Sunday, August 23, 2009

ஜெயலலிதாவின் புறக்கணிப்பால்நன்மையடைந்த கருணாநிதி



தமிழக இடைத் தேர்தலை பகிஷ்கரிக்கும்படி ஜெயலலிதா விடுத்த வேண்டுகோளைப் புறக்கணித்த வாக்காளர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியை வெற்றி பெறச் செய்துள்ளனர்.
தமிழகத்தின் மிகப் பெரிய கட்சிகளில் ஒன்றான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியனவும் தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி விடுத்த வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டதனால் ஜெயலலிதா புதிய சிக்கலை எதிர்நோக்கி உள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் தமிழக மக்கள் வைத்துள்ள நம்பிக்கை வலுப்பெற்றுள்ளதையே இடைத் தேர்தல் முடிவு வெளிக்காட்டி உள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றிடமிருந்த தொகுதிகளை திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியே கைப்பற்றியுள்ளது.
"மைனாரிட்டி அரசு' என்று தமிழக அரசை அடைமொழி வைத்து அழைக்கும் ஜெயலலிதாவின் முடிவினால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் எண்ணிக்கை தமிழக சட்டசபையில் அதிகரித்துள்ளது.
வாக்களிக்க விரும்பாதவர்கள் படிவம் ஒன்றை நிரப்பிக் கொடுக்கும் நடைமுறை இந்தியாவில் உள்ளது. ஐந்து தொகுதிகளிலும் சுமார் 250 பேர் அந்தப்படிவத்தை நிரப்பிக் கொடுத்துள்ளனர். ஜெயலலிதாவின் வேண்டுகோளை ஐந்து தொகுதியிலும் உள்ள மக்கள் புறக்கணித்ததனால் திராவிட முன்னேற்றக் கழகம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுடன் விஜயகாந்த் நேருக்கு நேர் மோதி வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்த ஜெயலலிதா ஏமாந்து போயுள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட்டிருந்தால் இடைத் தேர்தலின் முடிவு சில வேளை மாறி இருக்கலாம். அல்லது திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் இலகுவாக வெற்றி பெற்றிருக்க முடியாது.
இடதுசாரிகளின் நிலை தமிழகத்தில் மிகவும் பரிதாபகரமாக உள்ளது. அவர்கள் போட்டி யிட்ட ஐந்து தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளனர். தமிழக ஆளுங்கட்சிக்கு மாற்றீடான எதிர்க்கட்சி இல்லாமையினால் ஆளுங்கட் சியை தட்டிக் கேட்க முடியாத நிலை உள்ளது. தமிழகத்தில் எதிர்க்கட்சி என்ற தகுதியை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மெல்ல மெல்ல இழந்து வருகிறது. 2011 ஆம் ஆண்டு தமிழக சட்ட சபைத் தேர்தலுக்கு முன்னர் பல முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்கு ஜெயலலிதா தள்ளப்பட்டுள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய பிரமுகர்களை வெளியேற்றாது அவர்களை அணைத்துச் செல்ல வேண்டிய கடமையை ஜெயலலிதா உணரத் தவறிவிட்டார்.
தமிழக சட்டமன்ற இடைத் தேர்தலைப் புறக்கணிக்கும்படி ஜெயலலிதா விடுத்த வேண்டுகோளை கம்பம், தொண்டாமுத்தூர், பாகூர், இளையான்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளில் உள்ள மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஐந்து தொகுதிகளிலும் 67 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையான கம்பத்தில் 77 சதவீத வாக்குகளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கோட்டையான பாகூரில் 72 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.
இடைத்தேர்தல் நடைபெற்ற ஐந்து தொகுதிகளிலும் உள்ள அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் தமது தலைமையின் கட்டளையையும் மீறி வாக்களித்தனர்.
வாக்களிப்பு இயந்திரத்தில் உள்ள முறைகேடு, தமிழக அரசின் அதிகாரம், தாராளமான பண பரிமாற்றல் என்பவற்றின் காரணமாக தேர்தலைப் புறக்கணிப்பதென ஒருதலைப்பட்சமாக ஜெயலலிதா முடிவெடுத்தார். ஜெயலலிதாவின் முடிவுக்கு வைகோவும், டாக்டர் ராமதாஸும் கட்டுப்பட்டனர்.
திராவிட முன்னேற்றக்கழகத்துக்குச் சவாலாக உள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தமிழகத் தேர்தலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாகப் பெருøம பேசும் வைகோ, டாக்டர் ராமதாஸ் ஆகியோரின் வேண்டுகோளையும் மீறி ஐந்து தொகுதிகளிலும் உள்ள மக்கள் வாக்களித்துள்ளனர்.
ஜெயலலிதாவின் வேண்டுகோளைப் புறக்கணிக்க ஐந்து தொகுதிகளிலும் உள்ளவர்கள் தமக்குரிய பிரதிநிதியைத் தெரிவு செய்துள்ளனர்.
தேர்தலின் போது அதிகளவான வன் செயல் நடைபெறும் , ஆளும் கட்சி தனது அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்யும் என்ற எதிர்க்கட்சிகளின் கோஷங்கள் இடைத்தேர்தலில் பொய்யாக்கப்பட்டது. இரண்டொரு சிறு சம்பவங்களைத் தவிர பெரியளவிலான தேர்தல் வன்செயல்கள் எவையும் நடைபெறவில்லை.
வெப் கமராக்கள் மூலம் வாக்களிப்பு கண்காணிக்கப்பட்டது. வன் செயல்கள், ஆள்மாறாட்டம் எல்லாம் இதனால் கட்டுப்படுத்தப்பட்டன.
இடைத்தேர்தலில் போட்டியிட்டவர்களின் செலவை ஜெயலலிதா குறைத்துள்ளார். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது என்ற ஜெயலலிதாவின் பிரசாரமும் காற்றில் கரைந்துள்ளது. பலமான போட்டி இல்லாமையால் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி அதிக பணத்தைச் செலவு செய்யாது தேர்தல் பிரசாரம் செய்தது.
இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் உள்ள மக்களுக்கு சட்டமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு ஒருவர் தேவை இல்லை என்ற ஜெயலலிதாவின் தீர்மானத்தை அத்தொகுதியில் உள்ள மக்கள் நிராகரித்து விட்டனர். தமது குறைகளை நிவர்த்தி செய்வதற்கு ஒரு பிரதிநிதி தேவை என்பதை அத்தொகுதியில் உள்ள மக்கள் உறுதி படத் தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதாவின் இந்த அணுகுமுறை அவருக்கும் கட்சிக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. தமது தேவையை நிறைவேற்றுபவருக்கு தமது ஆதரவு உண்டு என்பதை வாக்காளர்கள் வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளனர்.
வர்மா
வீரகேசரிவவாரவெளியீடு 23/08/09

2 comments:

Admin said...

நல்லதொரு பதிவு நண்பரே...
தொடருங்கள்

muni said...

GOOD