Saturday, January 11, 2014

பெண்கள் மீதான வன்முறையின் ஆரம்பம் எது?

தொழில்நுட்பம், விஞ்ஞானம் என்பன வளர்ச்சியடைந்து நாகரிகத்தின் உச்சத்தில் இருக்கும் மனிதனின் சில செயல்கள் கற்காலத்தை விட மோசமான நிலையில் உள்ளன. வாழ்க்கைச் செலவு மாதாந்தம் அதிகரிப்பது போல் குற்றச்செயல்களும் அதிகரிக்கின்றன.கொலை,கொள்ளை, மோசடி என்பவற்றுக்குப் போட்டியாக பாலியல் பலாத்காரம், சிறுவர் துஷ்பிரயோகம் என்பனவும் அதிகளவில் நடைபெறுகின்றன.

பத்திரிகையின் ஒரு மூலையில் முன்னர் பிரசுரமான பாலியல் செய்திகள், தற்பொழுது முன் பக்கத்தை  அலங்கரிக்கின்றன.வானொலி, தொலைக்காட்சி போன்ற இலத்திரனியல் ஊடகங்களும் இப்படிப்பட்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.சதக்சதக் எனக் கத்தியால்  குத்தினான். கதறக்கதறக் கற்பழித்தான் என்ற செய்தி தலைப்புகளுடன் முன்பு வெளியான சில பத்திரிகைகள் பரபரப்பாக விலைப்பட்டன. காலப்போக்கில் அப்படிப்பட்ட பத்திரிகைகள் மறைந்து விட்டன.

ஊடகங்களுக்குத் தீனி கொடுக்கும் வகையில் பாலியல் வல்லுறவு, சிறுவர் துஷ்பிரயோகம் என்பன இன்று பரவலாக நடைபெறுகின்றன. இச் சம்பவங்களை அருகில் நின்று பார்த்தது போன்ற கட்டுரைகளும், படங்களும் பக்கங்களை நிரப்புகின்றன.குற்றவாளிகள் சட்டத்தின் முன்னே நிறுத்தப்பட்டு தண்டனை பெறுகின்றார்கள்.ஆனால், இப்படிப்பட்ட குற்றங்கள் பெருகிக்கொண்டே செல்கின்றன.
மாணவச் செல்வங்களுக்கு வழிக்காட்ட வேண்டிய    சில ஆசிரியர்களும்,சில  அதிபர்களும் மாணவிகளிடம் தம் இச்சையைத் தீர்த்துக்கொள்கின்றார்கள்.தமக்கு என்ன நடந்ததெனத் தெரியாது கர்ப்பமான பின்னே அதன் விபரத்தை சில பிஞ்சு  உள்ளங்கள் உணருகின்றன.இதனால் ஆசிரிய சமூகம் தலை குனிய வேண்டிய நிலை உள்ளது. முற்றும் துறந்த சில ஆன்மீகத்தலைவர்களும் சில துறவிகளும் காமத்தை துறக்காது தப்பு செய்கின்றனர். 

  வாய்ப்பும், வசதியும்  தேடி வெளிநாட்டுக்குச் செல்லும் பெண்களின் பிள்ளைகள் தான் அதிகளவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.மனைவி வெளிநாட்டில் இருப்பதனால் தனது விரகதாபத்தைத் தீர்க்க முயலும் கணவன் குற்றவாளி ஆகின்றான் 
படிக்கும் காலத்தில் ஒழுக்கமாக இருக்கும் சிலர் பருவகால கோளாறினால் குற்றவாளியாகின்றனர். சுற்றமும் சூழலும் சிலரைக் குற்றவாளியாக்குகிறது. ஒழுக்கம், நேர்மை என்பன பற்றி தமது பிள்ளைகளுக்குப் போதிக்கும் பெற்றோர் தமது பிள்ளைகள் பெரியவராகையில் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு வந்து விடுகின்றனர். பிள்ளைகளின் போக்கு அப்போது திசைமாறத் தொடங்குகிறது.

பெண் பிள்ளைகளைக் கட்டுப்பாட்டுடன் பொத்திப்பொத்தி வளர்ப்பார்கள்.தோளுக்கு மிஞ்சிய ஆண்   பிள்ளைகளைக், கட்டுப்படுத்தத் தவறி விடுவார்கள்.அதனால், தான் பெண் பிள்ளைகள் பாதிக்கப்படுகிறார்கள். பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் வரை நெருப்பை மடியில் வைத்திருப்பது போன்ற நிலையிலே தான் பெற்றோர் இருப்பார்கள்.தப்பு நடைபெற்றால் திருமணம் கை  கூடாது என்பதிலே பெண்பிள்ளைகள் மீது அதிக அக்கறை காட்டுகிறார்கள்.ஆண் பிள்ளை மிக மோசமானவனாக இருந்தாலும் அவனுக்கு கழுத்து நீட்ட யாரோ ஒரு பெண் காத்திருப்பாள். என்ற நம்பிக்கை சமூகத்தில் புரையோடிப்போயுள்ளது. 

    பெண் பிள்ளைகளுடன் எப்படிப் பழக வேண்டும், எப்படிப் பழகக்கூடாது என்று ஆண் பிள்ளைகளுக்கு எடுத்துக்கூற வேண்டும். ஆண்கள் செய்யும் தவறினால் பெண்களின் வாழ்க்கை நிர்மூலமாகி விடும் என்ற உண்மையை  அப் பிள்ளைக்கு உணர்த்த வேண்டும். ஆன்மீக அறிவு இளம் சந்ததியிடம் குறைந்தளவே உள்ளது.ஆன்மீக வகுப்புக்கள் மனதை சுத்தமாக்குபவை ஒரு சம்பவம் நடந்து முடிந்த பின்பு அதனை விமர்சித்து எழுதுவதை விட அப்படியான சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இது பற்றிய சமூக விழிப்புணர்ச்சி திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இப்படிப்பட்ட சம்பவங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என்பன  அவ்வவ்போது நடைபெறுகின்றன. சமூக ஆர்வாலர்களின் தொண்டு நிறுவனங்களும் இணைந்து பாலியலுக்கு எதிராக சிறுவர் துஷ்பிரோகம் என்பவற்றைத்  தடுக்க முன்வர வேண்டும்.  

படிப்பறிவு இல்லாதவர்கள், போதை வஸ்துக்கு அடிமையானவர்கள், சமூகத்தால் வஞ்சிக்கப்பட்டவர்கள் தான் குற்றச்செயல்களை ஈடுபடுவதாக பொதுவான அபிப்பிராயம் உண்டு.சமூகத்தில் உயர்ந்த இடத்தில் உள்ளவர்களும், உயர் பதவி வகிப்பவர்களும் செய்யும் குற்றங்கள் மூடி மறைக்கப்படுகின்றன.இப்போது குற்றங்கள் எதையும் மூடி மறைக்க முடியாத நிலை உள்ளது.
  பொருள் , பணம், நகை என்பன இலஞ்சமாகப் பெற்ற நிலை மாறி பாலியல் இலஞ்சம் பெறும் கொடுமையான சம்பவங்கள் இப்போது இடம் பெறுகின்றன.குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போராட்டம்,ஆர்ப்பாட்டம் என்பன நடைப்பெற்றாலும் கூட வழக்கு விசாரணையின் போது செல்வாக்கு மிக்க குற்றவாளிகளுக்காக பிரபல வழக்கறிஞர்கள் ஆஜராவார்கள்.
 வீட்டு வேலைக்குச் செல்கின்ற சிறுவர்கள் மீதான பாலியல் குற்றம் அதிகரித்துள்ளது. வீட்டு வேலை செய்யும் சிறுவர்களை அரசாங்கம் பொறுப்பெடுத்து பாடசாலைக்கு அனுப்பவேண்டும்.

  வயது குறைந்தவர்களை வேலைக்கு அமர்த்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். பெரும்பாலான  நேரங்களில் சட்டம் மெளனமாகி விடுகின்றது.இந்நிலை மாற வேண்டும்.இந்நிலையை மாற்றுவதற்கான சமூக அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
பெண்கள் மீதான வன்முறைகளுக்கு ஆண்களே பெரும்பாலும் காரணமாக உள்ளனர்.பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள், அவர்களின் துன்பங்கள் பற்றி ஆண் பிள்ளைகளுக்குத்  தெளிவு இருக்குமானால் இப்படிப்பட்ட செயல்கள் பெருமளவு குறைந்து விடும்.பெண்களைப் பாதுகாப்பாக வளர்க்கும் போதே பெண்களுக்குப் பாதுக்காப்பளிக்க வேண்டும் என ஆண் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்.
 ரமணி 
ஒளி அரசி 
ஜனவரி 2014

No comments: