
தமிழ் சினிமா ரசிகர்களினால் மிக அதிகமாக வெறுக்கப்பட்ட நடிகர் நம்பியார். எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் நம்பியாரை தமது ஜன்ம விரோதியாகவே பார்த்தனர். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்த போது அவரை வாழ்த்திய வயோதிபப் பெண்மணி ஒருவர் நம்பியாரை உன் பக்கத்திலேயே வெச்சிருக்காதேய்யா என்று ஆலோசனை கூறினார். இவை எல்லாம் நம்பியாருக்குக் கிடைத்த பாராட்டுதல்களேயன்றி இழிசொற்கள் அல்ல.
கதாநாயகனுக்கு தெரிந்த சகல கலை அம்சங்களும் தெரிந்த ஒரு வில்லன் நடிகர் நம்பியார். திரையில் தான் அவர் வில்லனே தவிர நிஜத்தில் கதாநாயனையும் மிஞ்சிய பண்பாளன். வாள்ச் சண்டை, கத்திச்சண்டை, குதிரை யேற்றம், மல்யுத்தம் ஆகிய வற்றில் கதாநாயகனுக்கு இணையாக தனது திறமையைக் காட்டுவார்.
எம்.ஜி.ஆரும் நம்பியாரும் மோதும் காட்சிகளில் சண்டைப் பயிற்சியாளருக்கு அதிக வேலை இருக்காது. இருவரும் கத்திச் சண்டை, வாள் வீச்சு, சிலம்பம் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்கள். தற்காப்புக் கலையில் ஒருவரை ஒருவர் விஞ்சும் வகையில் திறைமை வாய்ந்தவர்கள்.
திரைப்படத்தில் தான் எம்.ஜி.ஆரும் நம்பியாரும் வில்லனே தவிர நிஜத்தில் இருவரும் மிகச் சிறந்த நண்பர்கள். எம்.ஜி.ஆர். முதல்வரானதும் சினிமாக் கலைஞர்கள் பலருக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தார். நம்பியாருக்கும் ஒரு பதவி கொடுப்பதற்கு எம்.ஜி.ஆர் விரும்பினார். அதனை நம்பியார் மறுத்துவிட்டார்.
வெளியூரில் படப்பிடிப்பு நடக்கும் போது தனது மனைவியையும் அழைத்துச் செல்வார். மனைவியின் கையால் சமைத்த உணவை உண்பதில் மிகுந்த ஆனந்தமடைபவர் நம்பியார். அந்த வேளையில் மனைவியின் செலவை தயாரிப்பாளரின் தலையில் கட்டாது பிரயாணச் செலவு, சாப்பாட்டுச் செலவு, தங்குமிட வாடகை எல்லாவற்றையும் தனது சொந்தப் பணத்தில் செலுத்துவார்.
எம்.ஜி.ஆருடன் மட்டுமல்ல சிவாஜி கணேசனுடனும் கத்திச்சண்டை வாள் சண்டை ஆகியவற்றில் தூள் கிளப்பினார் நம்பியார். நம்பியõரின் முகமும் கண்ணும் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை எடுத்துச் சொல்லிவிடும்.
கேரளத்தில் உள்ள மஞ்சேரியில் 1919 ஆம் ஆண்டு பிறந்த இவரின் முழுப் பெயர் மஞ்சூரி நாராயணன் நம்பியார். 13 ஆவது வயதில் நவாப் ராஜமாணிக்கம் நாடகக் குழுவில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார். 1935ஆம் ஆண்டு தமிழிலும் ஹிந்தியிலும் வெளியான பக்தரõமதாஸ் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். சுமார் 70 வருடங்களாக நான்கு தலைமுறைக் கலைஞர்களுடன் நடித்த அனுபவம் உள்ளவர் நம்பியார்.
பேரறிஞர், அண்ணாத்துரை, கலைஞர் கருணாநிதி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித் தலைவி ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். மனைவி வி.என்.ஜானகி, என்.டி.ராமராவ் ஆகிய முதல்வர்களுடன் நடித்த நம்பியார் தன்னை அரசியல்வாதியாக இனங்காட்டவில்லை.

எம்.ஜி.ஆரின் பல திரைப்படங்கள் வெற்றி பெற்றதற்கு நம்பியாரும் ஒரு காரணம்.
எம்.ஜி.ஆருக்கு ஈடிணையாக நடிப்பதற்கு நம்பியாரைத்தான் முதலில் அழைப்பார்கள். நம்பியார் நடித்தால் தான் படத்தின் காட்சிகள் சிறப்பாக அமையும் என்பது எம்.ஜி.ஆருக்கும் தெரியும். ஆகையினால் தனக்கு வில்லனாக நடிக்க நம்பியாரை கேளுங்கள் என்று எம்.ஜி.ஆர். கூறுவார்.
திரைப்படங்களில் கதாநாயகனின் வெற்றியை குழி தோண்டி புதைக்க முயலும் நம்பியார் நிஜவாழ்வில் மிகவும் சாதுவானவர். அவருடைய வில்லத்தனமான நடிப்பு எல்லாம் கமராவின் முன்னாலேயே இருக்கும். கமராவுக்குப் பின்னால் அவர் ஏனையவர்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்ந்தார்.

ஐயப்பனிடம் அதிபக்தி கொண்ட நம்பியாரை திரை உலகில் உள்ளவர்கள் குருசாமி என்று மரியாதையாக அழைப்பார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஹிந்தி திரைப்பட முன்னணி நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோர் குருசாமி நம்பியாரின் தலைமையில் ஐயப்ப யாத்திரை சென்றனர்.திரை உலகில் உள்ள இளம் நடிகர்களுக்கு அறிவுரை கூறுவதில் நம்பியார் என்றுமே பின் நின்றதில்லை. அவரின் ஆலோசனைப்படி இளம் நடிகர்கள் பலர் ஐயப்ப யாத்திரை செல்கின்றனர்.அண்ணாவின் வேலைக்காரி படத்தில் நடித்த பெருமைக்குரியவர் நம்பியார். முதல்வர் கருணாநிதியின் நாம் என்ற படத்தில் மூன்று பாடல்களைப் பாடி நடித்தார். வில்லன் நடிகராக அறியப்பட்ட நம்பியார் திகம்பர சாமியார், நல்லநங்கை, கல்யாணி ஆகிய மூன்று படங்களில் கதாநாயகனாக நடித்தார். கதாநாயகன் வேடம் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதனால் மீண்டும் வில்லனாக நடித்து தனது நடிப்பாற்றலால் மக்களின் மனதைக் கவர்ந்தார்.

தசாவதாரம் படத்தில் கமல் 10 வேடங்களில் நடித்ததை இன்று பரபரப்பாக ஊடகங்கள் பெருமையாகப் பேசுகின்றன. திகம்பர சாமியார் படத்திலும் நம்பியார் 11 வேடங்களில் நடித்து அசத்தினார். அந்தக் காலத்தில் அவர் நடித்த 11 வேடங்கள் பரபரப்பா கப் பேசப்பட்டன.
ஜமீந்தார், இளவரசன், அமைச்சர், படைத்தளபதி, ராஜகுரு ஆகிய பாத்திரங்களில் நம்பியார் நடிக்கும் போது கதா பாத்திரமாகவே மாறிவிடுவார்.
தில்லானா மோகனாம்பாள் படத்தில் நம்பியார் திவானாக நடித்தார். சிறப்பாக இருந்தது திவானின் கம்பீரமும் மோகனாம்பாளிடம் கெஞ்சுவதும் அவரது மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியது.

நெஞ்சம் மறப்பதில்லை ஸ்ரீதரின் அபூர்வமான படங்களில் ஒன்று. அப் படத்தில் நம்பியார் ஜமிந்தõராக நடித்தார். மறுபிறப்பைக் கூறும் அப்படத்தில் 107 வயதுக் கிழவனாக தன் மகனையும் அவனது ஏழைக்காதலியையும் கொலை செய்ய வெறியுடன் அலையும் அவரது நடிப்பு மிகவும் தத்ரூபமாக இருந்தது. தொழில் நுட்பங்கள் அறிமுகமாகாத அந்தக் காலத்தில் கிழவனாக அவர் போட்ட ஒப்பனை பயத்தை உண்டாக்கியது.ராஜகுமாரியில் நம்பியாரின் ராஜகுரு வேடம் எம்.ஜி.ஆர். ரசிகர்களை எரிச்சலடையச் செய்தது.
எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் அப்பாவியான எம்.ஜி.ஆரை நம்பியார் புரட்டி எடுக்கும் போது எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் துடிதுடித்தார்கள். அப்பாவி என நினைத்து துடிப்பான எம்.ஜி.ஆரை சவுக்கால் அடிக்க நம்பியார் முயலும் போது அந்த சவுக்கால் எம்.ஜி.ஆர். நான் ஆணையிட்டால் என்ற பாடலைப் பாடிய படியே நம்பியாரை அடித்து உதைக்கும் போது திரை அரங்கத்தில் மகிழ்ச்சிஆரவாரம் பொங்கியது.
உத்தமபுத்திரனில் இளவரசனை அழித்து ஆட்சியைக் கைப்பற்றத்துடிக்கும் அமைச்சராக நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றார் நம்பியார்.1952ஆம் ஆண்டு வெளியான ஜங்கிள் என்ற ஆங்கிலப் படத்தில் நடித்தார். தமிழக அரசு நம்பியாருக்கு 1952 ஆம் கலை மாமணி விருது வழங்கி கௌவரப்படுத்தியது. 1990ஆம் ஆண்டு நம்பியாருக்கு எம்.ஜி.ஆர். விருது வழங்கப்பட்டது.
நான் வில்லன் அல்ல என்று நம்பியார் அடித்துக் கூறினாலும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் நம்பமாட்டார்கள்.
ரமணி; மெட்ரோ நியூஸ், 21.11.2008
1 comment:
நல்லதொரு கட்டுரை.. :) பதிந்தமைக்கு நன்றி..
Post a Comment