Tuesday, September 16, 2008

மனைவி தந்த பதவி

இரத்தம் சிந்தாத இராணுவப் புரட்சி மூலம் பாகிஸ்தானின் ஆட்சியைக் கைப்பற்றி தனது பதவியை தக்க வைப்பதற்காக அரசியல் சட்டங்களை மாற்றியமைத்த முஷாரப்பைஅரசியல் புரட்சி மூலம் வீழ்த்திய பாகிஸ்தானின் அரசியல்வாதிகளின் பார்வை ஆசிப் அலி சர்தாரியின் மீது விழுந்துள்ளது.
அரசியல் பின்னணி, அரசியல் அனுபவம் எதுவும் இல்லாது ஆசிப் அலி சர்தாரி பாகிஸ்தானின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட பெனாசிர் பூட்டோவின் கணவன் என்ற ஒரே ஒரு தகுதி மட்டும் சர்தாரிக்கு உள்ளது.
பெனாசிர் பூட்டோ பிரதமராக இருந்த போது அரசியலில் அதிகளவு ஆர்வம் காட்டாது வியாபாரத்தை முன்னேற்றுவதிலேயே சர்தாரி குறியாக இருந்தார். முஷாரப்பின் ஆட்சியின் போது ஊழல் புகாரில் குற்றம் சாட்டப்பட்ட சர்தாரி 11 வருட காலம் சிறையில் இருந்தார். தான் குற்றம் செய்யவில்லை. ஊழல் எதுவும் செய்யவில்லை என்று நிரூபிக்கத் தவறிய சர்தாரி தான் ஒரு மனநோயாளி என நிரூபிப்பதில் வெற்றி பெற்றார். மன நோயாளி என நீதிமன்றத்தில் அறிவித்த சர்தாரி பாகிஸ்தானின் ஜனாதிபதியாகலாமா என்ற கேள்வி எதிர்க்கட்சிகள் மத்தியில் எழுந்துள்ளது.
குண்டு வெடிப்பில் பெனாசிர் மரணமானார். நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தலில் போட்டியிட முடியாத நிலையில் நவாஷ் ஷெரிப் உள்ளார். இந்த இடைவெளியை பயன்படுத்திய சர்தாரி ஜனாதிபதியானார். பெனாசிர் குடும்பத்தின் அரசியல் செல்வாக்கு சர்தாரியை ஜனாதிபதியாக்கி உள்ளது. பெனாசிர் மறைந்ததும் கட்சித் தலைமை மகனான பிலாலிடம் ஒப்படைக்கப்பட்டது. பிலாலின் கல்வி முடியும் வரை அவர் அரசியலில் ஈடுபட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.
பாகிஸ்தானின் அரசியல் கக்தி மீது நடப்பதற்கு ஒப்பானது. கரணம் தப்பினால் மரணம் என்பதற்கு உதாரணமாக பாகிஸ்தான் அரசியல் உள்ளது. பாகிஸ்தான் மக்களின் விருப்பம், அமெரிக்க அரசின் விருப்பம், தலிபான், அல்குவைதா, பாகிஸ்தானின் பழங்குடியினர் ஆகியோரின் எதிர்பார்ப்பு என்பனவற்றை ஒரே நேரத்தில் நிறைவேற்ற வேண்டிய இக்கட்டான சூழ்நிலை பாகிஸ்தானின் ஜனாதிபதிக்கு உள்ளது.
ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் நிலை கொண்டிருக்கும் அமெரிக்கப் படையினரின் போராட்டங்களுக்கு வழிவிட வேண்டிய கடப்பாடும் பாகிஸ்தான் ஜனாதிபதிக்கு உள்ளது. இதேவேளை அண்டை நாடான இந்தியாவின் அரசியல் நல்லுறவை வளர்க்க வேண்டிய பாரிய பொறுப்பு பாகிஸ்தானின் ஜனாதிபதி சர்தாரியின் மேல் சுமத்தப்பட்டுள்ளது.
அனுபவம் உள்ள அரசியல்வாதிகளே பாகிஸ்தானில் நிலையான ஆட்சியைக் கொண்டு வர முடியாது திணறுகின்றனர். இந்த நிலையில் எந்த விதமான அரசியல் அனுபவமும் இல்லாத சர்தாரி பாகிஸ்தானை எப்படி நிர்வகிக்கப் போகிறார். ஜனாதிபதியாக சர்தாரி பதவி ஏற்றாலும் அங்கு நடைபெறும் குண்டுச் சத்தங்கள் இன்னமும் ஓய்வு பெறவில்லை.
பாகிஸ்தானில் அரசியல் மாற்றம் நடைபெற்றுள்ளது என்பது உண்மையே தவிர அங்குள்ள மக்கள் அரசியல் மாற்றத்தை ஏற்றுள்ளார்களா என்பது புரியவில்லை.
பாகிஸ்தானின் அரசியல் மதத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. மதத்துக்கு அவதூறு ஏற்படுத்துபவர்கள் அல்லது மத ஒழுக்கத்தை கடைப்பிடிக்காதவர்கள் அங்கு அதிகாரம் செலுத்த முடியாது. முஷாரப்பின் ஆட்சி மாற்றத்துக்கு செம்மசூதியும் ஒரு காரணம். செம்மசூதி மீதான தாக்குதலினால் பாகிஸ்தான் மக்கள் முஷாரப்பை ஆட்சியில் இருந்து விரட்ட தருணம் பார்த்திருந்தனர். பாகிஸ்தானின் இராணுவம் முஷாரப்புக்குப் பக்கத் துணையாக இருந்ததனால் அவரது ஆட்சியை அகற்றுவது சிரமமாக இருந்தது. பாகிஸ்தான் இராணுவமும் முஷாரப்பை கைவிட்டதனால் ஆட்சி மாற்றம் சுலபமானதாக இருந்தது.
முஷாரப்பின் ஆட்சி அகற்றப்பட்டது. சர்தாரியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. சர்தாரியின் முன்னால் உள்ள பணி மிகப் பிரமாண்டமானது. பாகிஸ்தான் அரசியல்வாதிகள் ஜனாதிபதி சர்தாரியின் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள். பாகிஸ்தானின் இராணுவமும் உளவுப் படையும் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கிறார்களா என்பதற்கான விடை இன்னமும் கிடைக்கவில்லை. வி

ரமணி; மெட்ரோ வார இதழ்12.09.2008

No comments: