Sunday, December 25, 2016

உயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்

ஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறைமுகமாகவும்  காய் நகர்த்துகின்றனர். சில அமைச்சர்களும் நிர்வாகிகளும் வெளிப்படையாக சசிகலாவுக்கு ஆதரவாக களம் இறங்கி உள்ளனர்.  சிலர் மதில் மேல் பூனையாக தருணம் பார்த்து காத்திருக்கின்றனர். ஜெயலலிதா இல்லாத நிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிளவுபடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஜெயலலிதாவின் பாதையில் பயணிப்போம் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்களும் நிர்வாகிகளும் சபதம் எடுத்துள்ளனர். கழகம் பிளவுபடும் என நினைத்தவர்களுக்கு இது பேரதிர்ச்சியாக அமைந்தது.


அண்ணா  திராவிட முன்னேற்றக் கழகம் உடையும் என சிலர் எதிர்பார்த்தர்கள். இங்கிருந்து ஒரு துரும்பைக்கூட யாராலும் எடுக்க முடியாது. ஒன்றரைக்கோடித் தொண்டர்களும் விசுவாசமாக இருக்கிறார்கள் என மூத்த அமைச்சர் ஒருவர் கர்ஜித்தார். வெளிப்பார்வைக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒற்றுமையாக இருப்பதுபோல தெரிந்தாலும் அங்கே உட்பூசல் அதிகமாக உள்ளது. அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத சசிகலாவின் காலில் மூத்த அரசியல்வாதிகள் விழுந்து கிடக்கிறார்கள். முதலமைச்சர் பதவியைக் காப்பாற்ற தனி ஒருவனாக பன்னீர்ச்செல்வம் போராடுகிறார். முடிவெடுக்க முடியாது சிலர் தடுமாறுகின்றனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் சசிகலாவுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் தலைமைச்செயலாளரின் வீட்டிலும் அலுவலகத்திலும் வருமானவரித்துறை  அதிகாரிகள் நடத்திய தேடுதல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல் வரலாற்றில் கரும் புள்ளியாக பற்றிக்கொண்டது.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அவரின் தனிச்செயலாளராகக்    கடமையாற்றியவர் ராம்மோகன ராவ்.  அப்போது தமிழக தலைமை ச்செயலாளராக   ஞானதேசிகன்  பொறுப்பேற்றிருந்தார். ஜெயலலிதாவின் நம்பிக்கையை ஞானதேசிகன் இழந்ததால் ஜெயலலிதாவின் கருணைப்பார்வையால்  ராம்மோகன ராவ்  தலைமைச் செயலாளரானார். ராம்மோகன ராவுக்கு முன்னால் 12 மூத்த அதிகாரிகள் இருந்தனர். அவர்கள் எல்லோரையும் புறந்தள்ளி  ராம்மோகன ராவை  தலைமைச் செயலாளராக   ஜெயலலிதா நியமித்ததற்கு அப்போது எதிர்ப்புக் கிளம்பியது. ஜெயலலிதாவின் ஆணவ செல்வாக்கினால் அவை  அனைத்தும் காணாமல் போயின. ஒருமாநிலத்தின் முதலமைச்சராக ஒருவர் செல்வாக்குடன் வலம் வந்தாலும் அந்த மாநிலத்தின்  தலைமைச் செயலாளர் தான் அதனை இயக்குபவராக இருப்பார்.


இந்திய வரலாற்றில்  தமிழக  தலைமைச் செயலா ளரின் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது தமிழக ஊழலின் உச்சக்கட்டமாக அமைந்துள்ளது.  ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழகம் அனைத்திலும் பின்தங்கி உள்ளது. ஊழலில் மற்றைய மாநிலங்களைப் பின்னுக்குத தள்ளி முன்னேறியுள்ளது. தமிழகத்தின் நிர்வாகம்,சட்டம் ஒழுங்கு போன்றவற்றை நெறிப்படுத்தி, ஊழல்,முறைகேடு என்பனவற்றை களையும் அதிகாரம் கொண்ட தலைமை அதிகாரி கறைபடிந்தவர் என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
 ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்மோகன ராவ். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது  செல்வாக்கு மிக்கவராக வலம் வந்த ராம்மோகன ராவ், ஜெயலலிதாவின் ஆட்சியில் அசைக்க முடியாத புள்ளியாக உயர்ந்தார். ராம்மோகன ராவிடம் ஒப்புதல் பெற்றால் ஜெயலலிதா தட்டிக்கழிக்க மாட்டார்  என்ற உண்மையைப் புரிந்துகொண்ட அமைச்சர்கள் ராம்மோகன ராவைச்சுற்றி வலம் வந்தார்கள். தமிழக  தலைமைச் செயலாளரின் வீடு அலுவலகம் என்பனவற்றைச் சோதனையிட்ட வருமானவரித்துறை அதிகாரிகள்   ஆவணங்களையும்  44 கிலோ தங்கத்தையும் கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  .எட்டு  கார்களில் வந்த இருபது அதிகாரிகள் மூன்று நாட்களாகதுணை இராணுவத்தின் உதவியுடன்  இச்சோதனையை மேற்கொண்டனர்.

தலைமைச் செயலாளரின் வீடு அலுவலகம் என்பனவற்றில் சோதனை துணை இராணுவம் குவிப்பு என்பன தமிழக அரசை திணறடித்துள்ளன. ஜெயலலிதா  மரணமானதன் பின்னர் மத்திய  அரசின் பிடி தமிழக அரசின் மீது இறுகப்படிந்துள்ளது. டில்லிக்குச்சென்ற பன்னீர்ச்செல்வம் மோடியைச்சந்தித்தது  அங்கு தன்னிச்சையாக பேட்டி கொடுத்தது, டில்லியில் இருந்து திரும்பிய  பன்னீர்ச்செல்வம்,  சசிகலாவை சந்திக்காமை  போன்றவற்ரால் சசிகலா தரப்பு பன்னீர்ச்செல்வ்காத்தின் மீது கடுப்பாக இருந்தது. வருமானவரித்துறையின் சோதனையால் கடுப்பின் வேகம் தணிந்துள்ளது. ராம்மோகன ராவின் வீட்டிலும் அலுவலகத்திலும் சித்தனோ நடந்த அதேசமயம் அவருடைய மகன்,உறவினர் நண்பர்கள்  வீகள் அலுவலகங்கள் என  13 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். பதுக்கி வைக்கப்பட்ட பணம், தங்கம்  என்பனவற்றுடன் முக்கிய ஆவணங்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளன. ராம்மோகன   ராவின் வீட்டில் முக்கிய ஆவணங்கள் பலவற்றுடன் இரகசிய டயரி ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக  தகவல் வெளியாகியுள்ளது. அந்த டயரியில் உள்ள இரகசியத தகவலால் அமைச்சர்கள் சிலர் சிக்குவார்கள் என்ற தகவல் கசிந்துள்ளது. 

மணலைக் கயிறாக்குபவர் என்ற என்ற சொல்லால் சிலர் உச்சத்துக்கு உயர்த்தப்படுவர். மணல் மூலம் கோடிகோடியாகச் சம்பாதிக்கலாம் என்று தமிழக அரசுக்கும் பாடம் சொல்லிக்கொடுத்தவர் ராம்மோகன ராவ் மணல் விற்பனையால் அதிக லாபம் கிடைத்ததால் மணல் விற்பனையை தமிழக அரசு கையிலெடுக்க வேண்டும் என ஆலோசனை கூறியவர்.இதனால் தமிழக அரசாங்கம் மட்டுமல்லாது சில அமைச்ரகளும்கோடியில் புரண்டார்கள்.  தமிழக அரசின் சகல நகர்வுகளும் முதலமைச்சர்  ஜெயலலிதாவின் கண் அசைவுக்குப் பின்னரே அசையத்தொடங்கும். ராம்மோகன ராவின் திருவிளையாடல்கள்  ஜெயலலிதாவின் ஆசீர்வாதத்துடன் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ராம்மோகன  ராவைப்பற்றிய தகவல்கள் உளவுத்துறை மூலம் ஜெயலலிதாவின் கவனத்துக்குச் சென்றிருக்கும்.அவர் மீது ஜெயலலிதா ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்விக்கு யாராலும் பதில் கூறமுடியாது.


சேகர் ரெட்டி என்ற ஒப்பந்தக்காரர், அவரது  சகோதரன் சீனிவாச ரெட்டி,பங்குதரர்பிரேம் ரெட்டி ஆகியோரின் வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் தேடுதல் நடத்தினர். சேகர் ரெட்டியின் வீட்டில் 171  கோடி ரூபா பணமும் 130 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டனர். அவை  அரசு அதிகாரிகளுக்கும் ஐந்து அமைச்சர்களுக்கும் சொந்தமானவை என அவர் போட்டுக்கொடுத்தார்.ஏனைய இருவரிடமும் இருந்து 131  கோடி  ரூபா பணமும் 177 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டன. 90  கோடி ரூபா புதிய பண நோட்டுகள்.புதிய  பணத்தைப் பெறுவதற்காக  அப்பாவிமக்கள் வங்கியின் முன்னால் நீண்ட வரிசையில் காத்திருக்கையில் கோடிக்கணக்கான புதிய பணம் இவர்களின் கைக்கு வந்ததைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அமுலாக்கப் பிரிவினரின் முறையான விசாரணையின் பின்னர் மூவரும் கைது செயப்பட்டு விசாரணை வளையத்தினுள் வைக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதா மரணமான அன்று இரவு 100 கோடி ரூபாவை பதுக்குவதுபற்றி சேகர் ரெட்டியும் ராம்மோகன் ராவும் தொலைபேசியில் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேகர் ரெட்டி மீதான விசாரணையின் பின்னர் தமிழக  தலைமைச்செயலாளர் ராம்மோகன ராவ் குறிவைக்கப்பட்டார் தனது பண பலத்தினால் திருப்பதி தேவஸ்தான  உறுப்பினரானார் சேகர் ரெட்டி. திருப்பதி  பிரசாதமான லட்டை ஜெயலலிதாவுக்குக் கொடுத்து அவர் மனதில் இடம் பிடித்தார். அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம்  சேகர் ரெட்டி , பன்னீர்ச்செல்வத்துக்கு அறிமுகமானார். சசிகலா பன்னீர்ச்செல்வம், உட்பட சில அமைச்சர்களும் சேகர் ரெட்டி, ராம்மோகன ராவ் ஆகியோருடன் நெருக்கமாக இருந்ததால் சம்பந்தப்பட்டவர்கள் கலக்கத்தில் உள்ளனர். இவர்களுக்கு புதிய பண  நோட்டுகளைக் கொடுத்த குற்றச்சாட்டில் டில்லியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தமிழகம்,ஆந்திரா, கர்நாடகம்,டில்லி என பரந்துபட்டு விசாரணை நடைபெறுகிறது. . 

தமிழகத்தின்  முன்னாள் தலைமைச்செயலாளர் ஞானதேசிகன்,பன்னீர்ச்செல்வத்தின் நெருங்கிய சகா கரூர் அன்புநாதன்,நந்தம் விஸ்வநாதன்,முன்னாள் மேயர் சைதை துரைசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், ஆகியோரின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் கீர்த்திலால் காளிதாஸ் நகைக்கடைகள்,  அலுவலகங்கள், அப்பலோ குழுமத்துக்குச்சொந்தமான  30 இடங்கள் ஆகியவற்றிலும் சோதனைகள் நடைபெற்றன. வழமை போல பணங்களும்    ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் தமிழகத்தின் முக்கிய புள்ளிகளின் வீதுகளிலும் அலுவலகங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து கோடிக்கணக்கான பணத்தையும் முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.ஆண்டுக் கடைசியிலும் சோதனை தொடர்கிறது புதிய ஆண்டு  வருமானவரித்துறை அதிகாரிகளின் பிறக்கும் என அச்சம் எழுந்துள்ளது.
வர்மா 

No comments: