Saturday, January 12, 2013

வாரிசுப்போட்டி முடிவுக்கு வந்தது மகிழ்ச்சியில் ஸ்டாலின் வெறுப்பில் அழகிரி



திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிலவிய வாரிசுப் போட்டிக்கு முடிவுரை எழுதி விட்டார் கருணாநிதி.. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவர் ஸ்டாலின் என்பதை ஜாடை மாடையாகத் தெரிவித்து வந்த கருணாநிதி தனக்குப் பின் ஸ்டாலின் தான்  என்பதை உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அசைக்க முடியாத தலைவரான கருணாநிதியை அவ்வப்போது அசைத்து பார்ப்பவர் அவருடைய மகன் அழகிரி. தனது சாணக்கியத்தினால் அரசியல் எதிரிகளை வீழ்த்தும் கருணாநிதிக்கு வாரிசுச் சண்டை மிகப்பெரிய தலையிடியாக இருந்தது.. அழகிரி அரசியலில் காலடி எடுத்து வைத்ததும் கட்சியில் பிளவு ஆரம்பமாகி விட்டது.

கருணாநிதிக்கு பின் ஸ்டாலின் தலைவர் என அன்பழகன் உட்பட மூத்த தலைவர்கள் வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்த போது கருணாநிதி தான் கட்சியின் தலைவர் கருணாநிதிக்குப் பின் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று போர்க் கொடி தூக்கினார் அழகிரி.

திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வைகோ வெளியேறிய பின்னர். தென் பகுதியில் கட்சியை வளர்ப்பதற்காக மதுரையைத் தேர்ந்தெடுத்தவர் அழகிரி. அழகிரியின் அதிரடியால் அவரது கைக்குள் அடங்கியது மதுரை.

முதுமையிலும் ஓய்வின்றி பணி செய்யும் கருணாநிதி தலைமைப் பொறுப்பை இறக்கி வைக்கப் பலமுறை முயன்றார். அவரின் முயற்சிகளுக்கு அழகிரி முட்டுக்கட்டைப் போட்டார் ஸ்டாலின் அழகிரி ஆகிய இருவரும் எதிரும் புதிருமாக அரசியல் செய்து வரும் வேளையில் கனிமொழி அரசியல் பிரவேசம் செய்தார்.

ஸ்டாலின் அழகிரி ஆகியோரின் பின்னால் ஒரு கூட்டம் இருப்பது போல் கனிமொழியின் பின்னாலும் ஒரு கூட்டம் திரிந்தது. ஆனால் அவர்களினால் ஸ்டாலினுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை.அழகிரியும் கனிமொழியும் இணைந்து ஸ்டாலினுக்கு எதிராக இயங்குவதாகச் செய்தி வந்தது. இந்த நிலையில்  ஸ்டாலினின் கை ஓங்கி  இருந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஸ்டாலினுக்கு அமோக ஆதரவு உள்ளது. அழகிரியின் ஆதரவு மதுரையுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக ஆட்சி மாறிய பின்னர் அழகிரியுடன் ஒட்டிக் கொண்டிருந்தவர்களில் சிலர் மெதுவாகக் கழன்று விட்டனர்.

சென்னையில் நடைபெற்ற விழாவொன்றில் உரையாற்றிய கருணாநிதி எனக்குப் பின் சமுதாயப் பணிகளை ஸ்டாலின் பொறுப்பேற்பார் என்றார். அடுத்த பத்து நிமிடங்களில் எனக்குப் பின் ஸ்டாலின்  தான் தலைவர் என்று இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டன. விஷமத்தனமான‌ இந்தப்பிரசாரம் அழகிரியைக் கொதிப்படைய வைத்தது. ஸ்டாலின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றனர். அழகிரியையும் அவரது ஆதரவாளர்களையும் தவிர எனையவர்கள் இந்தச் செய்தியால் மகிழ்ச்சியடைந்தனர்.

 திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்களில் கூட்டம்சென்னையில் மறுநாள் நடைபெற்ற போது ஸ்டாலினின் தலைவர் செய்தி பற்றி பத்திரிகையாளர்களிடம் கருணாநிதி விளக்கமாக எடுத்துரைத்தார். எனக்குப் பின் சமுதாயப் பணியைத்தான் ஸ்டாலின் ஆற்றுவார் என்று விளக்கமளித்தார் கருணாநிதி .விடாக்கொண்டனாக பத்திரிகையாளர் ஒருவர் தி.மு.க முதன்மையான அரசியல் இயக்கம் அந்த இயக்கத்தில் உள்ள உங்களுக்குப் பின் ஸ்டாலின் என்று சொன்னால் அது தலைவர் என்று தானே அர்த்தம் என்று மடக்கினார். அந்தப் த்திரிகையாளர்களின் கேள்விக்குத் தம் மனதில் இருப்பதை வெளிப்படுத்தினார் கருணாநிதி.சந்தர்ப்பம் கிடைத்தால் த‌லைவர் பெயருக்கு ஸ்டாலினின் பெயரை முன் மொழிவேன் என்று கூறினார் கருணாநிதி. பல வருடங்களாக இழுபறியில் இருந்த ஒரு பிரச்சினைக்கு கண நேரத்தில் முற்றுபுள்ளி வைத்தார் கருணாநிதி.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாடுகள் நடைபெறும் போதெல்லாம் தலைவர் பதவிக்கு ஸ்டாலினின் பெயரை கருணாநிதி அறிவிப்பார் என்ற பரபரப்பான செய்திகள் வெளிவரும். கருணாநிதியின் வீட்டில் நடைபெறும் சம்பவங்களை அருகில் நின்று பார்ப்பது போன்று பலர் கட்டுரை எழுதுவார்கள் அந்த எதிர்ப்பார்ப்புகள் அனைத்தும் அப்போது ஏமாற்றமாகின. யாரும் எதிர்பாராத நிலையில் தனக்கு அடுத்த தலைவர் ஸ்டாலின் தான் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார் கருணாநிதி.

கருணாநிதியின் இந்த அறிவிப்பை அழகிரி ரசிக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் பதவியில் அழகிரி ஒரு கண் வைத்துள்ளார். அதனால் தான் கருணாநிதி தான் கட்சியில் தலைவர் அவர் உயிரோடு இருக்கும் போது அவருக்குப் பின் என்ற பேச்சே வரக்கூடாது என்று கூறினார்.

திராவிட முன்னேற்றக் கழகக் கட்டுப்பாட்டை மீறிய அழகிரி கட்சியின் வேட்பாளரை எதிர்த்து தனது ஆதரவாளர்களை முன்பொரு முறை தேர்தலில் நிறுத்தியவர் ஆகையினால் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக அழகிரி காய் நகர்த்தும் சாத்தியக்கூறு அதிகம் உள்ளது.

அழகிரியுடன் மதுரையைச் சேர்ந்த ஒரு சிலரே கட்சியை விட்டு வெளியேறக்கூடும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தமிழக கட்ட சபை உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழகிரிக்கு ஆதரவு வழங்குவது சந்தேகம். அழகிரிக்கு ஆதரவானவர்களும் கருணாநிதியின் அறிவிப்பை மீறி செயல்படுவதற்கு தயங்குவார்கள். தன் மகன் துரை தயாநிதியை அரசியலில் தனது வாரிசாகக் கொண்டு வர விரும்பிய அழகிரிக்கு கருணாநிதியின் அறிவிப்பு கலக்கத்தை உண்டு பண்ணியுள்ளது.

கட்சிக் கட்டுப்பாட்டைமீறி நடப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கருணாநிதி அறிவித்துள்ளார். அழகிரிக்கு ஆதரவாகச் செயற்படுபவர்களுக்கு இந்த அறிவிப்பு மறைமுக எச்சரிக்கையாக விடுக்கப்பட்டுள்ளது. தனக்கு அடுத்த தலைவர் ஸ்டாலினின் தான் என்ற கருணாநிதியின் அறிவிப்புக்கு எதிராக அழகிரி மட்டும் தான் குரல் கொடுத்து வருகிறார். அழகிரியின் எதிர்ப்பினால் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படப் போவதில்லை.

தந்தைக்குப் பின் நான் என்ற வாரிசு அரசியலை எதிர்பார்த்து அரசியல் களத்தில் ஸ்டாலின் குதிக்கவில்லை காங்கிரஸ் கட்சியின் மிசா சட்டமே அவரை அரசியலுக்குத் தள்ளியது. மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டதே ஸ்டாலினின் அரசியல் திருப்புமுனையாக அமைந்தது.

1967 ஆம் ஆண்டு தேர்தலில் 14 வயதில் பிரசாரம் செய்தார். 20 வயதில் திராவிட முன்னேற்றக்கழகப் பொதுக்குழு உறுப்பினரானார். 1984 ஆம் ஆண்டு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.பின்னர் நான்கு முறை தொடர்ந்து ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1975 ஆம் ஆண்டு முதன் முதலாக கைது செய்யப்பட்டார். அதன் பின் பல போராட்டங்களில் பங்குபற்றி சிறை சென்றார்.1996 ஆம் ஆண்டு சென்னை மேயர் தேர்தலில் வெற்றி பெற்றார். மக்களில் தெரிவு செய்யப்பட்ட முதலாவது மேயர் ஸ்டாலின். ஸ்டாலினுக்கு அமைச்சுப் பதவி கொடுக்க வேண்டும் என்று கட்சித் தலைவர்கள் கூறிய போது அமைதியாக இருந்தார் கருணாநிதி. ஜெயலலிதா  அமுல்படுத்தியசட்டத்தினால்  சென்னை மேயர் பதவியைத் துறந்து சட்ட சபை உறுப்பினராகப் பதவி வகித்தார்.
2003 ஆம் ஆண்டு ஸ்டாலினைப் பொதுச் செயலாளராக்கினார். கருணாநிதி எம்.ஜி.ஆர். வகித்த பதவி என்பதனால்  ஸ்டாலின் தான் அடுத்த தலைவர் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது.2009 ஆம் ஆண்டு துணை முதல்வரானார். இப்போது  அடுத்த தலைவர் ஸ்டாலின் தான் என்று அறிவித்து வாரிசுப் போட்டிக்கு முடிவுரை எழுதியுள்ளார் கருணாநிதி.ஸ்டாலினும் அவரது ஆதரவாளர்களும் மிக நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்த அங்கீகாரம் ஸ்டாலினுக்குக் கிடைத்துள்ளது.
மெட்ரோநியூஸ் 11/01/13



No comments: