Sunday, August 2, 2009

ஜெயலலிதா ஒதுங்கியதால்வெல்வாரா விஜயகாந்த்?


இடைத் தேர்தலுக்காக தமிழகம் களை கட்டத் தொடங்கி விட்டது. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சிகளான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியன தேர்தலைப் புறக்கணிக்கின்றன.
திராவிட முன்னேற்றக் கழகம், கொம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, பாரதீய ஜனதாக் கட்சி ஆகியவற்றுக்கு கடும் போட்டியாக விஜயகாந்த் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்புமனுத்தாக்கல் செய்த விஜயகாந்தின் கட்சியைச் சேர்ந்த வி.சந்திரனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. மாற்று வேட்பாளராக சுந்தர்ராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்ட தால் பாகூரில் விஜயகாந்தின் ஆதரவாளர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.
அதிகார பலம், பண பலம், மின் வாக்களிக்கும் இயந்திரத்தில் உள்ள குறைபாடு ஆகியவற்றின் காரணமாக இடைத் தேர்தலைப் புறக்கணிப்பதற்கு ஜெயலலிதா முடிவு செய்தார். நாடாளுமன்றத் தேர்தலின் போது ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்த தலைவர்கள் இன்று ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிந்துள்ளனர். கூட்டணித் தலைவர்களுடன் ஆலோசனை செய்யாது தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை தன்னிச்சையாக எடுத்தõர் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் முடிவுக்கு வைகோவும் டாக்டர் ராமதாஸும் கட்டுப்பட்டனர். இடதுசாரித் தலைவர்கள் ஜெயலலிதாவின் சொல்லுக்குக் கட்டுப்படாது இடைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இடைத் தேர்தலைப் புறக்கணிக்கும் ஜெயலலிதா தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று தனது கட்சிக்காரர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இடைத் தேர்தலில் இருந்து ஒதுங்கியதும் விஜயகாந்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்ற எதிர்பார்ப்பு உள்ளமை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் வாக்குகள் அனைத்தும் விஜயகாந்தின் கட்சிக்குக் கிடைத்தால் மட்டுமே கடும் போட்டியை உருவாக்க முடியும். விஜயகாந்தின் ஆதரவாளர்களினால் திராவிட முன்னேற்றக் கூட்டணிக்கு தோல்வியை ஏற்படுத்துவது முடியாத காரியம்.
பாகூர், தொண்டாமுத்தூர், கம்பம், இளையான் குடி, ஸ்ரீ வைகுண்டம் ஆகிய தொகுதிகளில் நடைபெறும் இடைத் தேர்தல்களில் வாக்களிக்க வேண்டாம் என்று ஜெயலலிதா தனது கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். வைகோவும் டாக்டர் ராமதாஸும் இதே முடிவைத் தான் எடுத்துள்ளனர். இடைத் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் உள்ள மக்களின் குறைகளைத் தீர்க்கும் தார்மிகக் கடமையில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியன விலகி விட்டன. வெற்றி பெற முடியாது என்ற பயத்தினால் ஒதுங்கியிருக்கும் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சிகள் அத்தொகுதியில் உள்ள தமது ஆதரவாளர்களை நட்டாற்றில் விட்டு விட்டன.
ஜனநாயக நாட்டில் வாக்களிக்கும் உரிமையை தடை செய்வது ஏற்றுக் கொள்ள முடியாதது. வன்னியில் அச்சுறுத்தல் போன்றே இதனையும் கருத வேண்டும். தமிழகத்தை ஆட்சி செய்யும் கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சிக்கும் தகுந்த பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும் வாக்காளர்களை எதிர்க்கட்சித் தலைவர்கள் கட்டிப் போட்டுள்ளனர்.
இடைத் தேர்தல் நடைபெறும் ஐந்து தொகுதிகளிலும் விஜயகாந்தின் கட்சி மூன்றாவது இடத்தையே பிடித்தது. ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்க இருக்கும் விஜயகாந்த் அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணியின் வாக்குகளை தனது பக்கம் சேர்க்கும் முயற்சியில் முழு மூச்சாக இறங்கியுள்ளார்.
இடைத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் தமது வாக்கு வீதத்தை அதிகரிக்கும் முனைப்பில் செயற்படுகின்றன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர்களைக் குறி வைத்தே ஏனைய கட்சிகள் தமது பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன.
இந்திய தேசியக் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் நிலைமை பரிதாபமாக உள்ளது. தமிழகத்திலும் போட்டியிடுகிறோம் என்பதை வெளிக் காட்டுவதற்காகவே பாரதீய ஜனதாக் கட்சி இடைத் தேர்தலில் களமிறங்க உள்ளது. சரத்குமார், கார்த்திக் ஆகியோரின் உதவியுடன் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்த பாரதீய ஜனதாக் கட்சி தனியாகக் களமிறங்கியுள்ளது. கடந்த காலங்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் உதவியுடன் தமிழகத் தேர்தல்களில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதாக் கட்சி வெற்றி பெற முடியாது என்ற நிலையிலும் தேர்தலைச் சந்திக்கத் தயாராகிவிட்டது.
இதே நிலையில் தான் இடது சாரிக் கட்சிகளும் உள்ளன. திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் இணைந்து வெற்றியை சுவைத்த இடதுசாரிக் கட்சிகள் தமது இருப்பை வெளிக்காட்ட தேர்தலைச் சந்திக்கின்றன.
இடைத் தேர்தலைப் புறக்கணிக்கும் ஜெயலலிதாவின் முடிவு விஜயகாந்துக்கு சாதகமாக அமையவுள்ளது. கடந்த சட்ட மன்றத் தேர்தலை விட அதிகமான வாக்குகளை விஜயகாந்தின் கட்சி வேட்பாளர்கள் பெறுவார்கள். விஜயகாந்த் பெறப்போகும் வாக்குகள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகளாகவே இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஸ்ரீ வைகுண்டம் தொகுதி காங்கிரஸுக்கு சாதகமானதாக உள்ளது. ஏனைய நான்கு தொதிகளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணிக்கு சார்பானதாக உள்ளன.
ஜெயலலிதா வைத்திருக்கும் இப் பரீட்சையில் தமிழக முதல்வர் வெற்றி பெற்றால் ஜெயலலிதா புதிய வியூகங்களை வகுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
வர்மா,
வீரகேசரிவாரவெளியீடு
02/08/09

1 comment:

Anonymous said...

நடிகையிடமிருந்து
நடிகருக்குத் தாவப் போகும்
நண்பர்களுக்கு நல்ல
வருமானம் கிடைக்கலாம.
சினிமாவைக் கெடுத்தார்கள்
இப்போது அரசியலைக் கூவம்
ஆக்கி மணக்கச் செய்யப்
போகிறார்கள்.