சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் தனது அரசியல் அபிலாசையை ரஜினி வெளியீட்டதனால் தமிழக அரசியல் பரபரப்படையத் தொடங்கியுள்ளது.
ப. சிதம்பரம் ஒரு பார்வை என்ற நூல்வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றபோது
கருணாநிதி, கமல், ரஜினி ஆகிய மூவரும் ஒரே மேடையில் கலந்து கொண்டு தமது அரசியல் விருப்பங்களை வெளிப்படுத்தினர்.
ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி தமிழகத்தில் அவ்வப்போது எழுந்து கொண்டிருக்கையில் தனது அரசியல் பாதையில் ரஜினியை அரவணைத்துச் செல்லத் தயாராக இருப்பதாக கருணாநிதி வெளிப்படுத்தியுள்ளார்.
ரஜினிகாந்த் நேரடியாக அரசியலுக்கு வரக்கூடாது ஆனால் தனது அரசியல் வளர்ச்சிக்கு அவர் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதே கருணாநிதியின் விருப்பம். சென்னையில் நடைபெற்ற கூட்டத்திலும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி ரஜினியின் தோளில் சவாரி செய்வதற்குத் தயார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார் கருணாநிதி.
ஜெயலலிதாவை வீழ்த்துவதற்கு மிகப் பலமான அஸ்திரம்ஒன்று கருணாநிதிக்குத் தேவை. ரஜினியையே அந்த அஸ்திர மாகப் பயன்படுத்துவதற்கு விரும்புகிறார் கருணாநிதி. காங்கிரஸில் இருந்து மூப்பனாரும். சிதம்பரமும் வெளியேறி புதிய கட்சி ஆரம்பித்தபோது ரஜினிகாந்த் அவர்களுக்காகக் குரல் கொடுத்தார். மூப்பனாரும், ப. சிதம்பரமும் கருணாநிதியுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தின் காங்கிரஸ் தாம் என்பதை நிரூபித்தனர்.
அரசியல் பற்றி அதிகம் பேசாது அமைதி காத்த ரஜினிகாந்த் தனது அரசியல் விருப்பத்தைச் சந்தர்ப்பம் பார்த்து வெளியிட்டுள்ளார். அரசியலுக்கு வருவேன் என்றோ அல்லது வரமாட்டேன் என்றோ வெளிப்படையாக எதனையும் ரஜினி சொல்லவில்லை.
கருணாநிதிக்கு இது சாதகமானதாக உள்ளது. தமிழக அரசியல் பற்றி ரஜினியின் அறிவிப்பு மூடு மந்திரமாக இருக்கும் இவ்வேளையில் ப. சிதம்பரம் பிரதமராக வேண்டும் எனும் தனது உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளார் ரஜினி.
மன்மோகனுக்கு அடுத்து ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்காரர்கள் கனவு கண்டிருக்கும் வேளையில் சிதம்பரம் பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறார் ரஜினி. அரசியலில் உள்ள நெளிவு சுழிவுகளை ரஜினிக்கு வெளிப்படுத்தியவர்களில் சோ, ப. சிதம்பரமும் முக்கியமானவர்கள். சிதம்பரமும் சோவும் அரசியலில் எதிர் எதிர் முகாம்களில் இருந்தாலும் ரஜினியுடன் இருவரும் மிக நெருக்கமாகவே உள்ளனர்.
சிதம்பரம் பிரதமராக வேண்டும் என்பது ரஜினியின் ஆசை. கமலின் ஆசையும் இதுதான். வெளிப்படையாக அரசியல் பேசாத கமல் மறைமுகமாக தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். விஜயகாந்த், ரஜினி, சரத்குமார், விஜய், ராஜேந்திர், பாக்கியராஜ் போன்ற நடிகர்கள் தமது ரசிகர்களை அரசியலின் பக்கம் திருப்பியுள்ளனர். கமல் இதற்கு விதி விலக்காக சமூக சேவையே தனது உயிர்மூச்சு என்று தனது ரசிகர்களைச் சமூக சேவையின் பக்கம் திருப்பியுள்ளார். கண் தானம், உடல் உறுப்பு தானம் எனப் பட்டியலிட்டு கமல் செய்பவற்றை எல்லாம் அவரது ரசிகர்களும் பின்பற்றுகின்றனர்.
வெளிப்படையாக அரசியல் பற்றிப் பேசாத கமல் தனது மனதில் உள்ள அரசியல் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய பிரதமராக சிதம்பரம் வரவேண்டும் என ரஜினியும் கமலும் விரும்புகின்றனர்.
இந்தியப் பிரதமராகும் சிதம்பரத்துக்கு உண்டு. ஆனால் காங்கிரஸ் அரசியலின் கோஷ்டிபூசல் அதற்கு இடம் கொடுக்குமா என்பது சந்தேகமே! சிதம்பரத்துக்கு எதிரான தமிழக காங்கிரஸ்காரர்களே இதற்கு முதலில் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள்.
டில்லியிலும் உலக அரசியல் அரங்கிலும் சிதம்பரத்துக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது. நேரு குடும்பத்தின் வாரிசு அடுத்த பிரதமராக வரவேண்டும் என்ற கனவில் உள்ளவர்கள். சிதம்பரம் பிரதமராவதை ஏற்பார்களா என்பது சந்தேகமே. பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் மோடி தேர்வு செய்யப்படுவதற்குரிய சாத்தியக் கூறு அதிகமாக உள்ளது. மோடிக்கு ஈடுகொடுக்கும் திறமை ராகுலிடம் இல்லை. மோடிக்கு நிகராக அரசியல் செய்யக்கூடிய சகல தகுதிகளும் சிதம்பரத்திடம் உள்ளது. ஆகையினால் கமல், ரஜினி, ஆகியோரின் விருப்பம் நிறைவேறும் சாத்தியம் உள்ளது.
இந்தியப் பிரதமர் கனவில் மிதக்கும் அரசியல் தலைவர்களில் ஜெயலலிதாவும் ஒருவர். காங்கிரஸ் பாரதீய ஜனதா கட்சி ஆகியவறுக்கு மாற்றீடாகப் புதிய கூட்டணி ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கொள்கையில் அரசியல் காய்களை நகர்த்திவருகிறார் ஜெயலலிதா.
இந்திய நாடாளுமன்றம் பொதுத் தேர்தலில் 40தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நம்பி இருக்கும் சிறிய கட்சிகள் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளன.
கமலும் ரஜினியும் சிதம்பரத்துக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இந்தியப் பிரதமராகும் கனவை தொடர்கிறார் ஜெயலலிதா
மெட்ரோநியூஸ்
04/01/13
No comments:
Post a Comment