Monday, August 21, 2017

பூவற்கரையில் விநாயகன்

 பூவற்கரையில் விநாயகன்
 வதிரிகாவனம் பூவற்கரையில் கோயில் கொண்டருளும்
 விநாயக விக்னேஸ்வரப் பிள்ளையார் மகத்துவப்
 பிரார்த்தனைப் பிரபந்தம்

பிரபந்தம்
ஆனைமுகன் ஆறுமுகன் அம்பிகை பொன்னம்பலவன் 
ஞானகுரு வாணிபதம் நாடு.

கலித்துறை
அன்று சிவன் பெயர் அண்ணலெனும் பதியாய்த் திகழ்ந்து
இன்று விநாயக தத்துவ மூர்த்தமெழுந்தருளி
தொன்று தொட்டேயிவ் வதிரிப்பதியினைத் தூய்மை செய்ய
நன்னும் பூவற்கரையில் வதிந்த விநாயகனே.

பதிகம்
பரவெளி ஒளியில் ஒலியென் நாதம்
   பண்புடனோங்காரமானது உலகில்
அரனது நோக்கில் பிரணவ மெய்ப்பொருள்
    ஆனை முகத்துடனான முதல்வன்
பரன்பரை விண்கணங்கள் பணிந்து வணங்கியதால்
     பரகணபதியெனத் திருநாமம் பெற்றவர்
வரமருள இந்த வதிரிகா வனந்தனில்
    வதிந்தனர் பூவற்கரையில் விநாயகன் 1
அகர முதலெழுத்தெல்லாம் உயிர்மெய்யாய்

    ஆனசராசரம்  தோற்றமளித்ததில்
பிரணவமாகவே முன்னுக்குத் தோற்றிய
   பிள்ளையா ரேனுந் தெய்வம் முன்னவனே
நரரெனவுதித்த நம் வினையறுக்க
   நாதத்திலிருந்து தோன்றிய  வைங்கரன்
பரமன் பராசக்தி பண்புடனருளிய
   பண்ணவன்  பூவற்கரையில் விநாயகன்  2

 
படைப்புக்கு முதலில் தோற்றிய பிரணவம்
     பண்புடன் ஓங்காரம் திருமுகமாகவும்
உலக அமைப்பையே பெருவயிராகவும்
    ஊணுயிர் காத்தலீர் காலுருவாகவும்
கலைகளை எழுதத் திருக்கரத்திலோர் கொம்பும்
    கையினில் மோதகம் சராசர ஒடுக்கம்
அங்குச பாசங்கையில் ஆணவச் செருக்கை
    அடக்கியாளப் பூவற்கரையில் விநாயகன் 3

முத்தமிழ் வளர்திடக்கிரிதனி லெழுதிய
     மத்தக மததுத லொற்றைக் கொம்புடையவன்
தோத்திரக் கரத்துயர் தும்பி முகத்தவன்
      நேத்திர நுதலுடைய நிர்மல தேவன் 
அம்மையப்பனைச் சுற்றிய ருங்கனி பெற்றவன் 
     ஆறுமுகக் கடம்பன் அண்ணலாயானவன்
புண்ணிய வழிகாட்டிப் பாவத்தைப் போக்கிடப் 
      பூவற்கரைத் தலத்திலுறைந்த விநாயகன் 4

முப்புரமெரித்த சிவன் மூத்த குமாரன்
    இப்புவியோர் ஏற்று முதல் வழிபடு கடவுள்
அயன் முதல் தேவர்கள் அதிதியானவன்
    கயமுகக் கடவுள் கணபதி நாமன்
எத்தலத்திலும் முதல் பூசை ஏற்பவன்
    ஏரம்பனாக விளங்கிய மூர்த்தி
பந்தமறுக்க இந்த வதிரிகா வனத்துறை
    பண்பாளன் பூவற்கரையில் விநாயகன் 5

வாதாபி கணபதி வடபாலராய் விளங்கி 
மேதாவியாகவுலகெங்கும் பிரகாசித்து 
தாதாமல் தேவதத்துவங்களுக்கும் மேல்
பூதாரம் முதற்பல அண்டங்களையும் கடந்தோன் 
வேதாகம புராண இதிகாசங்களையுந்தந்த 
நாதாந்த மெய்ப்பொருளான கடவுள் 
பேதாதண்மை யகற்றிட இவ்வதிரிகாவனத்துறை
போதனன் பூவற்கரையில் விநாயகன் 6

வாரண வதனமும் மனித அவையமும்
      பூரண வயிறும் பூத உடலமைப்பும்
மாரண மற்றவராய் வலிமையுடையவராத்
      தாரகா சுரரைக் கொன்று தாரகமானவர்
தாமரைக் கண்ணன் மருகனென வானவர்
      தம்பி சுப்பிரமணியற்காக வள்ளியை வெருட்டியவர்
தாமத குணமகற்ற வதிரிகா வனந்தனில்
     தரித்தனர் பூவற்கரையில் விநாயகன் 7

 எண்டிசைப் பாலகற்கும் ஏகாதிபனாய் விளங்கி
   ஏறும்பெருச்சாளி சிவனின் மகன்
பண்டிசை கங்கைமைந்தன் பாவலர் களாரம்பிக்கும்
   பாங்கான நூல் முகத்தில் பதியுங் கணேசன்
முத்தமிழுக்கும் நாயகன் முதலெழுத்துமானவன்
   சித்தம் வைத்த தன் பக்தர்களை சிதையாது பாதுகாப்பவன்
பக்தகோடி மக்கட்குப் புரிந்தருட்பார்வை நல்க
   இத்தலமும் பூவற்கரையில் விநாயகன்  8

வேதவியாச முனிவர் பாரதஞ்சொல்ல

    வெற்பா வட மேருவை ரடாகக்கொண்டு
கோடான தன தொரு காம்பாலெழுதிய
   லம்போதரன் தலைவன் களிற்றுவதனன்
பாதாளம் விண்ணுலகம் பரற்தேக மாக நின்று
   பேதாதி பேத வினையெல்லா மகற்றும்
நாதாந்த மெய்ப்பொருள்  ஞான‌  விக்னேஸ்வரன்
   நாடி நடுவன் பூவற்கரையில் விநாயகன்  9

 போதாரன் நம்பிவைத்த நைவேத்திய மெல்லாமுண்டு
    பொல்லாப் பிள்ளையாரென்ற பூனை நாமம் பெற்றவர்
தேவாரம் மூவர் தமிழைத் தேடிக்காணாமையால்
   திருநாரைப் பதியிலிருந்து தில்லையிலென் றருளினார்
மாதா உமையாள் குமரன் பீதாம்பரன் மருமகன்
   மூதாதெயாங்கடவுள் மூலவிக்னேஸ்வரன்
ஆதாரமாய் வதிரி பூவற்கரையில் விநாயகன்  10

வாழி
வானவரந்தணரானிரை மரசசெங்கோல் நிறை
வழுவாது வையகமோங்க - வாழி
தானவர் செந்தமிழ்ப் புலவரோடு புனல் சொரிந்து
தழைத்திட மறை நான்குமே - வாழி
மானமுடனிருந்து வாழ் மக்கள் மதிப்புயர்வு
மலர்ந் திருகவே - வாழி
மாதர்களின் கற்புநிலை திறம்பாது நின்றொழுதி
மனமகிழ்நது வலிவருகவே - வாழி
பேதமையகற்று நம் சைவசமயம் சொல்வழிப்
பெருநீதி வழுவாதுலவவே - வாழி
பெருமை தரு திருநீறைந்தெழுத்தும் பரந்து
பெருகியோங்கிடவே - வாழி
மோதமொளிர் வதிரிகா வனமெங்கும் தங்குபுகழ்
பொங்கி பெருமாண்பு போற்றி - வாழி
பொருந்து பூவற்கரைப் பிள்ளையார் திருவருள்
பொலிந்திறங்கியருள் பூவற்கரையோனே - வாழியவே

திரு.கா.சூரன்
[தேவரையாளி இந்துக் கல்லூரி ஸ்தாபகர் ]
யாழ்ப்பாணம் வடமராச்சியில் உள்ள வதிரி பூவற்கரை பிள்ளையார் ஆலய பதிகம்  

No comments: