Sunday, January 31, 2010

ஜெயாவின் டில்லி விஜயம்ஏற்படுத்திய சலசலப்பு




அரசியலில் இரு துருவங்களான சோனியா காந்தியும் ஜெயலலிதாவும் டில்லியில் சந்தித்தமை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்திய தேர்தல் ஆணையகத்தின் வைர விழா டில்லியில் சிறப்பாக நடைபெற்றது. இதில் பங்குபற்றுமாறு இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. உடல் நிலை காரணமாக தமிழக முதல்வர் கருணாநிதி கலந்து கொள்ளமாட்டார். துணை முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துணை முதல்வர் ஸ்டாலின் இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை. மத்திய அமைச்சர் ஆர். ராசாவும் தமிழக அமைச்சர் பொன்முடியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கலந்து கொண்டார்கள்.
டில்லியில் நடைபெறும் தேர்தல் ஆணையத்தின் வைர விழாவில் கலந்து கொள்ளும் ஜெயலலிதா, சோனியாகாந்தியைச் சந்திப்பார் என்ற ஒருவரிச் செய்தி தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தேர்தல் ஆணையத்தின் மிக முக்கியமான இந்த விழாவில் சோனியா காந்தி கண்டிப்பாகக் கலந்து கொள்வார். அப்போது ஜெயலலிதாவை அவர் சந்திப்பார் என்ற தகவல் பல ஊகங்களாகக் கிளம்பியது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான உறவில் சிறிது விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்கிடையேயான உறவு புதுப்பிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்துடனான கூட்டணி வலுவாக உள்ளது என்று தங்கபாலு அறிக்கை விட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
அரசியல் அவதானிகள் எதிர்பார்த்தது போன்றே ஜெயலலிதாவும் சோனியா காந்தியும் சந்தித்தனர். இருவரும் சம்பிரதாயமாக நலம் விசாரித்தனர். தனியாகச் சந்திப்பு நடைபெறவில்லை. தேர்தல் ஆணையத்தின் 60 ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட மாநிலக் கட்சித் தலைவர்கள் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்தனர். பார்வையாளர் வரிசையில் உட்கார்ந்து நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காகவா ஜெயலலிதா சென்னையில் இருந்து டில்லி சென்றார் என்ற கேள்வி எழுந்தது.
தேர்தல் ஆணையத்தின் 60 ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் டில்லிக்குச் சென்றார் ஜெயலலிதா. அரசியல் முக்கியத்துவம் இல்லாத ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எதற்காக தனி விமானத்தில் செல்ல வேண்டும். ஜெயலலிதாவுடன் கூடச் சென்றவர்கள் யார்? அவர்கள் அங்கு யாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் போன்ற விபரங்கள் வெளிவரவில்லை.
மக்களுடன் தான் கூட்டணி என்று கூறி வந்த விஜயகாந்த், அரசியல் கட்சிகளுடன் கூட்டணி சேர்வதற்கு தயார் என்று அறிவித்துள்ளார். விஜயகாந்துடன் கூட்டணி சேர வேண்டும் என்று டில்லியிலும் தமிழகத்திலும் உள்ள சில காங்கிரஸ் தலைவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத்துடனான உறவை காங்கிரஸ் துண்டித்தால் விஜயகாந்துடன் கூட்டணி சேராது தன்னுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற சமிக்ஞையை ஜெயலலிதா விடுத்துள்ளார்.
மத்திய அமைச்சர் அழகிரியின் செயற்பாட்டில் காங்கிரஸ் கட்சி திருப்தி அடையவில்லை. அழகிரியின் செயற்பாடுகளினால் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான பனிப்போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மத்திய அமைச்சர்கள் சிலரின் செயற்பாடுகளில் தான் திருப்தி அடையவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பட்டியலில் அழகிரியின் பெயரும் உள்ளது. இது திராவிட முன்னேற்றக் கழகத்தை எரிச்சலடையச் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியுடனான பல பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்த்து வைத்த முதல்வர் கருணாநிதி இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது தடுமாறுகிறார்.
பெண்ணாகரம் இடைத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடும் என்ற செய்தியையடுத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களை எரிச்சலடைய வைத்துள்ளது. பெண்ணாகரம் இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருந் தார். பெண்ணாகரத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு அதிக செல்வாக்கு இருப்பதனால் தனது கட்சி நிறுத்தும் அபேட்சகருக்கு சகலரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். பெண்ணாகரத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடும் என்ற ஜெயலலிதாவின் அறிவிப்பு பொது வேட்பாளர் என்ற டாக்டர் ராமதாஸின் திட்டத்தை தவிடு பொடியாக்கி உள்ளது.
எதிர்க்கட்சிகளுக்கிடையேயான பிரிவு திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். இடதுசாரிகள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையே ஆதரிப்பார்கள். ஆகையினால் பாட்டாளி மக்கள் கட்சி நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெற முடியாது. ஆனால் கூட்டணி இல்லாது தனித்து போட்டியிட்டு தனது செல்வாக்கை வெளிப்படுத்துவதில் பாட்டாளி மக்கள் கட்சி முனைப்பில் உள்ளது.
பெண்ணாகரத்தில் வன்னியர் சமூகத்தவர்கள் அதிகளவில் உள்ளதனால் தனது கட்சிக்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்று டாக்டர் ராமதாஸ் எதிர்பார்க்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கு சரிந்து விட்டது.
அக்கட்சியைப் பகைத்துக் கொண்டால் வெற்றி பெற முடியாது என்ற நம்பிக்கை தகர்ந்து போயுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியுடன் சேர்ந்தாலும் வெற்றி பெற முடியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்து நடைபெறவுள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில் கூட்டணி சேர வேண்டிய அவசியம் உள்ளதால் தனது கட்சியின் செல்வாக்கை பரீட்சித்துப் பார்ப்பதற்காகவே டாக்டர் ராமதாஸ் வேட்பாளரை நிறுத்த உள்ளார். ஜெயலலிதாவின் முடிவில் பாட்டாளி மக்கள் கட்சி கலக்கத்தில் உள்ளது.
கூட்டணி என்ற முடிவில் இருக்கும் விஜயகாந்த் பெண்ணாகரம் இடைத் தேர்தலில் தனது கட்சி சார்பாக வேட்பாளரை நிறுத்துவாரா அல்லது ஒதுங்கிக் கொள்வாரா என்ற கேள்வியும் உள்ளது. ஆனால் கூட்டணி உறுதியாகும் வரை தனது தனித்தன்மையை விஜயகாந்த் விட்டுக் கொடுக்க மாட்டார் என்ற கருத்தும் உள்ளது
. வர்மா

வீரகேசரிவாரவெளியீடு 31/01/10

No comments: