Wednesday, November 26, 2008

அமீருக்குவலை வீசும் அரசியல்கட்சிகள்

இலங்கைப் பிரச்சினையால் இந்திய அரசியல் களம் கொதிப்படைந்துள்ளது. இலங்கைத்தமிழ் மக்களின் துயரைத்தீர்ப்பதற்காக தமிழகத்தில் ஒலித்த குரல் டில்லி, பெங்களூர்,மும்பை, அந்தமான்தீவுவரை பரந்துள்ளது.இராமேஸ்வரத்தில் நடைபெற்ற கூட்டத்தில்
உணர்ச்சிவசப்பட்டு பேசியதற்காக தமிழகப்பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இயக்குநர்களான அமீரும், சீமானும் ஒரே நாளில் கதாநாயகர்களாகிவிட்டனர்.சினிமாவே கதி என்று இருந்த இவர்களைஅரசியல் பக்கம் இழுக்கும் நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின்தலைவர் டாக்டர் ராமதாஸ் அமீரையும் சீமானையும் சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பின் போது அவர்களை அரசியலுக்கு வரும்படி. டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டதாகசெய்திகள் வெளியாகின.
ல நாட்களின் பின்னர் அமீரும், சீமானும்வைகோவைச் சந்தித்துப் பேசினார்கள். இலங்கைத் தமிழர்களுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் ஆதரவாகப் பேசி தமிழக அரசினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட வைகோ, அமீர், சீமான்
ஆகியோரின் சந்திப்பு அரசியலில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
அமீரும் சீமானும், மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக் கழகத்தில் சேரப்போவதாகசெய்தி வெளியானது. தமிழகத்திரைப் படங்களின்மூலம் புரட்சிகரமான கருத்துக்களைக்கூறும் இயக்குநர்களின் நடவடிக்கைகளும்புரட்சிகரமாகவே உள்ளன. பாட்டாளி மக்கள்
கட்சியா? மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகமா? என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்முன்னர்அமீரும், விஜயகாந்தும் இந்தவாரம்சந்தித்துப் பேசவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது."விஜயகாந்தும் அமீரும் தொலைபேசியில்அடிக்கடி பேசுகின்றனர். விரைவில் இருவரும்சந்திப்பார்கள். அதன் பின்னர் விஜயகாந்தின்கட்சியில் அமீர் இணைந்து விடுவார் என்றுதேசிய முன்னேற்றத் திராவிடக் கட்சியின்உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
டாக்டர் ராமதாஸை அமீர் சந்தித்த போதுபாட்டாளி மக்கள் கட்சியில் அமீர் சேரப்போகிறார் என்று பரபரப்பாகப் பேசப்பட்டது.
வைகோவைச் சந்தித்து பேசிய பின்னர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக சட்டமன்றஉறுப்பினராக வீர. இளவரசனின் இறுதிச் சடங்கில் அமீர் கலந்து கொண்டதால் அவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தில்இணையப் போவதாக செய்தி பரவியது.
அதேபோல், விஜயகாந்தை அமீர் சந்திக்கப்போவதாக பரபரப்பான செய்தி வெளியானதன்பின்னணியில் அவர் விஜயகாந்தின் கட்சியில் இணையப்போவதாக செய்தி பரவியுள்ளது.
இலங்கைத் தமிழ் மக்களுக்காக உணர்வு பூர்வமாகக் குரல் கொடுத்த அமீரும் சீமானும் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டுள்ளனர். ஏதாவதுஒரு அரசியல் கட்சியில் சேர வேண்டுமென்று அமீரின் நண்பர்கள் சிலர் கூறுகின்றனர். ஆனால், வேறு சிலரோ தரமான சினிமாவைத்தரும் அமீர் அரசியலில் முழுமூச்சாகஈடுபடக்கூடாது. சினிமா மூலம் புரட்சிகரமானவிழிப்புணர்வுக் கருத்துக்களை மக்கள் மத்தியில் எளிதாக விதைக்கலாம் என்று கூறுகின்றனர்.
அமீர், சீமான்ஆகியோருக்கு பின் பலமாகஇயக்குநர் பாரதிராஜா இருக்கிறார். இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் பாரதிராஜாவும் விஜயகாந்தும் எதிர் எதிர் முகாமில் உள்ளனர். சீமானையும், அமீரையும்பிணையில் எடுப்பதற்கு முயற்சி செய்த பாரதி
ராஜாவின் விருப்பத்துக்கு மாறாக விஜயகாந்தின் கட்சியில் சீமான் சேருவாரா என்ற சந்தேகமும் உள்ளது. தன்னைப் பழிவாங்கியவர்களைபழிவாங்க வேண்டும் என்ற ஆதங்கம் சீமானிடம் உள்ளது. இது அரசியல் ரீதியாக பழிவாங்கலா அல்லது சினிமா வழியிலான பழிவாங்கலா என்பதை சீமான் இன்னமும் முடிவு செய்யவில்லை.
வைகோ, கண்ணப்பன், அமீர், சீமான் ஆகியோரின் கைதின் பின்னணியில் ஜெயலலிதாவும் காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்களும்உள்ளனர். அமீரையும், வைகோவையும் கைதுசெய்யவேண்டும் என்று முதலில் குரல் எழுப்பியவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் குரலுக்கு காங்கிரஸ் கட்சி, வலுவூட்டியது.திருமாவளவன், கே.வீரமணி என்று கைதுசெய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலைகாங்கிரஸ் கட்சி தினமும் வெளியிட்டு வருகிறது.ஆனால், தமிழக அரசு அதனைக் கண்டுகொள்ளவில்லை.
ஜெயலலிதாவினதும் காங்கிரஸ் கட்சியினதும் நெருக்குதல் காரணமாக அமீர், சீமான்,வைகோ, கண்ணப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இவர்களின் கைது பற்றிக் கேட்டபோது சட்டம் தன் கடமையைச் செய்யும்என்று தமிழக முதல்வர் கூறினார். சீமான்,
அமீர் ஆகியோர் மீது பொலிஸார் தாக்குதல்செய்த குற்றப்பத்திரம் வலுவற்று இருந்ததனால்அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

வைகோவும் கண்ணப்பனும் பிணையில்செல்வதற்கு பொலிஸஸார் ஆட்சேபனை தெரிவிக்காததனால் அவர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். இலங்கைப் பிரச்சினையில் இரு தலைக் கொள்ளி எறும்பாகத்தவிக்கிறார் தமிழகமுதல்வர்கருணாநிதி.தமிழக அரசியல் கூட்டணியில் இருந்து திராவிடமுன்னேற்றக் கழகத்தினால் தூக்கி எறியப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் மீண்டும் இணையும் சாத்தியம் உள்ளது.தமிழக கூட்டணியில் இருந்து பாட்டாளி மக்கள்கட்சி வெளியேற்றப்பட்டதை மத்திய
அரசு விரும்பவில்லை. விமர்சனம் என்ற பெயரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது திராவிடமுன்னேற்றக் கழகத்தினர் மோசமான குற்றங்களைச் சுமத்தியதால் பாட்டாளி மக்கள் கட்சியை தமிழக முதல்வர் தூக்கி எறிந்தார்.
முதல்வர் கருணாநிதியின் நம்பிக்கைக்குப்பாத்திரமான மத்திய அமைச்சர் ரி. ஆர்.பாலுவும் டாக்டர் ராமதாஸும் கடந்தவாரம் சந்தித்து பல விடயங்களை விவாதித்தனர்.மத்திய அமைச்சர் ரி. ஆர்.பாலுவும், டாக்டர்ராமதாஸும் என்ன பேசினார்கள் என்று எவ
ருக்கும் தெரியாது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் பாட்டாளிமக்கள் கட்சியைச் சேர்ப்பது பற்றி இருவரும் கலந்துரையாடி இருக்கலாம். திராவிடமுன்னேற்றக்கழகத்துடன் பாட்டாளி மக்கள்கட்சி இணைய வேண்டும் என்ற மத்திய அர
சின் விருப்பத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சியும் சம்மதம் தெரிவித்துள்ளது.திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டணியில்பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் இணையவேண்டும் என்பதில் மத்திய அமைச்சர் டாக்டர் அன்பு மணியும் அதிக அக்கறை காட்டி
வருகிறார்.ரஜினியும், அத்வானியும் சந்தித்ததால் பாரதிய ஜனதாக் கட்சியில் ரஜினி இணையப்போகிறார் என்று பரபரப்பான செய்தியொன்றுவெளியானது. இதனை ரஜினி மறுத்துள்ளார்.விஜயகாந்தும் சரத்குமாரும் தனிக்கட்சிகளைஆரம்பித்துள்ளனர். அமீரும் சீமானும் என்னசெய்வதென சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.ரஜினிக்கு பல இடங்களிலும் இருந்து நெருக்குதல்கொடுக்கின்றனர் அவரது ரசிகர்கள். ரஜினியின் முடிவு மூன்று வருடங்களின் பின்னர் தான் வெளிவரும். அதுவரை ரசிகர்கள் பொறுத்திருப்பார்களா என்பது சந்தேகம்.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு 16 11 2008

No comments: