Thursday, March 27, 2014

தமிழக அரசிய்லில் குழம்பிய கூட்டணி


திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் மாற்றீடான கூட்டணி என்று தமிழருவி மணியனால் விதந்துரைக்கப்பட்ட  மோடி, விஜயகாந்த், வைகோ, டாக்டர் ராமதாஸ் அடங்கிய  கூட்டணி நாளொரு பிரச்சினையும் பொழுதொரு சிக்கலுமாகக் கூடியுள்ளது.
கூட்டணிக்குத் தலைமை வகிப்பது யார்? யாருக்கு அதிக தொகுதிகள் என்ற பிரச்சினை முற்றியவேளை  ராமதாஸும், விஜயகாந்த்தும் தன்னிச்சை வேட்பாளர்களை  அறிவித்து பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். மோடிக் காக வாக்குக் கேட்கமாட்டேன் என்ற விஜயகாந்த், இறுதியில் மனம்மாறி  மோடியை பிரதமராக்க வேண்டும். என பிரசாரம்  செய்ய ஆரம்பித்துள்ளார்.

பாரதீய ஜனதாக் கட்சியியின் தலைமை யிலான  கூட்டணி என ஆரம்பத்தில் கூறப்பட்டாலும் கூட்டணியின் தலைவர் தானே  என்பதை விஜயகாந்த் உணர்த்துகிறார். பரம எதிரிகளான விஜயகாந்தும் டாக்டர் ராமதாஸும்  ஒரே கூட்டணியில் இருந் தாலும் ஒருவரின் காலை ஒருவர் இழுத்து விடுவதில்தான் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் தமிழகத்தில் இருந்து தூக்கி எறிவதற்காக கூட்டணி அமைக்கப்பாடு பட்ட தமிழருவி மணியன்  வாழ்க்கையே வெறுத்துவிட்டது எனக் கருதுகிறார். இந்தக் கூட்டணியின் வெற்றிக்காக பிரசாரம் செய்யப்போவதில்லை என வெறுப்புடன் அறிவித்துள்ளார். தமிழக அரசியலில் என்றுமில்லாதவகையில் பெருத்த குழப்பங்களுடன் ஒரு கூட்டணி அமைந்துள்ளது.

ஒரு தொகுதிக்கு மூன்று தலைவர்களும்  குடுமிப்பிடி   சண்டை போட்டார்கள். தமது வெற்றிக்குச் சாதகமான தொகுதிகளை  விட்டுக் கொடுக்கமாட்டேன் என்று சிறு பிள்ளைகள்போல் சண்டையிட்டார்கள். இவர்களா இந்தியாவை ஆட்சி செய்யப் பார்க்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தக்  கூட்டணி வெற்றிபெற்றால் அமைச்சரவையில் இடம்பிடிப்பதிலும் பலத்த போட்டி  இருக்கும்.
கூட்டணிக் குழப்பத்தால் தமிழகப் பக்கம் செல்வதற்கு அஞ்சிய  பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் தொகுதி பங்கீடு பற்றிய சாதக சமிக்ஞை கிடைத்ததும் நிம்மதி அடைந்துள்ளனர். விஜயகாந்த் 14, பாரதீய ஜனதாக் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி ஆகியன தலா 8,  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்க ழகம் 7, கொங்கு நாட்டு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியன தலா  ஒரு தொகுதியில் போட்டியிடுகின்றன. தேர்தல் கூட்டணி பற்றிய இழுபறிகள் ஓரளவு பூர்த்தியாகிவிட்டன. விஜயகாந்த் நினைத்ததுபோல் அதிக தொகுதிகளைப் பெற்றுவிட்டார். ராமதாஸும், வைகோவும் விஜயகாந்தைவிட குறைந்த தொகுதிகளைப் பெற்றுள்ளனர். மற்ற கட்சிகளைவிட தாம் அதிக தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்றே சகல தலைவர்களும்  மனதுக்குள் நினைக்கின்றனர்.
பாரதீய ஜனதாவின் கூட்டணி என்றே வைகோவும், டாக்டர் ராமதாஸும் நினைக்கின்றனர். தனது தலைமையிலான  கூட்டணி என்று விஜயகாந்த் நினைக்கிறார். எப்படியாவது வெற்றிபெற வேண்டும்,  மந்திரி சபையில் இடம்பிடிக்க வேண்டும் என்றே   பாரதீய ஜனதாக் கட்சியினர்  நினைக்கின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான பலமான  கூட்டணி என்ற கோஷத்துடன் ஆரம்பமான கூட்டணி குழப்பத்துடன் நிறைவு பெற்றுள்ளது.





இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சி என்ற புகழுடன் வலம் வந்த காங்கிரஸ் தமிழகத்தில் செல்வாக்கிழந்துள்ளது. தமிழகத்தின் தீண்டாக்கட்சியான காங்கிரஸுடன் கூட்டணிசேர சிறிய கட்சிகள்  கூட முன்வரவில்லை. தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முதலாக கூட்டணி இல்லாது தேர்தலுக்கு முகம் கொடுக்கப்போகிறது காங்கிரஸ். தோல்வி உறுதி எனத் தெரிந் துகொண்ட தமிழகத் தலைவர்கள் போட்டியிடப் போவதில்லை எனப் பகிரங்கமாக அறிவித்துள்ளனர். மத்தியில்  ஆட்சியிலிருந் தபோது தமிழக மக்களின் துயரை துடைக்க முன்வராத காங்கிரஸுக்கு  தேர்தலுக்கு முன்பே பலத்த அடி விழுந்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு  வாக்களிக்க தமிழக மக்கள் தயாராக இல்லை என்பது வெளிப் படையானது.  செத்த பாம்பைப்போல் கிடக்கும் காங்கிரஸை தோற்கடிப்போம் என ஜெயலலிதா அறை கூவல்  விடுத்துள்ளார். ஜெயலலிதா  சொன்னாலும்  சொல்லாவிட்டாலும் காங்கிரஸ் கட்சி நான்காவது இடத்துக்குத் தள்ளப்படப்போவது நிச்சயம்.  செல் வாக்கானபோது கோஷ்டி பூசலினால் ஒருவருடன் ஒருவர் முட்டி மோதிய காங்கிரஸ் தலைவர்கள் யாருக்கு யார் ஆறுதல் சொல்வது எனத் தெரியாது தடுமாறுகின்றனர். கவிழ்ந்துபோன கப்பலில் இருந்து  கரை தெரிகிறதா என நோட்டமிடுகின்றனர்.  தமிழக காங்கிரஸ் கட்சியின்  தலைவர்கள் துவண்டு போயுள்ளனர். தொண்டர்கள் சோர்ந்து போயுள்ளனர்.

கூட்டணிக்குள் இருந்த சிறுசிறு பிரச்சினைகளை முடித்துவிட்டு தேர்தல் பரப்புரையை ஆரம்பித்துள்ளது  திராவிடமுன்னேற்றக் கழகம். திராவிடமுன்னேற்றக் கழகத்தின் எதிரி  வெளியே இல்லை. திராவிட முன்னேற்றக்கழகத்தை மதுரையில் மண்கௌவச் செய்வேன் என சபதம் எடுத்துள்ளார் அழகிரி. அடிக்கடி சர்ச்சையில் சிக்கினாலும்  தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட  பணத்தை முழுவதுமாகச் செலவளித்துள் ளார்.  நாடாளுமன்றத்தில் ஒருவருடனும்  பேசாது அமைச்சராக இருந்து சாதனை படைத்தவர். மொழிப் பிரச்சினையால் மூத்த அரசியல்வாதிகளுடன் அதிகம் பேசாது தனிமையிலே இனிமை கண்டார்.அழகிரிக்கு எதிராக திராவிட முன்னேற்றக்கழகம் காய் நகர்த்திவரும் வேளையில் பிரதமர் மன்மோகன், ரஜினி,  பாரதீய ஜனதாக்கட்சித் தலைவர்   ஆகியோரைச் சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அழகிரியின் செயற்பாடுகளால் எரிச்சலடைந்த  திராவிட முன்னேற்றக் கழகம் அவருடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அடங்காத அழகிரி ஒவ்வொரு  முறையும் ஒவ்வொரு அறிக்கை விட்டு  பரபரப்பைக் கிளப்புகிறார். அப்பாவை எதிர்க்கமாட்டேன். அப்பாவைச் சுற்றி சதிகாரர்கள் உள்ளனர். அப்பாவை மீட்கப் போகிறேன்  என அவ்வப் போது அறிக்கை விடுத்த அழகிரி,  மோடி பிரதமரானால் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.



பாரதீய ஜனதாக் கூட்டணிக்காக பிரசாரம் செய்ய வைகோ தயாராகிவிட்டார். 40 தொகுதிகளிலும் சூறாவளிப் பிரரம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார். ஸ்டாலினும், இலங்கை ஜனாதிபதியும் சேர்ந்து  தன்னைத் தோற்கடிக்கப் போவதாக வைகோ கூறியது அதிர்ச்சியளித்துள்ளது. இவ்வளவு மோசமாக வைகோ பேசுவார் என்று யாருமே கருதவில்லை.வைகோவும், புலிகளும் இணைந்து ஸ்டாலினுக்கு குறிவைப்பதாக குற்றம் சாட்டியே  திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்டார். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான பிரசாரத்தில் இலங்கை ஜனாதிபதியையும், ஸ்டாலினையும் இழுத்துள்ளார் வைகோ.

தமிழகத்தில் நான்கு முனைப்போட்டி என்று கருதி இருந்தவேளையில்  ஐந்வதாக கோதாவில் குதித்துள்ளன இடதுசாரிகள். தமது பலவீனம் பற்றி நன்கு தெரிந்து கொண்டே தனித்துப் போட்டி என அறிவித்துள்ளன. விஜயகாந்துக்கு தூது அனுப்பிய கருணாநிதி இடதுசாரிகளுக்கும் தூது விட்டார். தோழர்கள் வந்தால் சந்தோஷப்படுவேன் என்ற அவரின் வார்த்தை ஜாலம் இடதுசாரிகளின் காதில் விழவில்லை. நான்காவது இடம்பிடிப்பது இடதுசாரிகளா, காங்கிரஸா என்ற போட்டி நடைபெற உள்ளது. புத்தசாலிகளான இடதுசாரித் தலைவர்கள் போட்டியிடாது தோழர்களை களமிறக்கியுள்ளனர்.

தமிழகத்தின் அரசியல் கட்சிகளுக்கெதிராக  நிரந்தரமான வாக்கு வங்கி உள்ளது. அந்த வாக்கு வங்கியில் சிறிதளவு வீழ்ச்சி அல்லது முன்னேற்றம் ஏற்படும். கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வங்கி வெற்றி தோல்விக்கு வழிவகுக்கும். கடைசி நேரத்தில் முடிவு செய்யும் வாக்காளர்களால்  தேர்தல் கருத்துக் கணிப்புகள் மாறுவதுண்டு.
காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி தேர்தலின் முடிவில் ஆதிக்கம் செலுத்தும் சூழ்நிலை ஏற்டலாம். வெற்றி வாய்ப்பு இல்லாத கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமா? தமிழக கட்சிகள் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி சேர வில்லை என காங்கிரஸ் கட்சியினர் சிந்தித்தால் எதிர்பார்த்த முடிவில் மாற்றம் ஏற்பட லாம். காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்தவர்கள் பாரதீய ஜனதாக் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார் கள். திராவிட முன்னேற்றக்கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் இதனால் பயனடையலாம்.
நடுநிலையாளர்களின் வாக்கும் தேர்தல் முடிவில் ஆதிக்கம் செலுத்தலாம். கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை உதாசீனம் செய்த  ஜெயலலிதாவுக்கு  வாக்களிக்க வேண்டுமா? கூட்டணி சேர்வதற்கே இத்தனை நாள் இழுத்தடித்த பாரதீய ஜனதா    கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுமா? தமிழகத்தை மாற்றான் மனப்பான்மையுடன் நோக்கிய காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டுமா?    பத்து வருடங்கள் ஆட்சியில் எல்லா சுகபோகங்களையும் அனுபவித்து விட்டு காங்கிரஸை நடுத்தெருவில் விட்ட திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு  வாக்களிக்க வேண்டுமா என நடுநிலையாக வாக்காளர்கள் சிந்தித்தால் அவர்களின் வாக்கு சிதறிவிடும்.
தமிழகத்தில் ஐந்துமுனைப் போட்டி என கருதப்பட்டாலும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையேதான் உண்மையான போட்டி நடைபெறும்.

வர்மா 
சுடர் ஒளி  23/03/14

No comments: