Wednesday, August 2, 2017

அது எங்கட காலம்


எழுத்தாளர், வானொலி ஊடகவியலாளர், விமர்சகர், இலக்கியவாதி,  வாசகர் என பன்முக ஆளுமைகளைக் கொண்டவர்  கானா பிரபா. ஒவ்வொரு துறையும் ஒரு சமுத்திரம். அந்தச்சமுத்திரங்களில் குதிக்காலை நனைத்துவிட்டு பெருமை பேசுபவர்களின் மத்தியில் ஆழ்கடலுக்குள் மூழ்கி முத்துக்களை வெளியில்  கொண்டுவருபவர் கானா பிரபா. அவர் தனது மாணவப் பருவ வாழ்வியலை " அது எங்கட காலம்" என்ற நூலின் வாயிலாகத் தந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் வாழும் அவர்  "அது எங்கட காலம்" - தாயகத்து நினைவுகளை இரை மீட்கும் ஊர்க் குருவியின் பதிவுகள் மூலம் தனது மாணவப் பருவத்து ஐந்து அனுபவங்களையும், தான் சந்தித்த தன்னை வழி நடத்திய ஒன்பது மனிதர்களையும், சந்தோசமாக குடும்பத்துடன்கொண்டாடிய ஐந்து விழாக்களையும் 21  தலைப்புகளில் நினைவுபடுத்தியுள்ளார். அப்படி ஒருகாலம் எல்லோருக்கும் இருக்கிறது. சுகமான நினைவுகளை உறவினர்களுடனும்  நண்பர்களுடனும் பகிர்ந்துகொண்டு காலத்தைக்  கடத்துவார்கள். ஆனால்,கானா பிரபா அதனைப் புத்தகமாக்கி வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். அது எங்கட காலம் எனும்  இப் புத்தகம் கானா பிரபாவின் சுயசரிதையின் ஒரு பாகம் என்றும் கூறலாம். காந்தி, கண்ணதாசன் போறவர்கள் உண்மையை அழுத்தி கூறியது போன்று கானாவும் கலப்படமற்ற உண்மையைத் தந்துள்ளார். 
என் இனிய மாம்பழமே
என் இனிய மாம்பழமே எனும்தலைப்பில் மாமரத்தின் சரித்திரத்தைப் பகிர்ந்துள்ளார். இதனைப் படித்து முடித்ததும். பாடசாலைக் காலத்தில் மாங்காய்,,புளியங்காய்,நெல்லிக்காய், விளாங்காய், இலந்தைப்பழம்  போன்றவற்றை திருடிய  ஞாபகம் வந்து போவதைத் தவிர்க்க முடியாது.  புட்டுடன் மாம்பழத்தைச் சேர்த்து சாப்பிட்ட அனுபவத்தை கானா பிரபா சொல்லும் போது நமக்கும் அந்த அனுபவம் ஏற்படுகிறது. விலாட்டு,அம்பலவி,செம்பட்டான்,சீலம்,கறுத்தக்கொழும்பான்,வெள்ளைக்கொழும்பான்,பாண்டி,பச்சைத்தண்ணி [பச்சை தின்னி],கிளிச்சொண்டு ஆகிய மாம்பழங்களின் சுவை எப்படி இருக்கும்.வடிவம் எப்படி இருக்கும். அவற்றைப் பழுக்க வைக்கும் முறைகள் போன்றவற்றை அனுபவித்து விபரித்துள்ளார்.
புளி மாங்காய்  தக்காளி,கத்தரி,கருவாட்டு தீயல் சோதி என்பவற்றை ருசியாக்கும். உப்பும் மிளகாய்த்தூளும்கலந்து  சாப்பிட  ருசியான மாங்காய்   கடித்துச்சப்பிடும் மாங்காய்,சுவரில் குத்தி உடைத்துச்சாப்பிடும் மாங்காய் என மாங்காய்களை வகைபடுத்தி சுவையை அனுபவிக்கத்துண்டும் வகையில் தந்துள்ளார். மங்க்கொட்டைகளின் வடிவம். அவற்றுடன் இணைந்த விளையாட்டுக்கள் என்பனவற்றை கானா பிரபா மனதில் நிறுத்துகிறார். செங்கை ஆழியான், கல்கி, சாந்தன் ஆகியோர்  மாம்பழம் பற்றி சொன்னதையும் கோடிட்டுக் காட்டியுள்ளார். கானா பிரபாவின் முதல் வருமானம் அம்மம்மாவுடன் இணைந்து விற்ற  மாங்காய்கள்.  அவரது முதல் முதலாவது முதலீடு ராணி காமிக்ஸ், மல்லிகை, கமலம் பிரசுரம், யாழ். இலக்கிய வட்ட வெளியீடுகள் என மனம் திறந்து சொல்லியுள்ளார்.
உயரே மாமரக்  கொப்புகளூடே கடந்து நிலத்தில் தெறித்துத் திசைக்கொன்றாய் சிதறியோடும் வெம்பல் மாங்க்காய்யாய் எம் சமூகம் எனத் தனது மாம்பழ அனுபவங்களை நிறைவு செய்துள்ளார் கானா பிரபா.   சகல கட்டுரைகளிலும் அவர் பதிந்திருக்கும் முத்தாய்ப்பு மனதை நெருடுகிறது.
வருசப்பிறப்பு வந்துட்டுது
   வருஷம் பிறக்கப்போகுதென்றால் வீடும் கோயிலும் எப்படி இருக்கும் என்பதை கானா பிரபா மனதில் உலாவ விட்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பே வீட்டின் தூசியைத் தட்டி துப்புரவாக்கி,  வீட்டைக் கழுவும்   சடங்கால் நடைபெறும் சம்பவங்களை அழகாகக் கண் முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார்.  வருசப்பிறப்பின் முக்கியத்துவங்களில் மருத்து நீரும் அடக்கம். மருத்து நீர் வாங்குவது, தலையில் வைத்து தோய்வது, புதிய உடுப்பு போடுவது, கைவிசேஷம் கொடுப்பது வாங்குவது, உறவினர்களின் வீடுகளுக்குப் போவது என எல்லாவற்றையும் அசைபோட வைத்துள்ளார் கானா பிரபா.
வீடு காயுமட்டும் அறையளுக்குள்ளை போகேலாது எண்டு பயங்கரவாத தடுப்புச்சட்டம் போட்டு விடுவினம்.  பலாலிப் பக்கமா ஒரு  பொம்பர் போகுது இண்டைக்கு அவங்களுக்கும் கொண்டாட்ட நாள் தானே  என அன்றைய யுத்த காலத்தையும் கானா பிரபா நினைவு படுத்தியுள்ளார்.
நான்கு வருஷங்களுக்குப் பின்னால் ஆமிக்காறனிடம் தப்ப நாட்டை விட்டு ஓடி, ரஷ்யாவின் பணி வனாந்தரத்தில் ஏஜென்சிக்காரனால் கைவிடப்பட்டு அனாதையாய் செத்துப் போவோம் என்ற தன் விதியை  உணராத சுதா என்னை சைக்கிள் பாறில் வைத்துக் கொண்டே பெடலை வலிக்கிறான். எதிர்க்காத்து மூஞ்சையில் அடிக்குது.
அன்று நாங்கள் நிறையச் சிரித்துக்கொண்டிருந்தோம். மிச்சம் ஏதும் வைக்காமல்.............
என கானா பிரபா முடிக்கும் போது வருஷப்பிறப்பின் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாதுள்ளது.
 செய்யது பீடியும் இந்தியன் ஆமியும்
இந்தய இராணுவம் வட கிழக்கில் நிலை கொண்டிருந்தகாலத்தில் பட்ட துன்ப துயரம்  ஒருபுறம் இருக்க வேடிக்கையான வினோதமான பல அனுபவங்களும் எமக்குக் கிட்டின. அதில் ஒன்றுதான் செய்து பீடியும் இந்தியன் ஆமியும். பீடி, சிகரெட் என்ற பொதுவான  பெயர்களை மட்டும் அறிந்துள்ள சிறுவர்கள் அவற்றின் வித்தியாசங்களை அறிந்திருக்கவில்லை. தமிழும் ஆங்கிலமும் தெரியாத இந்திய ஆமியுடன் மல்லுக்கட்டியகாலம் அது.
வாசிகசாலைக்குப் போய்விட்டுத் திரும்பும்போது இந்திய ஆமியிடம் அகப்பட்ட அனுபவத்தை அற்புதமாகச்சொல்லியுள்ளார் கானா பிரபா. கானாவை மறித்த சீக்கிய ஆமிக்காரன் பீடி வாங்கிவரும்படி பத்து ரூபாவைக் கொடுக்கிறான். பீடியைப்பற்றிய மேலதிக விபரம் தெரியாத கானா பிரபா கடைக்காரன் கொடுத்த  பீடிக்கட்டை ஆமியிடம் கொடுக்கிறார். கானா கொடுத்தது ஆர்விஜி  பீடி அந்த பீடியை சீக்கிய  ஆமிக்காரன் புகைப்பதில்லை.  அவன் தன்னிடம் இருந்த பீடிக்கட்டின் சரையைக் காடுகிறான். அது செய்து பீடி. கடைக்காரரிடம் விபரத்தைக் கூறியபோது செய்யது பீடி விற்பதில்லை. அது பெரியகடையில் கிடைக்கும் என்பதால் கொஞ்ச தூரம் போய் வாங்கிவந்து கொடுத்தார்.
கானா பிரபா படித்த பாடசாலையில் ஒரு பகுதி இராணுவ முகமாக இருந்தது.  போட்டிக்கு மாடியில் ஏறி விழுந்து முழங்காலில் காயமடைந்த போது அங்கு வந்த இந்திய ஆமிக்காரன் மருந்து கட்டிவிட்டான். அப்போதுதான் ஆமிக்காரரில் நல்லவர்களும் இருக்கிறார்கள் என்ற  உணர்வு வந்தது. யுத்த காலத்தில் பிரபா என்ற பெயர் எவ்வளவு கொடுமையானது என்பதையும் கானா  பிரபா தெரிவித்துள்ளார்.
அப்பாவின் பி எஸ் ஏ சைக்கிள் இராணுவத்தின் சுற்றி வளைப்பு சோதனை தாக்குதல் என்பனவற்றையும்  கண்முன் கொண்டு வந்து  நிருத்துகிறார் கானா பிரபா.
வெடி கொளுத்தி ஒரு ஊர்ப் பொங்கல்
பொங்கலுக்குத் தேவையான சாமான்களுடன் வெடியும் முக்கிய இடத்தைப் பிதிக்கும். சிறுவர்களின் கையில் வெடியைக் கொடுக்கமாட்டார்கள். கானா பிரபாவின் வீட்டிலும் அவரின் கையில் இனிப்பைக் கொடுத்துவிட்டு அண்ணனின் கையில் வெடியைக் கொடுப்பார்கள். பெரியவனானதும் வெடியுடன் தனக்கிருந்த தொடர்புகளை இக்கட்டுரையில் பதிவிட்டுள்ளார். வட்டப்பெட்டி,சரவெடி, மத்தாப்பு, பூந்திரி [கை மத்தாப்பு], ஈர்ற்க்கில்  வாணம் [ஈர்ற்கு  வாணம்], அட்டை வாணம் [சக்கர  வாணம்] என தான் கொளுத்தி மகிழ்ந்த  வெடிகளைப் பகிர்ந்துள்ளார். சம்பியன்,யானை,ஜம்போ , அனுமான் ஹனுமான் வெடியை இப்படித்தான் சொல்வார்கள். என வெடிகளின் வகைகளையும் பட்டியலிடுகிறார்.
நாயின் மீது றோட்டால் போராவர்கள் மீது  வெடிகொளுத்திப் போட்ட மகிழ்ந்த குறும்பை  மீண்டும் மனதில் நிலை நிறுத்தியுள்ளார். மண்ணெண்ணை பரலுக்குள் வெடிகொளுத்திப்போட்டதையும் புதிய புதிய கண்டுபிடிப்புகளுடன் வெடி கொளுத்திய அனுபவத்தை  விபரமாகத் தந்துள்ளார்.  வெடிக்காத வெடிகளைப் பொறுக்கி நூலை அவிழ்த்து அவற்றை எரிப்பதும் ஒரு சந்தோசம்தான்.
சிரட்டை, ரின்பால் பேணி என்பனவற்றைக் கவிழ்த்து வைத்து வெடியைக் கொளுத்தும்போது அவை உயரே பறக்கும். கண்ணி வெடியின் முன்னோடி  அது என்பது அப்போது யாருக்கும் தெரியாது. வட கிழக்கில் வேடிக்குத் தடை விதித்த போது போலியாக வெடி கொளுத்தி மகிந்ததை கானா பிரபா பகிர்ந்துள்ளார்.
காகங்களுக்கு படையல் இருக்கும்.ஆனால் அவை ஒழுங்காகச் சாப்பிட உந்த வெடி வெடிக்கிறவங்கள்  விட்டால் தானே  என இக்கட்டுரையை முடிக்கிறார்.
தேரடியில் தேசிகனைக் கண்டேன்
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சித்தர்களைப் பற்றிய சிறு குறிப்பு. இந்தச்சித்தர்களைப் பற்றிய பதிவுகள்  சரியான  முறையில் மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை. தன்னுடைய வாசகர்களுக்கு சித்தர்களை அறிமுகப்படுத்தும் பணியை  கானா பிரபா செய்துள்ளார். அவருடைய வெற்றிகளுக்கு சித்தர்களுடைய ஆசியும் ஒரு காரணமாக இருக்கலாம்.  சித்தர்கள் குடிகொண்டிருக்கும் தலமாகையால் நல்லாரின் சிறப்பை உலகம் போற்றுகிறது. நல்லூர்  ஆலயத் திருவிழாவுக்கு இலட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவார்கள். அங்குள்ள சித்தர்களை வணங்குபவர்களின் தொகையை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
எங்கட பள்ளிக்கூடம் வந்த கொம்பியூட்டர்
புதியவை அறிமுகமாகும் போது அதற்கு இருக்கும் மதிப்பும் மவுசும்  காலப்போக்கில் அல்லாமல் போவதை எங்கட பள்ளிக்கூடம் வந்த கொம்பியூட்டரில் விபரித்துள்ளார் கானா பிரபா. கொம்பியூட்டர் அறிமுகமனபோது அதனைப் பார்த்தாலே புண்ணியம் என்ற கருத்து நிலவியது. கானா பிரபா படித்த பாடசாலைக்கு வந்த கொம்பியூட்டரைப் பார்ப்பதற்கு அவரும் நண்பர்களும் பட்ட அவஸ்தைகளை விபரித்துள்ளார் கணக்கிலும் ஆங்கிலத்திலும் எண்பது மாக்ஸ் எடுத்தாத்தான் கொம்பியூட்டர்  படிக்கலாம் என்று அதிபர் அறிவித்ததும் கானா பிரபாவின் ஆசையில் மண் விழுந்தது. அவுஸ்திரேலியாவில் கொம்பியூட்டர்  வாங்கியதையும் அதனை எப்படிப் பாவித்தது என்பதையும் விபரமாகத் தந்துள்ளார். கொம்பியூட்டர் இன்று இல்லாத வீடு இல்லை என்பதையும் பதிந்துள்ளார்.
மண்ணெண்ணெயில் பார்த்த படங்கள்
மக்களுக்குத் தேவையான அத்தியாவசியமான சில பொருட்களை யுத்தத்தைக் காரணம் காட்டி யாழ்ப்பாணத்துக்கு கொண்டு  செல்வதை அரசாங்கம் தடை செய்திருந்தது.எரிபொருள் மின்சாரம் ஆகியன இல்லாமல் மக்கள் பட்ட துன்பங்களும் துயரங்களும் அதிகம். அவற்றை அவர்கள் எப்படிச் சமாளித்தார்கள் என்பதும் வரலாற்றுப் பதிவு தான். கலர் கலரான மண்ணெண்ணெய் சைக்கிள் டைனமோவில் ரேடியோவை இயக்குவது தண்ணிர் இறைக்கும் இயந்திரங்கள் ஜென்றேற்ரராக மாறியது அந்தக்காலம் வெளிவந்த சினிமாப்படங்கள் போன்றவற்றை கானா பிரபா  ஞாபகப்படுத்துகிறார்.
 சிவராத்திரி படக்காட்சி
சிவராத்திரியன்று கோயிலில் நித்திரை முழித்து நான்கு சாமப் பூசையில் பக்தியுடன் கலந்து கொள்ளு அடியவர்கள் ஒரு புறம் இருக்க அன்று நடைபெறும் நாடகங்களைப் பார்ப்பதற்கு ஒரு  கூட்டம் கோயிலுக்குச் செல்லும். தொலைக்காட்சிப் பேட்டி வீடியோ  டெக் ஆகியன வாடகைக்கு கொடுக்கும் தொழில் அறிமுகமானதும் சிவராத்திரியன்று  வீட்டில் படம் பார்ப்பவர்களின் தொகையும் அதிகரித்தது. சிவராத்திரியில் பார்த்த படங்கள் தானும் நண்பர்களும் நடித்த நாடகம் பற்றியும் கானா பிரபா விளக்கியுள்ளார்.
இலவசப் படக்காட்சி பின்னர் கட்டணம் வசூலிக்கும் கட்சியாக மாறியது. சினிமாத் தியேட்டர்கள் இல்லாமல் போனதால் மினிசினிமாக்கள் புற்றீசல்கள் போல் கிளம்பின. மினிசினிமாவில் படம் பார்க்கும் கானா பிராபாவின் ஆசையை கடைசிவரை அம்மா அனுமதிக்கவில்லை.

மணியண்ணை தேவராசா அண்ணை குடும்பம் அண்ணா கோப்பி நடராசா மாமா லைப்ரரி சேர் வரதராஜன் மாஸ்டர் சுந்தரப்பா அருட்செல்வம் மாஸ்டர் வீடு ஆகியன வற்றின் மூலம்    தான் சந்தித்து அனுபவித்தவைகளையும் தன்னை வழிநடத்தியவர்களை அறிமுகப்படுத்துகிறார்  கானா பிரபாவை புடம் போட்ட இடங்களை  எங்களூர் வாசிகசாலைகள் எனும் தலைப்பில் தந்துள்ளார். தீவாளி வருஷங்கள் விளையாட்டுப்போட்டியும் வினோத உடையும் மட்டுவண்டிச் சவாரிகள் அம்மம்மாவை நினைவூட்டும் மாட்டுப்பொங்கல் எங்கட கோயில் கொடியேறி விட்டுது ஆகிய தலைப்புக்களும் அந்தக்கால  ஞாபகங்களைத்  தொட்டுச்செல்கின்றன.

கானா பிரபாவின் மடத்துவாசல் பதிப்பகம் வெளியிட்ட இப்புத்தகத் துக்கு முன்னுரையை லெ.முருகபூபதியும்  அணிந்துரையை மதி கந்தசாமியும் வழங்கியுள்ளனர். அமரர் திருமதி அருண் விஜராணிக்கு இப்புத்தகத்தை கானா பிரபா சமர்ப்பித்துள்ளார். பழைய காலத்து  வீட்டின் முன்னால் ஒரு சிறுவன் சைக்கிளில் ஓடும் அட்டைப்படத்துடன் இப் புத்தகம் வெளிவந்துள்ளது..மடத்துவாசல் பிள்ளையார் வெளியிட்ட இப்புத்தகம்   கலாமணி பரணீதரனால்  வடிவமைக்கப்பட்டு  பரணீ   அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது.                 

No comments: