Tuesday, March 18, 2014

கொள்கை மாறிய விஜயகாந்த்

கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் போட்டியாக விஜயகாந்த் அரசியலில் களம் இறங்கியபோது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கடவுளுடனும், மக்களுடனும் தான் கூட்டணி என்ற ஒறைற்வரிக் கோஷம் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தித்  தொண்டர்களாக்கியது. விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் வாக்குகளைச் சிதறடித்து தமிழகத்தின் பிரதான திராவிடக்கட்சிகளின் வெற்றியைப் பாதித்தது.
தமிழகத்தில் சமபலத்துடன் வாக்கு வங்கியைக்கொண்டிருக்கும் திராவிடக் கட்சிகளை வீழ்த்த முடியும் என்ற விஜய காந்தின் கனவு சகல தேர்தல்களிலும் தவிடு பொடியானது.ஏதாவது ஒரு கட்சியுடன் சேர்ந்தால்தான் வெற்றிபெறமுடியும் என்பதை காலம் தாழ்ந்து உணர்ந்து கொண்ட விஜயகாந்த் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஜெயலலிதாவுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தார்.

தமிழகத்தின் அடுத்த முதல்வர் என கட்சித் தொடர்களினால் போற்றிப் புகழப்பட்ட விஜயகாந்தின்  எதிர்கால அரசியல் ஜெயலலிதாவின் கையில் ஒப்படைக்கப்பட்டது. வீதி அபிவிருத்திக்காக  விஜயகாந்தின் திருமணமண்டபத்தின் ஒருபகுதி இடிக்கப்பட்டது. திருமண மண்டபம் இடிக்கப்படுவதை தவிர்ப்பற்காக அன்றைய முதல்வர் கருணாநிதியை சந்தித்தார் விஜயகாந்த். திருமண மண்டபத்தின் ஒரு பகுதியை உடைக்காது மாற்று திட்டத்தை  முன்வைத்தார் விஜயகாந்த். அவரின்  விருப்பம்  நிராகரிக்கப்பட்டது.
ஆசையுடன் கட்டிய திருமண மண்டபத்தை இடித்த கருணாநிதியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற கொள்கையுடன் ஜெயலலிதாவிடம் சரணடைந்தார் விஜயகாந்த். அவரின் விருப்பத்தை ஜெயலலிதா நிறைவு செய்தார்.இந்தக் கூட்டணியின் பலமும், 2ஜி ஊழலும் தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

ஜெயலலிதா முதல்வரானார்  எவரும் எதிர்பார்க்காத வகையில் விஜயகாந்த் எதிர் கட்சித் தலைவரானார்.திராவிட முன்னேற்றக்கழகம் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.பெயருக்குத்தான் எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் பவனிவருகிறார். உத்தியோகபூவமற்ற எதிர்க்கட்சியாக திராவிட முன்னேற்றக்கழகம்  செயற்படுகிறது. விஜயகாந்தின் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற  தமிழக சட்டசபை உறுப்பினர்கள் ஜெயலலிதாவை சந்தித்தனர். அவர்களின் கோரிக்கைகளை ஜெயலலிதா செவிமடுத்தார். விஜயகாந்தை எதிர்ப்போர்  ஜெயலிதாவிடம் சரணடைந்தனர். அவர்களைக் கட்சியிலிருந்து விலக்க முடியாது திணறுகிறார் விஜயகாந்த்.

கருணாநிதியை பழிவாங்கி வெற்றிபெற்றது போல் ஜெயலலிதாவை தோற்கடிக்க வேண்டும் என்று சபதம் எடுத்துள்ளார் விஜயகாந்த்.நாடாளுமன்றத் தேர்தலில் பலமான கூட்டணி அமைத்து ஜெயலலிதாவை தோற்கடிப்பேன் என்ற விஜயகாந்த் யாருடன் கூட்டணி அமைப்பது என்று உறுதியான முடிவெடுக்காது பாரதீய ஜனதாக்கட்சி, திராவிட முன்னேற்றக்கழகம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் ரகசிய பேச்சை நடத்தினார். தன்னை தேடி வருபவர்களுக்கு படி கொடுக்காது நழுவினார். சிங்கப்பூர், மலேஷியா ஆகிய  நாடுகளுக்கு விஜயகாந்த் சென்று வந்தபோது  கூட்டணி பேச்சுக்காக விஜயகாந்த் வெளிநாடு பயணம் என்று செய்திகள் பரபரப்பாக ஊடகங்களில் அடிபடும். இதனை விரும்பிய விஜயகாந்த் தனது மதிப்பு உயர்வதாக கணித்தார். 
டில்லியின் பிரதமர் மன்மோகனை விஜயாகாந்த் சந்தித்தபோது புதிய கூட்டணி என்ற செய்தி விறுவிறுப்பாக  வலம் வந்தது. தமிழக மீனவர் பிரச்சினைக்காகவே பிரதமரை சந்தித்ததாக  விஜயகாந்த் கூறினார். பிரதமர் பதவியிலிருந்து  வெளியேறுவதற்காக நாட்கனை எண்ணிக்கொண்டிருக்கும் மன்மோகனுடன்  தமிழக மீனவர் பிரச்சினை குறித்து எடுத்துரைத்தேன் என்றார். புதிய பிரதமரை சந்தித்து இக்கோரிக்கையை விடுத்திருந்தால் ஏற்றுக்கொள்ளலாம்.  பத்து வருடங்களாக பிரதமராக இருக்கும்    மன்மோகனுக்கு தமிழக மீனவர்களின்  பிரச்சினை பற்றி விஜயகாந்த் சொல்லித் தான் தெரியவேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. 
தமிழக சட்டசபை உறுப்பனர்களுடன் டில்லியில்  பிரதமரை சந்தித்த விஜயகாந்த் சோனியா,ராகுல் ஆகியோரையும் சந்திக்க திட்டமிட்டிருந்தார். அதேவேளை பாரதீய ஜனதாக்கட்சியுடனும் அவரது நம்பிக்கைக்குரியவர்கள் தொடர்பு வைத்திருந்தனர். இதையறிந்த காங்கிரஸ் கதவை இழுத்து மூடி  சந்திப்பைத் தடுத்தது. பெரும் எடுப்புடன் டில்லிக்குச் சென்ற விஜயகாந்தின் படை வெறும் கையுடன் சென்னைக்குத் திரும்பியது.





இந்திய அரசியல் வரலாற்றில் கூட்டணிக்காக மற்றைய தலைவர்களை  அலையவைத்த அரசியல் தலைவராக விளங்குகிறார் விஜயகாந்த்.  காலநிலை மாறுவதுபோல விஜயகாந்தின் அரசியல் நிலையும் அடிக்கடி மாறியது. விஜயகாந்த் என்ன முடிவு எடுப்பார் என்று தெரியாது பாரதீய ஜனதாக்கட்சி, திராவிட முன்னேற்றக்கழகம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தடுமாறின.
தேசியக்கட்சிகளும், மாநிலக்கட்சி களும் தன் பின்னால் அலைவதை வெகுவாக ரசித்த விஜயகாந்த், தனது மதிப்பு உயருவதாக எண்ணி போக்குக் காட்டினார். விஜயகாந்தின் நடவடிக்கையினால்  காட்டமடைந்த திராவிட முன்னேற்றக்கழகம் விஜயகாந்தின் வரவை எதிர்பார்க்காது தொகுதிப் பங்கீட்டை முடித்தது.

ஜெயலலிதாவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதே தனது கொள்கை என்று அறிந்த விஜயகாந்த், வேறு வழியின்றி பாரதீய ஜனதாக்கட்சியுடன் கூட்டணி என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதிக தொகுதிகள் கூட்டணிக்குத் தலைமைத் தாங்குவது மைத்துனர் சுதீஷிக்கு ராஜ்யசபா எம்.பி.பதவி, தேர்தல் செலவுக்குப் பணம் இவையே விஜயகாந்தின் மிக முக்கியமான கோரிக்கைகள்.
விஜயகாந்த், வைகோ, டாக்டர் ராமதாஸ் ஆகிய மூவரும் பாரதீய ஜனதாக் கட்சியுடன் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளனர். யாருடன் கூட்டணி என்று தெரியாமலே தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்தார் ராமதாஸ். அவர் அறிவித்த தொகுதிகளில் சில தமக்கு வேண்டும் என்று  விஜயகாந்தும், வைகோவும் கூறுகின்றனர். தமக்கு வெற்றி வாய்ப்புக்குச் சாதகமான தொகுதிகளைப் .பிடித்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டப்பட்டுகின்றனர். கூட்டணி தர்மத்தை மீறி வேட்பாளர்களை அறிவித்த ராமதாஸ் கொஞ்சம் இறங்கி வர சம்மதித்துள்ளார். தனது மகன் அன்புமணிக்கு  ராஜ்யசபா எம்..பி. வேண்டும் என்பதே ராமதாஸின் முக்கியமான நிபந்தனை.
ராமதாஸும், விஜயகாந்தும் கூட்டணி யில் இருந்தாலும் இருவரும் இணைந்து மேடையேறமாட்டார்கள். ராமதாஸின் வேட்பாளருக்கு ஆதரவாக விஜயகாந்தும், விஜயகாந்தின் வேட்பாளருக்கு ஆதரவாக ராமதாஸஸும் .பிரசாரம் செய்யமாட்டார்கள். இரண்டு கட்சிகளின் வெற்றி வாய்ப்புக்கு இது பாதகமாக அமையலாம். ராமதாஸின்  கட்சி முன்நிறுத்திய வேட்பாளருக்கு விஜயகாந்தின் ஆதரவாளர்கள் வாக்களிப்பார்கள் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. விஜயகாந்தின் வேட்பாளருக்கும் இதே நிலைதான் ஏற்படும்.
பாரதீய ஜனதாக் கூட்டணிக்கு வைகோ என்ற .பிரசாரப் பீரங்கி கிடைத்துள்ளார். அவருடைய பேச்சைக் கேட்பதற்கு மக்கள் அதிகளவில் கூடுவார்கள். இந்தக் கூட்டணி யில் .பிரதம பேச்சாளராக வைகோ உள்ளார். மக்கள் மனதைக் கவரும் பேச்சாளர் வேறு  எவரும் இக்கூட்டணியில் இல்லை. வைகோவை வீழ்த்த வேண்டும்  என திராவிட முன்னேற்றக்கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் கங்கணம் கட்டியுள்ளன.இதனால் வைகோ தனது தொகுதியிலேயே அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

தேர்தல்  பற்றிய  அறிவிப்பு வெளியான .பின்னர் தலைவர்களும் தொண்டர்களும் மிகுந்த உற்சாகத்துடன் களமிறங்குவார்கள்.  நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியான .பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் உற்சாகமிழந்து விட்டனர். திராவிட முன்னேற்றக் கழகத்தை மலைபோல் நம்பயிருந்து காங்கிரஸ், காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று  திராவிட முன்னேற்றக்கழகம்  தீர்மானம் நிறைவேற்றினாலும் இறுதி நேரத்தில் கூட்டணி சேரலாம் என்ற நப்பாசையில் காலம் கடத்தியது  காங்கிரஸ்.கருணாநிதியின் பிடியில் இருந்த திராவிட முன்னேற்றக்கழகம் முற்றுமுழுதாக ஸ்டாலினின் வசம் வீழந்துள்ளது. கழகத்தினுள் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் அனைத்துக்கும் முடிவு காணவேண்டும் என உறுதியுடன்  செயற்படுகிறார் ஸ்டாலின். அடிக்கடி தொல்லை கொடுத்து வந்த அழகிரி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார். அழகிரியின் ஆசிர்வாதத்துடன் கலகம் செய்தவர்களும் அடக்கப்பட்டுவிட்டனர். கழகத்துக்கு உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் வரும் பிரச்சினைகளை  எதிர்கொள்ளத் தயாராகி விட்டார் ஸ்டாலின்

 
 திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு இல்லாது தேர்தலைச் சந்திப்போம் என்று வீரவசனம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அடங்கி ஒடுங்கிவிட்டனர்.  திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்வதற்கு காங்கிரஸ் கட்சி எடுத்த முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போயின. காங்கிரஸுடன் கூட்டணி இல்லை  என்பதில் ஸ்டாலின் உறுதியாக உள்ளார்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்பார்ப்பு எல்லாவற்யும் காங்கிரஸ் கட்சி தீர்த்து வைக்கவில்லை என்று ஸ்டாலின் தெளிவுபடக் கூறிவிட்டார். 2ஜி ஊழல் விவகாரம் சி.பி.ஐயின் சோதனை, நோய் வாய்பட்டிருக்கும்  தயாளு அம்மையாரை விசாரிக்க  வீட்டை நீதிமன்றமாக மாற்றியது. மீனவர் பிரச்சினை  இலங்கைப் பிரச்சினை என ஸ்டாலின் பட்டியலிட்ட குற்றச்சாட்டுகளுக்குக் காங்கிரஸ் தலைவர்களினால் பதிலளிக்க முடியவில்லை.

கூட்டணி இல்லாது தேர்தலில் போட்டியிட்டால் தோல்வி நிச்சயம் என்பது தமிழக காங்கிரஸ்  தலைவர்களுக்கு நன்கு  தெரியும் ஆகையினால் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை  என அறிவித்துள்ளனர்.  நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது ராஜ்ய சபா  எம்.பியான ஜி.கே.வாசன் தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.  காங்கிரஸ் கட்சி பலவீன மாக இருக்கும் நிலையில்  வாசன் தகப்பனின் கட்சியைத்தூசு தட்டி புனரமைப்புச் செய்வார் என அடிக்கடி  செய்திகள் வெளியானபோது  மறுத்து வந்தார் வாசன். இப்படி ஒரு நிலை ஏற்படும் எனத் தெரிந்திருந்தால்  தகப்பனின் கட்சியைப் பலப்படுத்தி இருக்கலாம் என இப்போது கருதுகிறார்.
சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், ஞான தேசிகன், தங்கபாலு , இளங்கோவன்  ஆகிய தமிழகத் தலைவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளனர். கடந்த 10 வருடங்களாக அமைச்சர்களாகவும், எம்.பியாகவும் பவனி வந்தவர்களுக்கு  தோல்விப்பயம்  ஏற்பட்டுள்ளது. தமது தொகுதியை உரியவகையில் கவனித் திருந்தால் பயமின்றிக் களமிறங்கி இருக்கலாம்  தேர்தல் காலத்தில் மட்டும் தொகுதியை எட்டிப்பார்க்கும்  தலைவர்கள் தாமாகவே ஒதுங்கிவிட்டனர்.

திராவிட முன்னேற்றக்கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் முதன் முதலாக அதிக தொகுதிகளில் நேரடியாக  போட்டியிடுகின்றன. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை  நிறுத்தியுள்ளது. கூட்டணிக் கட்சிகளின் துணை இன்றி 40தொகுதி களிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் களமிறங்குவது இதுவே முதல்முறை. திராவிட முன்னேற்றக்கழகம் ஐந்து தொகுதிகளை கூட்டணிக்கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்து விட்டு 35 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  இந்த 35 தொகுதிகளில்  இரண்டு  கட்சி களும்  நேரடியாக மோதுகின்றன.

தமிழகத்தில் அதிகளவு வாக்குவங்கி இல்லாத  பாரதீய ஜனதாக்கட்சியுடன் விஜயகாந்த் இணைந்துள்ளார். இந்தக் கூட்டணியின் வாக்குவங்கி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும்,அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்துக்கும்  சவால் விடக்கூடியளவு பலமானதல்ல. இந்த வாக்குவங்கியின் தரவுகளின் அடிப்படையிலேதான் ஸ்டாலினும், ஜெயலலிதாவும் தமது பலத்தைக் காட்ட களமிறங்கியுள்ளனர்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில்   வெற்றி தோல்விதான் 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டசபைத் தேர் தலைத் தீர்மானிக்கும்  சக்தியாக இருக்கும். ஸ்டாலினினும், ஜெயலலிதாவும் இதை உணர்ந்துள்ளனர் போல் தெரிகிறது. கூட்டணி இல்லாது தமது பலத்தைக் காட்ட வேண்டிய நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் உள்ளன.

காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலுக்கு முகங்கொடுக்க அஞ்சுகின்றனர். தேர்தலில் போட்டியிடாது பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.இந்நிலையில் பிரபலமான காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராகவும், ஊழல் வேட்பாளர்களுக்குப் போட்டியாகவும் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.  காங்கிரஸ் கட்சிக்கு  சகல பக்கங்களிலிருந்தும் அடிவிழுகிறது. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டபொழுதே அதன் தோல்வி உறுதி செய்யப்பட்டுவிட்டதாக அதன் தலைவர்கள் சிலர் நம்புகிறார்கள்.
தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சுகிறார்கள். இது வரை காலமும் பதவியில் வசதியும், சுகமும் அனுபவித்த காங்கிரஸ் தலைவர்கள் இக் கட்டான  இந்நிலையில் கட்சியை கைவிட முயற்சிப்பதை காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை. தேர்தல் நடைபெறும் முன்பே தாம் தோற்று விட்டதாக  காங்கிரஸ்  தலைவர்கள்  நம்புகிறார்கள்.

வர்மா 
சுடர் ஒளி 19/03/14

No comments: