திருக்கும் தொண்டர்கள் கண்ணீரும் கம்பலையுமாக கண்ணுக்கெட்டாத தூரத்தில் நின்று அழுது புலம்பினர். ஜெயலலிதா என்ற இரும்புப் பெண்மணி இல்லை என்றதும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்களுக்கு பயம் தெளிந்துவிட்டது. கழக நிர்வாகிகள் அனைவரும் சொல்லி  வைத்ததுபோல் சசிகலாவிடம் சரணடைந்து விட்டனர்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தலைமை ஏற்று வழிநடத்தும்  தகுதி தனக்கு இருப்பதாக சசிகலா நினைக்கிறார்..

   ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்த மூத்த தலைவர்கள் அனைவரும் ஒருமித்து சசிகலாவை முன்னுக்குக் கொண்டு வருவதற்குரிய சகல ஏற்பாடுகளையும்  செய்து வருகின்றனர். ஜெயலலிதா பேரவை,அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இலக்கிய அணி ,அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மீனவர் பிரிவு  போன்ற அமைப்புகள் சசிகலாவைப் பொதுச்செயலாளராக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. ஜெயலலிதாவின் சமாதிக்குத் தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் செல்வதாக ஜெயா தொலைக்காட்சி அறிவிக்கிறது. எம்.ஜி.ஆரின் சமதிக்கருகில்தான் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்டார் என்ற உண்மை கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து போகிறது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள்   போயஸ்கார்டனுக்குச் சென்று கழகத்துக்குத் தலைமை ஏற்க வரும்படி கெஞ்சிக் கூத்தாடுவதை ஜெய தொலைக்காட்சி திரும்பத் திரும்ப ஒளிபரப்புச் செய்கிறது.ஜெயா தொலைக்காட்சியில் சசிகலாவின் புராணம் ஆரம்பமாகிவிட்டது.

எம்.ஜி.ஆர் இறந்த பின்பு ஒன்றரைக்கோடி உறுப்பினர்களைக்  கட்சியில் சேர்த்த பெருமை ஜெயலலிதாவுக்குரியது. ஏழு முறை கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றவர் ஜெயலலிதா.எதிரணி அரசியல் தலைவர்களின் முன்னால் நேர்படப்பேசும் திராணி உடையவர்.ஜெயலளிதவிப் போன்ற ஒரு பெண் தலைமைத்துவம் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே இல்லை. ஜெயலலிதாவுக்கு இணையாக சசிகலா இல்லை என்பதே யதார்த்தம். ஜெயலலிதாவுடன் 30 வருடங்கள் ஒன்றாக இருந்த தகுதி போதும் என சிலர் நினைக்கிறார்கள். ஜெயலலிதாவின் வாரிசு சசிகலாதான் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரத்தை   முன்னாள் அமைச்சர் பொன்னையன் வெளியிடுகிறார். ஒரு  நிறுவனத்தில்  வைப்புச்செய்த பணத்தை பெறுவதற்கு தகுதியானவர் சசிகலா என ஜெயலலிதா  குறிப்பிட்டதை பொன்னையன் வெளியிட்டு ஜெயலலிதாவின் வாரிசு சசிகலாதான் என அடித்துக் கூறுகிறார்.அந்தப் பத்திரத்தை யாரிடம் இருந்து பெற்ற விபரத்தை  பொன்னையன் தெரிவிக்கவில்லை.
சசிகலாவைப் பொதுச்செயலாளராக்கி ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் வெற்றி பெறச்செய்து முதலமைச்சரக்குவதை பன்னீர்ச்செல்வ‌த்தின் ஆட்கள் விரும்பவில்லை. பன்னீர்ச்செல்வ‌த்தின் ஆதரவாளர்களுக்கும் சசிகலாவின் ஆதரவாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது. சசிகலாவுக்கு  எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு நிலுவையில் இருப்பதால் அவருக்கு எதிரானவர்கள் அடக்கி  வாசிக்கிறார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத்தில் சசிகலாவின் கை ஓங்கினால் கட்சி பிளவுபடும். இதனை  பாரதீய ஜனதாக் கட்சி விரும்பவில்லை. சசிகலாவின் கை ஒங்க வேண்டும் கட்சி பிளவுபட வேண்டுமென திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புகிறது.


அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப்பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வியூகம் வகுக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இதற்கு எதிர் மாறான நிலை காணப்படுகிறது. ஸ்டாலின் எதிர்பார்த்த தலைமைப் பதவி அவரைத் தேடிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் பொதுக்குழு 20 ஆம் திகதி கூடும் என அறிவிக்கப்பட்டது. அன்று ஸ்டாலினுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என அரசால் புரசலாக செய்தி வெளியானது. இதனால் அவருடைய  ஆதரவளர்கள்   உற்சாகமடைந்தனர். உடல் நலம் பாதிக்கப்பட்டு கருணாநிதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் 20 ஆம் திகதி பொதுக்குழு கூட்டப்படமாட்டது என அறிவிக்கபட்டுள்ளது.

 கருணாநிதி சுகமடைந்து வீட்டுக்கு திரும்பினாலும் அவரால் முன்பு போல் செயற்படமுடியாது.  ஸ்டாலினுக்குப் போட்டியாக வலம்  வந்த அழகிரி கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். கனிமொழியின் செல்வாக்கு சொல்லும்படியாக இல்லை. தடை இல்லாத பாதையில் ஸ்டாலின் பயணம் செய்கிறார்.  சாதுரியமான பதிலாலும் ,உறுதியான வாதத்தாலும் ஸ்டாலினை முடக்கிய ஜெயலலிதா இல்லாதது ஸ்டாலினின் தலைமைத்துவத்துக்குச் சாதகமானதாக இருக்கிறது. வைகோ, விஜயகாந்த்,திருமாவளவன்,தா.பாண்டியன், அன்புமணி,ராமதாஸ் ஆகிய தலைவர்கள் செல்வாக்கிழந்துள்ளனர். இதனால் எதுவித தடைகளும்  இல்லாத அரசியல் பாதையில் ஸ்டாலின் பயணம் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசியலின் தலைமைத்துவத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியை அகற்றுவதற்கு பெரியாரின் தலைமையில் திராவிடக் கழகம் போராடியது.அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், கருணாநிதி போன்றவர்கள் பெரியாரின் பின்னால் அணிவகுத்து நின்றனர். பெரியாரைப் பிரிந்த அண்ணா, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்து  தமிழக அரசியலில் கோலோச்சிய காங்கிரஸ் கட்சியை படுகுழியில் விழுத்தினர். அண்ணாவின் மறைவின் பின்னர் நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் ஆகியவர்களுடன் போட்டி போட்ட கருணாநிதி தலைமைப்பீடத்தைக் கைப்பற்றினார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்து  கருணாநிதியிடம் இருந்த தமிழக தலைமைப்பீடத்தைக் கைப்பற்றினர். எம் .ஜி.ஆர் உயிருடன் இருக்கும் வரை கருணாநிதியால் தலை நிமிர்த்த முடியவில்லை.எம்.ஜி.ஆர் மறைந்ததும் அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகம் இரண்டாகியது. அப்போது தமிழகத்தின் தலைமைத்துவம்  மீண்டும் கருணாநிதியின் வசமாகியது. ஜெயலலிதாவின் கடின உழைப்பு கருணாநிதிக்கு சவால் விட்டது.இருவரும் மாறிமாறி ஆட்சிபீடம்  ஏறினர். கட்சியாக நடைபெற்ற ஒரு நாடாளுமன்றத் தேர்தலிலும் இரண்டு சட்ட மன்றத் தேர்தல்களிலும் ஜெயலலிதாவின் வியூகத்தால் கருணாநிதி அடுத்தடுத்து தோல்வியடைந்தார்.


எம்.ஜி.ஆரின் வழியில் ஜெயலலிதா பெற்ற வெற்றிகளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் தக்கவைப்பர்களா அல்லது  பறிகொடுப்பர்களா என்பதை அறிவதற்கு உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது.
வர்மா 

No comments: