Sunday, January 24, 2010

கசந்தது தனி வழிபிறக்கிறது கூட்டணி


தமிழக சட்ட சபைத் தேர்தல், இடைத் தேர்தல்கள் ஆகியவற்றில் தனித்துப் போட்டியிட்டு படுதோல்வி அடைந்த விஜயகாந்த், கூட்டணி சேரத் தயார் என்று பச்சைக் கொடி காட்டியுள்ளார். கூட்டணி சேர்ந்தால்தான் வெற்றி பெறலாம் என்பதை காலம் தாழ்ந்து உணர்ந்து கொண்டார் விஜயகாந்த்.
வாக்கு வங்கி பலமாக இருந்தாலும் கூட்டணி இல்லாமல் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த விஜயகாந்த், கூட்டணி சேர பச்சைக் கொடி காட்டியதால் தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மக்களுடன்தான் கூட்டணி என்று இதுவரை காலமும் கூறி வந்த விஜயகாந்த் இறங்கி வந்ததனால் தமிழக அரசியலில் கூட்டணியில் பாரிய மாற்றம் ஏற்படும் சாத்தியம் உண்டு.
விஜயகாந்தின் முதல் தெரிவு காங்கிரஸ் கட்சியாகவே இருக்கும். திராவிட முன்னேற்றக் கழகத்தை கைவிட்டு வந்தால் கூட்டணியில் சேரலாம் என்ற எண்ணம் விஜயகாந்திடம் இருந்தது. ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைவிட காங்கிரஸ் தயாராக இருக்கவில்லை. விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் மீது தமிழகத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்கும் போட்டியாக விஜயகாந்த் இருப்பார் என்ற எதிர்பார்ப்பு தேர்தல் முடிவுகளின் மூலம் கலைந்தது.
முன்னர் நடைபெற்ற தேர்தல்களின் மூலம் வெற்றி பெற்ற கட்சியின் வாக்கு விகிதத்தை குறைப்பதில்தான் விஜயகாந்தின் கட்சி வெற்றி பெற்றது. விஜயகாந்துக்கு ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு படிப்படியாகக் குறைந்தது. வந்தவாசி, திருச்செந்தூர் ஆகிய இடைத் தொகுதிகளின் இடைத் தேர்தலில் விஜயகாந்தின் கட்சி அபேட்சகர்கள் படுதோல்வி அடைந்ததுடன் கட்டுப்பணத்தையும் இழந்தனர்.
தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்ற பிரசாரத்துடன் அரசியலுக்குள் நுழைந்த விஜயகாந்துக்கு திருச்செந்தூர் வந்தவாசி இடைத் தேர்தல் முடிவு பலத்த அடியாக விழுந்துள்ளது. அந்த அடிதான் கூட்டணி என்ற முடிவுக்கு வரத் தூண்டியது. எந்தக் கட்சியுடன் கூட்டணி சேர்வது என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் விஜயகாந்துக்கு வழங்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் முடிவுதான் அவரின் கட்சியின் முடிவாக இருக்கும்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகளின் முடிவு கட்சித் தலைவரின் தனிப்பட்ட முடிவாகவே இருக்கும். அதைப் போன்றே விஜயகாந்தின் முடிவை அவரின் கட்சி ஏற்றுக் கொள்ளும். அவர் கட்சி ஆரம்பித்த போது இருந்த செல்வாக்கும் கவர்ச்சியும் படிப்படியாகக் குறைந்துள்ளன. விஜயகாந்தின் பின்னால் அதிக கூட்டம் சேரும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போய்விட்டது. இந்த நிலையில் விஜயகாந்த் கூறப் போகும் நிபந்தனைகளுக்கு உடனடியாகத் தலை அசைப்பதற்கு எந்தக் கட்சியும் தயாராக இல்லை.
விஜயகாந்த் எதிர்பார்ப்பது போல் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைவிட காங்கிரஸ் கட்சி இப்போதைக்கு தயாராக இல்லை. தமிழகத்தில் நடைபெற்ற சகல இடைத் தேர்தல்களிலும் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியும் அமோக வெற்றி பெற்றன. ஒவ்வொரு இடைத் தேர்தலிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி விகிதம் கூடிக் கொண்டே போனது. இந்த நிலையில் முதல்வர் கருணாநிதியைக் கைவிட்டு விஜயகாந்துடன் கை கோர்க்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி இல்லை.
கட்சியை வளர்க்க வேண்டுமானால் கூட்டணி சேர வேண்டும். கூட்டணிக் கட்சியின் ஆதரவுடன் போட்டியிட்டால் தான் தேர்தலில் வெற்றி பெறலாம். தேர்தலில் வெற்றி பெற்றால் தான் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் விஜயகாந்த்.
காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் இல்லை என்றால் அடுத்த பெரிய கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்துக்கும் இடையே நடந்த பிரசாரப் போரை தமிழகம் இன்னமும் மறந்து விடவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் தேசிய முற்போக்கு திராவிடக் கட்சிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கடந்த காலங்களில் செய்தி கசிந்தது. அந்தப் பேச்சுவார்த்தையின் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்துதான் விஜயகாந்த் இப்படி ஓர் அறிவித்தலை வெளியிட்டிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.
பொண்ணாகரம் இடைத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு பொங்கல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. பொண்ணாகரம் இடைத் தேர்தலில் விஜயகாந்தின் கூட்டணி முடிவு அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஆழமாக வேரூன்ற காத்திருக்கும் இடதுசாரிகள் விஜயகாந்தை பற்றிப் பிடிக்கும் சாத்தியம் உள்ளது. இடதுசாரிகளுடனும் ஏனைய சிறு கட்சிகளுடனும் சேர்ந்து போட்டியிட்டால் முதலமைச்சராகலாம். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்தால் முதலமைச்சராக வர முடியாது என்பதும் விஜயகாந்துக்குப் புரியும்.
பலமான கட்சியுடன் கூட்டணி அமைத்து சட்ட சபையிலும் நாடாளுமன்றத்திலும் தனது கட்சி உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதே விஜயகாந்தின் இன்றைய விருப்பம். அவரின் விருப்பத்தை நிறைவேற்றும் கட்சிகளுடன் கை கோர்க்க தயாராக உள்ளனர்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, இடதுசாரிகள் ஆகியவற்றின் துணையுடன் இந்திய நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆசனங்களைப் பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு உதவிய கூட்டணிக் கட்சிகள் படுதோல்வி அடைந்தன.
தமிழகத்தில் செல்வாக்கு இழந்து தவிக்கும் பாரதீய ஜனதாக் கட்சி தன்னை ஸ்திரப்படுத்துவதற்காக தமிழகத்தில் செல்வாக்கு உள்ள கட்சியுடன் கூட்டணி சேரத் துடிக்கிறது.
தமிழகக் கட்சிகள் எவையும் பாரதீய ஜனதாக் கட்சியைக் கண்டு கொள்ளவே இல்லை. விஜயகாந்துடன் கூட்டணி சேர்வதற்கு பாரதீய ஜனதாக் கட்சி பலமுறை முயற்சி செய்தது. விஜயகாந்த் பிடி கொடாமல் நழுவி விட்டார்.

இந்து மதத்தில் தீவிர பற்றுக் கொண்ட பாரதீய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி சேர்வதற்கு விஜயகாந்த் இப்போதைக்கு விரும்ப மாட்டார். பாரதீய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் முஸ்லிம் மக்களிடம் விஜயகாந்துக்கு இருக்கும் செல்வாக்கு சரிந்து விடும்.
விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் தமிழகத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கியில் பெரும் சரிவு ஏற்பட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கி சரிந்ததனால் திராவிட முன்னேற்றக் கழகம் மகிழ்ச்சியில் குதித்தது. ஆனால் வந்தவாசி, திருச்செந்தூர் ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலில் சரிந்திருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கி பழைய நிலைக்கு திரும்பி விட்டது.
சரிந்திருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கி நிமிர்ந்ததனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மகிழ்ச்சியில் உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் கலக்கத்தில் உள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணித்த இடைத் தேர்தலில் 20 சத வீத வாக்குகளைப் பெற்று தனது வாக்கு வங்கியை உயர்த்திய தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் வந்தவாசி, திருச்செந்தூர் இடைத் தேர்தலில் கட்டுப்பணத்தை இழந்தது. இடைத்தேர்தலின் தோல்வி விஜயகாந்தின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வாக்கு வங்கியைத் தக்க வைக்க வேண்டிய நிலைக்கு விஜயகாந்தை தள்ளியுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான உறவை பிரிக்க வேண்டும் அல்லது திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கூட்டணியை தேர்தலில் தோல்வி அடையச் செய்ய வேண்டும். இந்த இரண்டில் ஒன்றை நிறைவேற்றுவதற்கான அடித்தளத்தை விஜயகாந்த் இட்டுள்ளார்.
கூட்டணி சேரத் தயார் என்று அறிவித்த கூட்டணிக் குதிரையில் ஏறி வெற்றிக் கம்பத்தைத் தொடுவாரா அல்லது குதிரையாக மாறி கூட்டணிக் கட்சியின் வெற்றிக்கு உதவுவாரா என்பது தேர்தலின் போது தெரிந்து விடும்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 17/01/10

No comments: