Sunday, March 2, 2014

ராஜீவுக்குப்பதிலாக...

நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழகம் சென்றபோது ஸ்ரீபெரம்புதூரில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட செய்தி உலகத்தையே அதிர்ச்சிக் குள்ளாக்கியது. ராஜீவின் அகால மரணம் இலங்கைத் தமிழ் மக்களையும் பாதித்தது. எம்.ஜி.ஆர்., இந்திராவுக்குப் பின்னர் ராஜீவ் எமக்கு  விடிவைத்  தேடித்தருவார் என நம்பி ஏமாந்த இலங்கைத் தமிழர்கள் ராஜீவ் கொல்லப்பட்டதை அதிர்ச்சியுடன் நோக்கினர். ராஜீவ் கொல்லப்பட்டதற்கு விடுதலைப் புலிகள்தான் காரணம் என்று விசாரணை மூலம் தெரிய வந்ததனால் தமிழகத்துக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும்  இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. தொப்புள்கொடி உறவு அறுத்தெறியப்பட்டது. இந்திய காங்கிரஸ் கட்சி இலங் கைத் தமிழர்களை  விரோதத்துடன் நோக்கியது. பரமஎதிரிகளான பாகிஸ்தானுடனும், சீனாவு டனும் கைகுலுக்கும் காங்கிரஸ் தலைவர்கள் இலங்கைத் தமிழர்களை மன்னிக்கத் தயாராக இல்லை.

ராஜீவ் கொல்லப்பட்டதனால் பலர் துன்பப் பட்டு !  துயரப்பட்டனர். ராஜீவின் மரணம் தமது வாழ்வைப் புரட்டிப்போடும் என்று சிலர் எதிர் பார்க்கவில்லை. ராஜீவ் கொலையில்  சம்பந்தப் பட்டவர்களில்  ஒன்பது பேர் மரணமானதால் 26 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.  மேன்முறையீட்டின் மூலம் நான்கு பேருக்கு மரணதண்டனையும், மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட ஏனையவர்கள் விடுவிக்கப்பட்டனர்.  நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையானது.
தூங்கிக்கிடந்த நீதி கண் விழித்ததனால்  ராஜீவ் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரையும் விடுவிக்கும்படி நீதிமன்றம் உத்தர விட்டது. நீதிமன்றத்தின்  தீர்ப்பை இந்திய காங்கிரஸினால் ஜீரணிக்க முடியவில்லை. பிரதமர் மன்மோகன், அடுத்த பிரதமர் என வர்ணிக்கப்படும் ராகுல் ஆகிய இருவரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவர் கள் சிலர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமது கருத்துகளைத் தெரிவிக்கின்றனர்.  பழிக்குப்பழி, கொலைக்குக்கொலை  என்று வாதிடுகின்றார்கள். மன்னிக்கும் மனப்பான்மை இல்லாத அரசியல் தலைவர்களாகப் பவனி வருகின்றனர்.

ராஜீவ் காந்தி கொலையில் பல முரண்பாடுகள் இருப்பதாக ஆதாரங்களுடன் பல புத்தகங்கள்  வெளிவந்தன. அப்புத்தகங்கள்  எவற்றையும் இந்திய அரசு தடைசெய்யவில்லை. அப்புத்தகங்களுக்கு எதிராக இந்திய நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படவில்லை. வர்மா கமிஷன், ஜெயின் கமிஷன் ஆகியவற்றின் பரிந்துரைகள்  நடை முறைப்படுத்தப்படவில்லை. உண்மையான  குற்றவாளிகளை விசாரிக்கவில்லை என்ற வலுவான கருத்தை  மறுக்கமுடியாத நிலை உள்ளது. 


ராஜீவின் மரணம் இந்தியாவுக்கு பேரிழப்புத்தான்.  தலைவனை இழந்த குடும்பத்துக்கு பெரும் துயரம்தான். குடும்பத் தலைவன் ராஜீவ் இல்லையே என்ற குறையைத் தவிர  வேறு குறை எதுவும் அந்தக் குடும்பத்துக்கு இல்லை. ராஜீவ் மரணமானபின் அவர்களது செல்வாக்கு, வசதி வாய்ப்பு, பதவி, வருமானம்  எல்லாம் உயர்ந்துள்ளன. ஆனால், ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின்  குடும்பம் சின்னாபின்னமாகியுள்ளது. 

அப்பாவை இழந்த ராகுலும், சகோதரியும் அம்மாவின் அரவணைப்பில் சந்தோஷமாக இருக்கிறார்கள். அப்பா முருகனும், அம்மா, நளினியும் சிறையில் இருப்பதால் தாய் தந்தையின் அரவணைப்பன்றி தனிமையில் வாடுகின்றார்  அவர்களின்  மகள் அரித்ரா. அம்மாவின் கையால் ஒருவேளை  உணவு உண்ணமாட்டேனா எனத் தினமும் ஏங்குகிறாள்.அந்த ஏக்கத்தை யார் தீர்ப்பது?  அறியாப் பருவத்தில்  பெற்றோரைப் பிரிந்த அரித்ரா இன்று இளம் பெண்ணாக வாழ்கிறார். தாய், தகப்பனின் பெயரை வெளியே சொல்ல முடியாத அவலம் மிகக் கொடுமையானது.

மகன்  பேரறிவாளனை சிறை மீட்பதற்காக தாய் அற்புதம்மாள்  செய்யும்  பணி மகத்தானது. மனித உரிமை,  மரணதண்டனைக்கு எதிரான புத்தகங்கள், கருத்துகள், கருத்தரங்குகள்  மூலம் விழிப்புணர்வு  ஏற்படுத்துகிறார். மகனின் விடுதலைக்காக அற்புதம்மாள்  செய்யும்  தியாகங்கள் அளப்பரியவை.  மரணதண்டனையை ஒழிக்க வேண்டும்.மரணதண்டனை  விதிக்கப்பட்ட அனைவரும் உயிர்வாழ அனுமதிக்கப்பட வேண்டும் என்ற  பரந்த மனப்பான்மை அற்புதம்மாளிடம் உள்ளது.
சாந்தனின் நிலை மிகப் பரிதாபமானது. ஆறுதல் சொல்ல  எவரும் இல்லாத தனிமையில் வாடுகிறார். சாந்தனின் விடுதலைக்காக இந்தியா வில் குரல்கொடுக்க உறவினர் எவரும் இல்லை.  அவரின் விடுதலைக்காக மற்றவர்கள்தான்  உரத்துக்  குரல் கொடுக்கிறார்கள். மகன் விடுதலையாவானா? இல்லையா ! என்ற  ஏக்கத்திலேயே  சாந்தனின் தகப்பன் இறந்துவிட்டார். சிறையில் இருக்கும் மகன் நல்ல சாப்பாடு   சாப்பிடமாட்டான் என்ற கவலையில் சாந்தனின் தாய் அறுசுவை உணவைத்  உண்பதைத் தவிர்த்தார்.  ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டும் சாப்பிடுகிறார்.

ஊழல் செய்த அரசியல்வாதிகள் சுதந்திரமாக உள்ளார்கள். சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அரசியல்வாதிகள் பிணையில் வெளிவந்து உல்லாசமாக இருக்கிறார்கள்.  ராஜீவ் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மட்டும் சாகும்வரை சிறையில் இருக்கவேண்டும் என்பது யதார்த்தத்துக்குப் புறம்பாக உள்ளது 
.வர்மா 
சுடர் ஒளி 02/03/14  

No comments: