Monday, January 11, 2010

பா.ம.க.வைப் பலமாக்கபாதை தேடும் ராமதாஸ்


பெண்ணாகரம் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதனால் தமிழக அரசியல் சற்று அமைதியாகக் காணப்படுகிறது. தமிழக ஆளுநரின் சட்டமன்ற உரை தமிழக அரசுக்கு சற்று தெம்பைக் கொடுத்துள்ளது. வன்முறை இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்ந்ததாக ஆளுநர் தெரிவித்திருப்பது தமிழக அரசுக்கு சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. பயங்கரவாதம், பிரிவினை போன்ற கோஷங்களினால் இந்தியாவின் சில மாநிலங்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் அவ்வப்போது சில போராட்டங்களை நடத்தி வருகின்றன. ஆனால் அவை அதிக வன்முறைகளை ஏற்படுத்தவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியன தமது அரசியல் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சித் தேர்தலும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் நடத்திய விசேட செயற்குழுக் கூட்டமும் தொண்டர்களிடையே முக்கியத்துவம் பெற்றன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சி தேர்தலில் ஊழல், முறைகேடு நடப்பதால் அக்கட்சியின் தொண்டர்கள் சிலர் தொடர்ந்தும் குரலெழுப்பி வருகின்றனர். உட்கட்சித் தேர்தலின் பார்வையாளராக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரேயனின் செயற்பாட்டில் அக்கட்சித் தொண்டர்களில் சிலர் நம்பிக்கை இழந்துள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அதிகம் தொண்டு புரியாத சிலர் தமது செல்வாக்கினால் கட்சியின் உயர் பதவிகளைப் பிடிக்க முயற்சிப்பதாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் குமுறுகின்றனர். நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், இடைத்தேர்தல்கள் ஆகியவற்றில் தோல்வி அடைந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் வெறுப்பு கட்சிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் சூழ்நிலை தோன்றியுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சித் தேர்தல் பற்றி தொண்டர்கள் நடத்தும் போராட்டங்களை ஜெயலலிதா கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. தமக்கு நீதி கிடைக்கும் என்று போராட்டங்களை நடத்துகின்றனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உட்கட்சித் தேர்தலின் கண்காணிப்பாளர் மைத்திரேயனின் கார் தீ விபத்தில் எரிந்து நாசமாகியது. உட்கட்சித் தேர்தல் முறைகேடுகளை மைத்திரேயன் உரிய முறையில் தடுக்கவில்லை என்பதனால் அவர் மீது கோபம் கொண்டவர்களின் செயல் அது என்று கருத்து பரவியது. அதிகாரத்துக்காக அரசியல் படுகொலை பலவற்றை தமிழகம் சந்தித்துள்ளது. இதுவும் ஒரு அரசியல் பழிவாங்கலோ என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. மைத்திரேயனின் கார் எரிந்தது தற்செயலானது என்ற பொலிஸ் அறிக்கையினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஏற்பட இருந்த களங்கம் மறைந்தது. இதேவேளை, பலமான கூட்டணி இல்லாது தனித்து போட்டியிட்டால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை நன்கு உணர்ந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கட்சியின் முக்கியஸ்தர்களை அழைத்து மிக முக்கிய கூட்டம் ஒன்றை டாக்டர் ராமதாஸ் நடத்தினார். அன்றைய கூட்டத்தில் கூட்டணி பற்றி ராமதாஸின் வாயிலிருந்து வெளிவரும் என்று எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து விட்டனர். நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல்கள் ஆகியவற்றில் படுதோல்வி அடைந்த ராமதாஸும் விஜயகாந்தும் கூட்டணியின் முக்கியத்துவம் பற்றி உணரத் தொடங்கி விட்டனர். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் இணையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. எதிர்காலத் திட்டம் பற்றி கலந்துரையாடிய பாட்டாளி மக்கள் கட்,சி கூட்டணி பற்றி எந்தவிதமான முடிவையும் எடுக்காதது கட்சிக்குள் பலத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. பெண்ணாகரம் இடைத்தேர்தல் ஒத்தி வைக்கப்பட முன்னர் பாட்டாளி மக்கள் கட்சியும் திராவிட முன்னேற்றக் கழகமும் தமது வேட்பாளர்களை அறிவித்து விட்டன. தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதனால் பிரசார நடவடிக்கைகள் முடங்கிப் போயுள்ளன. ஆனால் ஆளுநரின் சட்டமன்ற உரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனைகளை விளக்கி வெளி வந்தாலும் பெண்ணாகரம் இடைத்தேர்தலின் முன்னோட்ட நடவடிக்கை போன்றே உள்ளது. ஆளுநரின் உரை வழமையான ஒன்றுதான். எதிர்க்கட்சிகளால் ஆளுநரின் உரையை ஜீரணிக்க முடியாதுள்ளது. வழமை போன்றே ஆளுநரின் உரைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். திராவிட முன்னேற்றக் கழக அரசு பல நல்ல செயற்றிட்டங்களை முன்னெடுத்துள்ளது. ஆகையினால் பெண்ணாகரம் இடைத்தேர்தலை எதிர்நோக்குவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தயாராகி விட்டது. பெண்ணாகரம் இடைத்தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையுடன் இடைத்தேர்தலைச் சந்திக்கத் தயாராக உள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றால் மட்டும் போதாது. அடுத்த சட்டமன்றத் தேர்தலின்போது பெரும்பான்மை பலத்துடன் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற திடசங்கற்பத்துடன் திட்டங்களை வகுத்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னர் நடைபெற உள்ள உலகச் செம்மொழி மாநாடு திரம்விட முன்னேற்றக் கழகத்தின் சாதனையை பறைசாற்றும் மாநாடாக நடைபெறும் சாத்தியம் உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனைகளில் ஒன்றாக உலகச் செம்மொழி மாநாடும் பதியப்படும். உலக செம்மொழி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தமிழக அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. செம்மொழி மாநாட்டின் தீர்மானங்களும் வெற்றியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனைப் பட்டியலில் இடம்பிடிக்க உள்ளது. தமிழக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அவ்வப்போது பல ஆர்ப்பாட்டங்களையும் கண்டனக் கூட்டங்களையும் நடத்தி வருகின்றன. ஆனால் அவை வன்முறை அற்றதாகவே உள்ளன. தமிழகத்தில் வன்முறை, பயங்கரவாதம் இல்லாதது சிறப்பானது என்ற ஆளுநரின் உரை தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுகிறது என்பதை பகிரங்கப்படுத்தி உள்ளதா? திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் உள்ள குடும்ப ஆதிக்கம் களையப்பட்டால் தமிழகத்தின் எதிர்காலம் உயர்வடையும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.

வர்மா

வீரகேசரிவாரவெளியீடு 10/01/10

No comments: