
இந்திய நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் மிகப் பெரிய கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக்கழகம் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின் போது யாருடன் கூட்டணி சேர்வது எனத் தெரியாது தடுமாறிக்கொண்டிருக்கிறது.
மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியும், தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக்கட்சியும் ஒன்றை ஒன்று விட்டுப் பிரிய முடியாத நிலையில் உள்ளன.
தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் வெளியேறி அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகத்துடன் இணைந்தது. இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் இவ்வேளையில் பாட்டாளி மக்கள் கட்சியை திராவிட முன்னேற்றக்கழகம் வெளியேற்றியது. மாக்சிஸ்ட் கட்சியும், இந்திய கொம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டன.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி வெற்றி பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெறியேறிய கட்சிகளில் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். 14 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மீளப் பெறுவதாயின் அக்கட்சிகளின் பலத்தை ஒத்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டிய சூழல் உள்ளது.
தமிழகத்தில் வாக்கு வங்கிகள் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒவ்வொரு திக்கில் உள்ளன. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகமும் அடுத்த தேர்தலையும் இணைந்து சந்திக்க உறுதி பூண்டுள்ளன.
திராவிட முன்னேற்றக்கழகமும், காங்கிரஸ் கட்சியும் அடுத்த தேர்தலில் இணைந்தே போட்டியிட வேண்டிய சூழலில் உள்ளன. இதேவேளை விஜயகாந்துடன் கூட்டணி சேர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் விரும்புகின்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சி காங்கிரஸுடன் கூட்டணி என்று கூறி வருகிறது. காங்கிரஸ் கட்சியோ பாட்டாளி மக்கள் கட்சிக்கு பரிந்து பேசுவதைத் தவிர்த்து வருகிறது. இடதுசாரிகள் இதுவரை யாருடன் கூட்டணி என்று அறிவிக்கவில்லை. காங்கிரஸ், பாரதீய ஜனதாக் கட்சி ஆகியவற்றைத் தவிர வேறு கட்சிகளுடன் கூட்டணி சேர விரும்புகின்றனர்.
தமிழகத்தில் இழந்திருக்கும் செல்வாக்கை மீளப் பெறுவதற்காக திராவிட முன்னேற்றக் கழகம் பல சலுகைகளை வழங்கி வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டு செல்லும் அதே வேளையில் பொது மக்களுக்குத் தேவையான பொருட்களை சலுகை விலையில் வழங்கி வருகிறது.
தமிழக அரசு கவர்ச்சிகரமான பலதிட்டங்களை முன்னெடுத்துச் சென்றாலும் மின்வெட்டு தமிழக அரசுக்கு கரும்புள்ளியாகவே உள்ளது. தமிழகத்தில் அமுல்படுத்தப்படும் மின் வெட்டை எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் எதிர்த்து வருகின்றன. தமிழக அரசை அகற்றுவதற்கு மின்வெட்டு ஒன்றே போதும் என்று எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.
பலவீனமாக இருக்கும் கூட்டணியை பலமடையச் செய்ய வேண்டிய தர்மசங்கடமான நிலையில் தமிழக முதல்வர் உள்ளார். திராவிட முன்னேற்றக்கழகம், காங்கிரஸ் கட்சி, விஜயகாந்தின் கூட்டணி அமைந்தால் இழந்த செல்வாக்கை மீண்டும் பிடிக்கலாம். இன்றைய நிலையில் திராவிட முன்னேற்றக்கழகத்துடன் கூட்டணி அமைக்க விஜயகாந்த் விரும்பமாட்டார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்தால் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறலாம். தேர்தலுக்கு நாள் குறிக்கப்பட்டு தொகுதி உடன்பாட்டில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால்தான் அப்படி ஒரு நிலை உருவாகும். தொகுதி உடன்பாடு சுமுகமாக நடைபெற்றால் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் பலியானதாகி விடும்.
தமிழக காங்கிரஸ் தலைவர்களை திருப்திப்படுத்த வேண்டிய ஒரு வழி தான் தமிழக முதல்வரின் முன்னால் உள்ளது. தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இடம்கொடுத்து அடுத்த நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தால் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறலாம்.
1967ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் திராவிடமுன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சியை தமிழக ஆட்சியில் இருந்து அகற்றியது. அண்ணா நூற்றாண்டு விழாவில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தின் அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சூழ்நிலை தோன்றியுள்ளது.
கட்சிகளின் கூட்டணி எப்படி இருக்கும் என்ற ஆரூடங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனை கழகத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து வெளியேற்றி விடவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துக் கொண்டே வருகிறது.
திராவிட முன்னேற்றக்கழகத்தின் வெற்றிக்கு சன் தொலைக்காட்சியும் ஒரு காரணம். மாறன் சகோதரர்கள் முதல்வரை விட்டுப் பிரிந்த பின்னர் கழகத்தின் சாதனைகளுக்கு சன் தொலைக்காட்சி முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தமிழகத்தின் பலமான ஊடகம் இல்லாத நிலையில் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலைச் சந்திக்கப் போகிறது.
ஆட்சியைத் தக்க வைக்க முதல்வர் கருணாநிதி தன்னாலான முயற்சிகளை மேற்கொள்கிறார். எம்.ஜி.ஆரைத்தவிர வேறு எவரையும் தொடர்ந்து ஆட்சி அமைக்க தமிழக மக்கள் அனுமதிக்கவில்லை.
வர்மா; வீரகேசரி வாரவெளியீடு (21.09.2008)
1 comment:
Hello, I like this blog.
Sorry not write more, but my English is not good.
A hug from Portugal
Post a Comment