Sunday, July 22, 2012

கருணாநிதியின் கனவைகலைத்தது இந்திய அரசு


உலகத் தமிழரின் தலைவர் என்ற அடையாளத்தை இழந்துவிட்ட கருணாநிதி அதனை மீண்டும் பெறுவதற்காக கடுமையாக முயற்சி செய்கிறார். கருணாநிதியின் எதிர்பார்ப்புகளுக்கு அவ்வப்போது முட்டுக்கட்டை போடுகிறது இந்திய மத்திய அரசு. இலங்கைத் தமிழ் மக்களுக்கு குரல் கொடுப்பதற்காக 1985 ஆம் ஆண்டு தமிழ் ஈழ ஆதரவாளர் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இதனைச் சுருக்கமாக ரெஸோ என்று அழைத் தார்கள்.
இலங்கைப் பிரச்சினை உச்சக்கட்டமடைந்த வேளையில் சென்னையில் தங்கி இருந்த அன்ரன் பாலசிங்கம், சந்திரஹாசன், சந்தியேந்திரா ஆகியோரை நாடு கடத்த ராஜீவ் தலைமையிலான மத்திய அரசு உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு எதிராகக் களத்தில் இறங்கியது ரெஸோ 1985 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி கண்டனப் பேரணிக்கும் ரயில் நிறுத்தப் போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்தது. ரெஸோ இலட்சக்கணக்கான தொண்டர்கள் வீதியில் இறங்கியதால் நாடு கடத்தல் உத்தரவை வாபஸ் பெற்றது மத்திய அரசு.ரெஸோ நடத்திய இந்தப் போராட்டம் இந்திய அரசியலின் கவனத்தை ஈர்த்தது.

இலங்கைத் தமிழர்கள் அல்லல் படும் போதெல்லாம் குரல் கொடுத்து உங்கள் அவலங்களை போக்க நாங்கள் இருக்கிறோம் என்று ஆறுதல் கூறியது டெஸோ. இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் மாறியபோதும் இலங்கைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை. ஆட்சி அதிகாரம் கைக்கு வந்ததும் டெஸோவைக் கைவிட்டார் கருணாநிதி.
26 வருடங்களுக்கு பின்னர் ரெஸோவுக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளார் கருணாநிதி. ரெஸோவில் அங்கம் வகித்த திருமாவளவனைக் தவிர்த்துவிட்டு ரெஸோ ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அதற்கு எதிர்ப்புக் கிளம்பியபோது திருமாவளவனை அழைத்தார். கருணாநிதியின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வரும் மத்திய அரசு ரெஸோ மாநாட்டைத் தடுப்பதற்கு மறைமுகமாக முயற்சி செய்தது.
விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் மீதான தடை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் தனித் தமிழ் ஈழம் என்ற கொள்கைக்கு ஆதரவளிப்பவர்களின் மீது இந்திய ஒருமைப்பாட்டையும் சட்டத்தையும் மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை மத்திய அரசு கருணாநிதிக்கு உணர்த்தியுள்ளது. இதன் காரணமாக ரெஸோ மாநாட்டில் தனித் தமிழ் ஈழம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்படாது என்று அறிவித்துள்ளார் கருணாநிதி.

தமிழக ஆட்சி மாறிய பின்னர் சிதம்பரமும், கருணாநிதியும் சந்திக்கவில்லை. டெஸோ மாநாடு பற்றி பெரும் எடுப்பில் கருணாநிதி அறிவித்தல் விடுத்தபோது அவசரமாக டில்லியிலிருந்து தமிழகத்துக்கு விரைந்த அமைச்சர் சிதம்பரம், கருணாநிதியைச் சந்தித்த கையோடு டில்லிக்குச் சென்றார். மத்திய அரசின் நிலைப்பாட்டைப் புரிந்து கொண்ட கருணாநிதி தமிழ் ஈழக் கோஷத்தைக் கைவிட்டுவிட்டார்.
ஒகஸ்ட் 12 ஆம் திகதி சென்னையில் நடைபெறும் ரெஸோ மாநாட்டுக்கு உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆர்வலர்களை அழைக்க கருணாநிதி திட்டமிட்டுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான ஒரு மாநாட்டைச் சென்னையில் நடத்தி உலகின் கவனத்தைத் தன்பால் திருப்ப முயற்சி செய்கிறார் கருணாநிதி. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் அமைதியாக இருந்த கருணாநிதிரெஸோவின் மூலம் பிராயச்சித்தம் தேட முயற்சிக்கின்றார். கருணாநிதியின் அழைப்பை ஏற்றுரெஸோ மாநாட்டுக்குச் செல்லும் தலைவர்களுக்கு இந்திய அரசு அனுமதி வழங்குமா? கருணாநிதியை நம்பி ரெஸோ மாநாட்டுக்குச் செல்லும் தலைவர்கள் யார் என்ற விபரங்களை அறிய தமிழ் ஆர்வலர்கள் ஆவலாக உள்ளனர்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கட்டுக்கோப்புக்குள் வைத்திருப்பதற்கான அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார் ஜெயலலிதா. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனின் அமைச்சுப் பதவியைப் பிடுங்கிதோப்பூர் வெங்கடாச‌த்திடம் கொடுத்துள்ளார் ஜெயலலிதா. அமைச்சுப் பதவிகளில் சென்று ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் செங்கோட்டையன். அவரிடமிருந்த தமிழக வருவாய்த்துறை அமைச்சு பதவியை  அதே மாவட்டத்தைச் சேர்ந்த ராமலிங்கத்திடம் கையளித்துள்ளார் ஜெயலலிதா. இதேவேளை, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை நிலையச் செயலர் பதவியிலிருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார்.
1977 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியிலிருந்து முதன் முதலாக தமிழக சட்ட சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட செங்கோட்டையன் ஆறுமுறை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். செங்கோட்டையனின் தனிப்பட்ட வாழ்க்கை அவரது அமைச்சுப்பதவி பறிக்கப்பட்டதற்கான காரணம் என்று கூறப்படுகிறது. செங்கோட்டையனின் மனைவியும் மகனும் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து தமது மனக் குமுறலை வெளிப்படுத்தியதாலே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.

கட்சிக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களை மன்னிக்கமாட்டேன் என்று அறிவித்த ஜெயலலிதா செங்கோட்டையனைத் தூக்கி எறிந்த தனால் ஏனையவர்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் இரண்டு அமைச்சர்கள் மீது ஜெயலலிதாவின்கோபப் பார்வை விழுந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் நடைபெறும் அத்துமீறல்களைப் பற்றி ஜெயலலிதா பலமுறை எச்சரித்துள்ளார். தப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தயவுதாட்சண்யமின்றி ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என்பதனால் மாநகரசபையில் அத்துமீறல்செய்தவர்கள் ஆடிப் போயுள்ளனர்

வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 22/07/12

No comments: