Thursday, August 17, 2017

அரசியல் நாடகத்தால் அகற்றப்பட்ட சிவாஜி சிலை



இசையில் மூழ்கிக் கிடந்த தமிழ் சினிமாவை வசனத்தின் பக்கம் திசை திருப்பி சாதனை புரிந்தவர் வி.சி.கணேசன். அறிஞர் அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்துசாம்ராஜ்யம் நாடகத்தில் சிவாஜியாக வாழ்ந்ததால்பெரியாரால்  சிவாஜி கணேசன் என அழைக்கப்பட்டார். பின்னர் கணேசன் என்ற அவரது பெயர் மறைந்து சிவாஜி என்ற அடையாளம் ஒட்டிக்கொண்டது. சிவாஜியின் நடிப்பைப் பார்த்துத்தான் சினிமாவில் நடிக்க வந்தேன் என்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை பலரும் ஒப்புவித்தார்கள். சிவாஜிக்கு முன் சிவாஜிக்குப் பின் என்றே தமிழ் சினிமா பிரிக்கப்பட்டுள்ளது.  கலைஞர் கருணாநிதியின் வசனங்களுக்கு உயிரூட்டியவர் சிவாஜி. கட்சி வேறுபாடின்றி இருவரும் நெருக்கமாக இருந்தனர். சிவாஜி இறந்தபின்னர் அவரது  உருவச்சிலையை சென்னையில் நிறுவி தினமும் அதனைப் பார்வையிட்டு சிவாஜியைப் பார்க்கும் சந்தர்ப்பத்தை அனைவருக்கும் வழங்கியவர் கருணாநிதி.  அந்தச்சிலைதான் இரவோடு இரவாக அகற்றப்பட்டது.
சிவாஜி சிலையால் அடிக்கடி விபத்தும் போக்குவரத்து இடைஞ்சலும் ஏற்படுகிறது. என வழக்குத் தாக்கல்செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் சிவஜிசிலையை அகற்ற உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்ட சிலை சிவாஜி மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ளது மேலோட்டமாகப் பார்த்தால் நீதிமன்ற உத்தரவால் சிவாஜிசிலை அகற்றப்பட்டது போன்று தோற்றமளிக்கிறது. இதன் அரசியல் பின்புலத்தை அலசி ஆராய்ந்தால் உண்மைத்தோற்றம் வெளிப்படும். கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையிலான அரசியல் பகமையின் உச்சக்கட்டமே சிவாஜிசிலை அகற்றம். கருணாநிதி ஆட்சி புரிந்தபோது இருந்த அடையாளங்கள் எவையும் இருக்கக்கூடாது என்பதே ஜெயலலிதாவின் கொள்கை.

.  கருணாநிதியால் நிறுவப்பட்ட கண்ணகிசிலை ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில்பட்டபாடு நாடே அறியும். ஜெயலலிதாவின் உத்தரவால் தூக்கி மூலையிலே போடப்பட்ட கண்ணகிசிலை கருணாநிதி ஆட்சிபீடம்   ஏறியதும் உரிய இடத்துக்கு வந்தது. புதிய சட்டசபை அமைப்பதற்கு ஜெயலலிதா பகீரத முயற்சி செய்தார். முடியவில்லை. கருணாநிதியால் கட்டப்பட்ட புதிய தலமைச்செயலகத்துக்குள் செல்லமாட்டேன் என ஜெயலலிதா உறுதிமொழி எடுத்தார். ஜெயலலிதா முதலமைச்சரானதும் மக்கள் வரிப்பணத்தில் கருணாநிதியால் கட்டப்பட்ட புதிய தலைமைச்செயலகம் வைத்தியசாலையாக மாற்றப்பட்டது. இவை இரண்டும் சிறு உதாரணங்கள் தான்..
 தமிழகத்தில் சுமார் 13 ஆயிரம் சிலைகள் இருப்பதாக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. அவற்றில்  சிவாஜிசிலையால் மட்டும் தான் இடைஞ்சலா? மற்றையவற்றால் எதுவித தடங்கலும் இல்லையா? சிவாஜிசிலைக்கு அருகே நடந்த அனைத்தும் உணமையிலேயே நடைபெற்ற விபத்துகளா அல்லது அச்சிலையை அகற்றுவதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட விபத்துகளா என்பதை யாரும் ஆராய்ந்து பார்க்கவில்லை..ஜெயலலிதாவின்  ஆட்சிக்காலத்தில் கண்ணகிக்கு நேர்ந்தகதிதான் சிவாஜிக்கும் நேர்ந்துள்ளது.  கருணாநிதி ஆட்சிக்கு வந்தபின்னர்தான் நீதி கேட்டுபோராடிய கண்ணகிக்கு  நீதி கிடைத்தது.இப்போது கருணாநிதி மெளனித்துப்போயுள்ளார். ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் எதாவது நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.

எம்.ஜி.ஆர்,என்.எஸ்.கிருஷ்ணன் ஆகிய இரண்டு நடிகர்களுக்கு மட்டும் தான் சென்னையில் சிலை இருந்தது. இந்த வரிசையில் சென்னையில் சிவாஜிக்கு சிலை அமைக்கப்பட்டது. அது இப்போது அகற்றப்பட்டுவிட்டது. சிவாஜியின் சிலை  அகற்றப்பட்டதால் அவரது ரசிகர்கள் கொந்தளித்துப்போய் உள்ளனர். ஆனாலும் அமைதியாகத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். கமல் சீமான் போன்றவர்கள் தமது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர். உறக்கத்தில் இருந்த நடிகர் சங்கம் எல்லாம் முடிந்தபின்னர் அறிக்கை விட்டுள்ளது. ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் தஞ்சமடைந்திருந்தால் சிவாஜிசிலை காப்பாற்றப்பட்டிருக்கும். அவரது பிள்ளைகளான ராம்குமாரும் பிரபுவும்  அதனை விரும்பவில்லை.  சென்னையில் சிவாஜிக்கு சிலை வைக்க ஏற்பாடு செய்யப்படும் என அவர்கள் கூறியதால் சிவாஜி ரசிகர்கள் ஆறுதலடைந்துள்ளனர். 
சிவாஜியின் தகப்பன் சுதந்திரப்போராட்ட காலத்தில் காந்தி மீதும் காங்கிரஸ் மீதும் நம்பிக்கை வைத்தவர். திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பமானபோது சிவாஜி அக்கட்சியில் சேர்ந்து பிரசாரம் செய்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடவுள் மறுப்புக் கொள்கையை அவர் மீறியதால் அக்கட்சியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கர்மவீரர் அடிபட்டு எல்லாவற்றையும் இழந்து கரை ஒதுங்கினார். அரசியலில் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் கருணாநிதி ,சிவாஜி-எம்.ஜி.ஆர்,சிவாஜி ஆகியோரின் நட்புக்குப் பாதகம் ஏற்படவில்லை.


செக்கிழுத்த செம்மல் வ.உ.சி, வீரபாண்டிய கட்டபொம்மன்,கொடி காத்த குமரன்சாம்ராட்அசோகன்,  அரிச்சந்திரன், சாஜகான்,சலீம்,கர்ணன், கர்ணன்,ராஜராஜ சோழன்,திருநாவுக்கரசர், சோக்கிரடீஸ், மகாகவி காளிதாஸ் போன்ற புராண இதிகாச பாத்திரங்களை கண்முன்னே நிறுத்தியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை வைத்து மரியாதை செய்தவர். அப்படிப்பட்ட ஒருவரின் சிலையை அகற்றுமாறு கோரி ஒருவர் நீதிமன்றத்தை அணுகியபோது ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு கைகட்டி வேடிக்கை பார்த்தது. இந்தியாவே வியப்புடன் திரும்பிப்பார்த்த வைபவம் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனுடைய திருமணம். தனது வளர்ப்பு மகனின் திருமணத்தின் மூலம் சிவாஜி வீட்டு சம்பந்தியானார் ஜெயலலிதா. கருணாநிதியின் பகைக்கு முன்னால் சிவாஜியின் உறவு அவருக்குப் பெரிதாகப்படவில்லை.

கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சென்னையில் சிவாஜிக்கு சிலை அமைக்கப்படும் என ஆளுநரின் அறிவிப்பு வெளியானது. 2006   ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி   750 கிலோ நிறை உடைய 8 அடி உயரமுள்ள கம்பீரமான  சிவாஜியின் சிலை திறக்கப்பட்டது  சிவஜிக்குச்சிலை வைக்கும் எண்ணம் உதயமானபோது பண்டிச்சேரிக்குச்சென்ற கருணாநிதி அங்குள்ள சிவாஜியின் சிலையை பார்த்தார். அச்சிலை அவரின் மனத்தைக் கவர்ந்தது. அதனை வடித்த ஸ்தபதி மணியிடம் பொறுப்பை ஒப்படைத்தார். அவர் வெளிநாடு  செல்ல நேர்ந்ததால் அவருடைய உதவியாளர் ஸ்தபதி ரவி சிலையை நிறைவு செய்தார்.
காந்தியவாதி சீனிவாசன் என்பவர் சிவாஜியின் சிலையை அகற்ற வேண்டும் என வழக்குத் தாக்கல் செய்தார். காந்தி எனும் வழக்கறிஞர் வாதாடி சிலையை அகற்றும் ஆணையைப் பெற்றார். சிலையை அகற்றக்கூடாது என்பதற்கான காரணம் எதனையும் தமிழக அரசு முன்வைக்கவில்லை. 2015  ஆம் ஆண்டு தீர்ப்பு  வழங்கப்பட்டது.  அரசியல் கட்சி அல்லது சாதி அமைப்புத் தலைவரின் சிலை என்றால் தமிழகத்தில் வன்செயல் வெடித்திருக்கும். சிவாஜி ரசிகர்கள் இன்று முதியவராகிவிட்டனர். ஆனாலும் சிவாஜியின் மீதான அவர்களது பற்றும் பாசமும் சிறிதளவும் குறையவில்லை.


சென்னையில் தலைவர்களின் சிலைகள் இருக்கும் இடத்தில் சிவாஜிக்குச்சிலை வைக்க வேண்டும் என்ற கோஷம் வலுவாக எழுந்துள்ளது. கட்சி பேதமற்று அனைவரும் ஒருமித்துக் குரல் கொடுத்துள்ளனர்.இனி ஒரு விதி செய்வோம் சிவாஜிக்குச்சிலை அமைப்போம் அரசியலுக்கு அப்பால் என கமல் தெரிவித்துள்ளார். சிவாஜிக்கு இன்னொரு சிலை வைக்கலாம். அது நடிகருடைய நட்புக்கு இலக்கணமாக கலைஞர் அமைத்த சிலைக்கு ஈடாகாது என்பது நிதர்சனம்.

சூரன்.ஏ.ரவிவர்மா 

No comments: