Wednesday, January 8, 2014

முந்துகிறது பா.ஜ.க தயங்குகிறது காங்கிரஸ்

மோடியை  பிரதமர் வேட்பாளராக அறிவித்த பாரதீய ஜனதாக்கட்சி இந்தியப் பொதுத் தேர்தலைச் சந்திப்பதற்கான முன்ஏற்பாடு களைஆரம்பித்ததுவிட்டது தேர்தல் பிரசாரக் கூட்டத்தை கடந்த வாரம் நடத்திய பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் இம்மாதம் 15 ஆம் திகதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவித்துள்ளார்.

வாஜ்பாய்க்குப் பின் அத்வானிதான் அடுத்த தலைவர் என்ற நிலை இருந்தது. பாரதீய ஜனதாக்கட்சி ஆட்சி அமைத்தால் பிரதமராகலாம் என்ற ஆசை அத்வானிக்கு இருந்தது. 2004ஆம் ஆண்டு காங்கிரஸிடம்   பறி கொடுத்த ஆட்சியை  மீண்டும் கைப்பற்றுவதற்குரிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.10 வருட காங்கிரஸ் கட்சியின் ஆட்சியினால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். இந்த ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் காங்கிரஸின் தோல்வி எழுதப்பட்டுவிட்டது. ஆகையினால், தனது பிரதமர் ஆசை நிறைவேறும் என்று அத்வானி  நம்பினார்.

அத்வானியின் ஆசைக்கு மோடியின் எழுச்சிமுட்டுக்கட்டைப் போட்டது.பாரதீய ஜன தாக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியான போது அத்வானி அதிருப்தியடைந்தார்.தனது எதிர்ப்பை வெளிப்படையாகத் தெரிவித்தார். பாரதீய ஜனதாக் கட்சியில்  உள்ள புதிய தலை முறை அத்வானியின் எதிர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.ஒரு சில செயற்குழுக் கூட்டங்களில் அத்வானி பங்குபற்றவில்லை. அவர் இல்லாமலே கூட்டங்கள் நடைபெற்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தனித்து விடப்பட்டால் அரசியல் அரங்கில் காணாமல் போய்விடலாம் என்ற பயத்தில் அத்வானி தனது முடிவை மாற்றினார். அத்வானியைச் சந்தித்து மோடி ஆசிபெற்றார். மோடிக்கு அத்வானி வாழ்த்துக்கூறினார். உட்பூசல் இல்லாது பிரதமர் வேட்பாளரானார் மோடி.

வடஇந்திய மாநிலத் தேர்தல் முடிவுகள் மோடிக்கு தெம்பூட்டின.மோடியை முன்னிறுத்தி நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பலத்த அடிவாங்கியது. சோனியா, ராகுல் ஆகியோர் சூறாவளி பிரசாரம் செய்தும் வட மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிபடுதோல்வியடைந் தது.இந்திய நாடாளுமன்றத்தின் முன்னோட்டாமாகவே வட மாநிலத் தேர்தல் எதிர்நோக்கப்பட்டது. மோடி அலையில்  காங்கிரஸ் மூழ்கி விடும் என்று விமர்சனங்கள் வெளியான போது காங்கிரஸ் கட்சி அதனை கட்சி அடியோடு நிராகரித்தது. காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரித்ததை தேர்தல் முடிவு தெளிவு படுத்தியது.

மோடிக்கு இணையான தலைவரை அறிவிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.பலமான கூட்டணி அமைத்து  பொதுத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கூடட்ணிப் பேச்சு வார்த்தையைத்திரை மறைவில் ஆரம்பித்துவிட்டது.பாரதீய ஜனதாக்கட்சி , காங்கிரஸ் கட்சியின் நிலை  எதிர்மாறாக உள்ளது. காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்த கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியேறி வருகின்றன. பாரதீய ஜனதாக்  கட்சியுடன்  கூட்டணி சேர்வதற்கு மாநிலக்கட்சிகள் ஆர்வமாக உள்ளன.
மோடியின் தலைமையில் பொதுத்தேர்தலைச் சந்திப்பதற்கு பாரதீய ஜனதாக்கட்சித் தொண்டர்களும் தலைவர்களும் தயாராகி விட்டனர். யாருடைய தலைமையில் காங் கிரஸ் கட்சித்தேர்தலைச்சந்திக்கப் போகிற தென்று இன்னமும் முடிவு செய்யபடவில்லை.
காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரான ராகுல்தான் அடுத்த பிரதமர் என்ற கருத்து கட்சிக்குள் உள்ளது.ராகுலுக்கு விட்டுக் கொடுக்க தயாராக இருப்பதாக பிரதமர் மன் மோகன்சிங் பலமுறை வெளிப்படையாக அறிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலகப் போவதாக கடந்த வாரம்பரபரப்பான செய்தி வெளியானது. பிரதமர் செயலகம்  இதற்கு மறுப்புத்தெரிவித்து உண்மை நிலையை வெளியிட்டது.
தோல்விப்பயத்தில் இருக்கும் காங்கிரஸ் பிரமதர் வேட்பாளராக ராகுலை நிறுத்தாது. பலிக்கடாவாக வேறு ஒருவரை தான் பிரதமர் வேட்பாளாராக நிறுத்தும்.ராகுலின்  செயற்பாடு காங்கிரஸ் தலைவர்களுக்கும் கூட்டணித் தலைவர்களுக்கும் பிடிக்கவில்லை. மோடிக்கு நிகராக மக்களைக்  கவரும் தலைவர்  காங்கிரஸ் கட்சியில் இல்லை. ஆகையினால், சிறுபான்மை இன வாக்குகளைக் கவர்வதற்கு காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

 சபாநாயகர் மீராகுமார், அமைச்சர்கள் சுசில் குமார்ஷி ண்டே, ஏ.கே. அந்தோனி சல்மான் குர்ஷித் போன்ற ஒருவரை பிரதமர் வேட் பாளராக காங்கிரஸ் அறிவிக்க உள்ளது. பாரதீய ஜனதாக்கட்சிக்கு  எதிரான சிறுபான்மை மக்களின்  வாக்குகளை நோக்கி காங்கிரஸ் குறிவைத்துள்ளது.

ஆனால், இவர்களில் எவருமே கட்சிக்குள்      செல்வாக்கு செலுத்தக்கூடிய வல்லமை இல்லாதவர்கள்.இரண்டாம் கட்டத்தலைவர்கள் இவர்களை ஆதரிக்க மாட்டார்கள். தொண்டர்கள் மத்தியிலும் இவர்களுக்கு செல்வாக்கு இல்லை.
பிரதமர் வேட்பாளரரை அறிவிக்க வேண்டிய அவசியத்தை அமைச்சர் சிதம்பரம் உணர்ந்துள்ளார்.கட்சிப்பிரச்சினைகளை வெளிப்படையாக பேசுவதற்கு விரும்பாத அமைச்சர் சிதம்பரம் இப்போது வாய் திறந்துள்ளார்.இது காங்கிரஸ் கட்சிக்குள் உண்டான நெருக்கடியை வெளிப்படுத்துகிறது.
காங்கிரஸ் கூட்டணியிலிருந்து ஒதுங்கி இருக்கும் லல்லு பிரசாத்யாதவ்  புதிய கூட்டணியைத் தேடி அலைகிறார்.இது காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய இழப்பை ஏற்படுத்தி உள்ளது.பீகார் மாநிலத்தின் செல்வாக்கு மிக்கவர் லல்லு காங்கிரஸ் கட்சியின் வேண்டா விருத் தாளியான தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி சேர்வதற்கு லல்லு விரும்புகிறார். இந்த இரண்டு கட்சிகளின் கூட்டணி காங்கிரஸுக்கு பெரும் சவாலாக  அமையும்.

மோடியின் வளர்ச்சி காங்கிரஸை அச்சுறுத்தினாலும் அரவிந்த் கெஜ்ரிவாலின் வரவு காங்கிரஸுக்கு சவாலாக உள்ளது. டில்லியின் ஆட்சி பீடத்தில் இருந்த காங்கிரஸ் எட்டு தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் பிரவேசமே காரணம். அரவிந்த கெஜ்ரிவாலின் அரசியல் பிரவேசம் மாயாவதிபோன்ற சிறுபான்மைக்கட்சித் தலைவர்களுக்கு பெரும் தலையிடியாக  உள்ளது. சிறுபான்மை வாக்குகளால்  அரசியல் அரங்கை  அலங்கரிப்பவர்கள் ஆடிப்போய் உள்ளார்கள். இந்தியப் பொதுத்தேர்தலின் போது பாரதீய ஜனதாக்கட்சிக்கும் அரவிந்த் கெஜ்வால் சவாலாக இருப்பார்.

மாநிலக்கட்சிகள்  அனைத்தும் கெஜ்வாலைப் பின்பற்றத் தொடங்கிவிட்டன. ஊழல் இல்லாத ஆட்சி என்ற கோஷத்தை மாநிலத் தலைவர்கள் கோரசாககூறத் தொடங்கி விட்டனர்.ஊழல் நிறைந்த கட்சித்தலைவர்களுக்கு இது சிம்ம சொப்பனமாக உள்ளது. நல்ல ஆட்சியை அமைப்போம். அபவிருத்தி செய்வோம்; இலவசமாக அத்தியாவசிய பொருட்களைத் தருவோம்; என்ற கோஷங்களுக்கு முன்னால் ஊழல் அற்ற ஆட்சி என்ற வாசகம் மக்கள் மனதை எளிதில் கவர்ந்து விடுகிறது.
அன்னாரஹசாரே ஆரம்பித்து வைத்த ஊழலுக்கு எதிரான இயக்கம் கெஜ்ரிவால் மூலமாக அரசியல் அரங்கை அதிரவைத்துள்ளது.

வானதி 
சுடர் ஒளி  05/01/14



No comments: