Tuesday, January 28, 2014

கசந்த காதல்

இந்திய மனித மேம்பாட்டுத்துறை அமைச்சர் சசிதரூரின் காதல் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலிருந்து பிணமாக மீட்கப்பட்டார். மெஹார் என்ற பாகிஸ்தானின் பெண் பத்திரிகையாளரால் இந்தக் காதல் ஜோடிக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில்,  சுனந்தா புஷ்கர் மரணமானமை சலசலப்பை உண்டாக்கியது.
சுனந்தா புஷ்கரின் மரணத்துக்கான காரணம் உடனடியாக அறிவிக்கப்படவில்லை. இயற்கைக்கு மாறான மரணம். உடலிலே  காயங்கள் இருந்தன. அந்தக் காயங்களும் மரணத்துக்குக் காரணமாக இருக்கலாம் என அறிவிக்கப்பட்டது. லூபுஸ் என்ற நோயால் சுனந்தா பாதிக்கப்பட்டிருந்தார். ஆளை மெல்லக்  கொல்லும் அந்த நோய் காரணமாக அவர் இறந்திருக்கலாம். லூபுஸ் நோயால் பீடிக்கப்பட்டவர்களின் நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்துவிடும். எலும்புகள் இணையுமிடத்தில் வீக்கம் ஏற்படும். இந் நோயின் தாக்கமே அவரின் உயிரைப் பறித்தது என்ற ஊகம் வெளியானது.

குடும்பச்சண்டையை டுவிட்டரில் பகிரங்கமாக்கினார் சுனந்தா..சுனந்தாவின்  பகிரங்க அறிக்கையை சசிதரூர் விரும்பவில்லை. ஆகையால்,  மறு நாள் இருவரும் இணைந்து தங்களுக்குள் பிரச்சினை இல்லை என்று அறிக்கை வெளியிட்டார்கள். விமான நிலையம், விமானப் பயணம், ஹோட்டல் போன்ற பொது இடங் களில் தம்மையும் மறந்து குடும்பச் சண்டையை வெளிப்படுத்தினார்கள். சுனந்தாவின் மரணம்  கொலையா? தற்கொலையா? என்ற விவாதமானது.
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த சுனந்தா அதற்காக மாத்திரைகளைப் பாவித்து வந்தார். அளவுக்கதிகமான மன அழுத்த மாத்திரைகளை உட்கொண்டமையே மரணத்துக்குக் காரணம்  என அறிவிக்கப்பட்டுள்ளது. அளவுக்கதிகமான மாத்திரையை சுனந்தா பாவித்தாரா  அல்லது பாவிப்பதற்கு தூண்டப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
சுனந்தா இறப்பதற்கு முன்னர் கேரளாவில்  முழு உடல்  பரிசோதனையைச் செய்துள்ளார். இது வழக்கமான பரிசோதனைதான். இதிலே இரகசியம் எதுவும் இல்லை என்று அந்த  வைத்தியசாலை அறிவித்துள்ளது. அதேவேளை,  மூன்று மாதங்களுக்கு முன்னர் தனது சொத்துகளை உயில் எழுதிவைத்துள்ளார். சுனந்தாவுக்கு 112 கோடி ரூபா பெறுமதியான சொத்து உள்ளது. சசிதருரிடம் 6.34 கோடி சொத்து உள்ளது.

சசிதரூர் , சுனந்தா இருவருக்குமே இது மூன்றாவது திருமணம். அரசியல்வாதியான பின்னர் சர்ச்சைகளில் சிக்கிய சசிதரூரின் திருமணமும் சர்ச்சைக்குள்ளானது. விமானப் பயணத்தின்போது மூன்றாம் வகுப்பு, கால்நடைகளின் வகுப்பு,  தேசிய கீதம் பாடும் போது  அமெரிக்கர்கள் போன்று கையை  நெஞ்சினிலே வைக்க வேண்டும் என்ற சசிதரூரின் கருத்துகள் பெரும் சர்ச்சையை  உருவாக்கின.
ஐ.பி.எல். கொச்சி அணியை வாங்கியதில் முறைகேடாக பணப்பரி மாற்றம் செய்யப்பட்டதால் சசிதரூர்  மீதும் அவரது மனைவி மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. காஷ்மீரைச் சேர்ந்த சுனந்தாவின் வீடு 1990ஆம் ஆண்டு தீவிரவாதிகளால்  தீக்கிரையாக்கப்பட்டபோது காஷ்மீரிலிருந்து வெளியேறினார். கனடா, துபாய் ஆகிய நாடுகளுக்குச் சென்று முதலீடு செய்து கொச்சியில் தங்கினார்.
வழக்கறிஞர், எழுத்தாளர், மனித உரிமை ஆர்வலர், பிரபல நிறுவனங்களின் ஆலோசகர் என பல பெருமைகளைப் பெற்றவர் சசிதரூர். ஐ.நாவின் துணைப் பொதுச் செயலாளராக (தொடர்பு  பொதுத் தகவல்) பணியாற்றியவர். 2007ஆம் ஆண்டு இந்தியாவின் சார்பில் ஐ.நா. பொதுச் செயலா ளர் பதவிக்குப் போட்டியிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தார். சசிதரூரை இழக்க விரும்பாத காங்கிரஸ்,   அவருக்குத்  தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கியது. தேர்தலில் வெற்றிபெற்ற சசிதரூக்கு வெளிவிவகார அமைச்சு வழங்கியது இந்திய மத்திய அரசு.  பிரச்சினைகள் காரணமாக அவரது அமைச்சுப்பதவி மாற்றப்பட்டது.
சுனந்தாவின் மரணம் தொடர்பான சகல விசாரணைக்கும் சசிதரூர் ஒத்துழைப்பு வழங்குகிறார். சுனந்தா சந்தேகப்பட்டது போல் தங்களுக்கிடையில் தப்பான உறவு இல்லை என பாகிஸ்தானில் உள்ள பெண் பத்திரிகையாளர் மெஹார் கூறியுள்ளார்.

வானதி 
சுடர் ஒளி 26/01/14

No comments: